நிலத்தை மீட்க உயிரையும் கொடுப்போம்’


எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் என்றும், நில மீட்புக்கான போராட்டத்தில் உயிரை விட தயாராக உள்ளதாகவும் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மல்லாகம், கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.mankala....
அத்துடன், தங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம் என்றும், தமது சொந்த நிலங்களை மட்டும் கொடுத்தால் அதுவே போதுமானது என்றும் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று (சனிக்கிழமை) கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடிய போதே, மக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து குறிப்பிட்ட மக்கள், தங்கள் நிலங்களை இனியும் விட மறுத்தால் நாடாளுமன்றம் முன்பாகவும் வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது முகாம்களில் வாழும் மக்கள் வெளிவிவகார அமைச்சரிடம் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘எங்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்கிறார்கள். எங்களுடைய கடலில் படையினர் மீன்பிடிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அன்றாடம் உணவுக்காக பழைய இரும்புகளைப் பொறுக்கி கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அரசின் எந்த உதவிகளும் வேண்டாம். சொந்த நிலத்தில் எங்களை மீள் குடியேற்றுங்கள். அதில் குடிசைகளை போட்டு நின்மதியாக வாழ்வோம்.
ஒரு காலத்தில் இலங்கையின் கடலுணவு மொத்த தேசிய உற்பத்தியில் பெரும் பங்கை மயிலிட்டி மக்கள் பெற்றுக் கொடுத்திருந்தனர். இன்று எமது கடற்றொழில் வளங்களை இராணுவம் ஆக்கிரமித்து நிற்க நாங்கள் சிறிய குடிசைக்குள் அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.mankala
எங்களுடைய நிலத்தில் படையினர் விவசாயம் செய்கிறார்கள். எங்களுடைய கடலில் படையினர் மீன் பிடிக்கிறார்கள். 6 மாதங்கள் தாருங்கள். உங்களுடைய சகல இடங்களையும் விடுகிறோம் என கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி எம்மிடம் நேரில் தெரிவித்தார். ஆனால் அந்தக் கெடு முடிந்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
இனியும் எங்களால் பொறுக்க முடியாது. எங்கள் நிலங்களை விடுவிக்காவிட்டால் நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்துவோம். வேறு வழியில் தொடர் போராட்டங்களையும் முன்னெடுப்போம். எங்கள் நிலங்களை மீட்கும் போராட்டத்தில் நாங்கள் சாகவும் தயார்’ எனவும் உணர்சிவசப்பட்டு அந்த மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீரவிடம் தெரிவித்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila