நல்லூரா! உன் தேருக்கு வரமாட்டேன் இது என் அடையாளப் பகிஷ்கரிப்பு


தேரேறி வருகின்ற நல்லூர் சண்முகப் பெருமானின் திருவடிகளுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கம்.
இன்று தேர்த்திருவிழா. பல இலட்சம் அடியவர்கள் அதிகாலை 3மணிக்கு எழுந்து கிணற்று தண்ணீரில் நீராடி உன் இராசதானிக்கு ஓட்டமும் நடையுமாக வந்து சேர்வர். இந்த அற்புதக் காட்சியைக் காண்பதற்கு நீ தந்த இரு கண்கள்  போதாது,

யார் எதைச் சொன்னாலும் அதனைச் செவி மடுப்பதில் பிடிவாதத்தனம் காட்டக்கூடிய நம் யாழ் ப்பாணத்தாரை நீ எப்படித்தான் வளைத்து வசமாக்கினாயோ யாமறியோம். 

உன் தேர்த்திருவிழா என்றால் பின்னிரவுப் பொழுதிலேயே கிணற்றடிச் சத்தம் குறைந்தது ஒரு இலட்சம் வீடுகளில் கேட்கும்.

எங்கும் இப்படியொரு அதிசயம் நடக்கவும் முடியாது. நடத்தவும் முடியாது. ஆனால் நீ நடத்திக் காட்டுகிறாய். உன் வாலாயம்தான் என்னவோ! யான் அறியேன்.

ஆடி அசைந்து ஆறுமுகப் பெருமானாய் வருகின்ற உன் அற்புதக் காட்சியை ஒருக்கால் கண்டு விட வேண்டும் என்பதில் எத்தனை ஆர்வம் நம் தமிழ் மக்களுக்கு.

 ஆனால் நான் மட்டும் உன்னுடன் எதிர்ப்பு. உன் தேருக்கு வராமல் பகிஷ்கரிப்பு செய்வதென முடிபு.
அடிக்கடி உன்னிடம் வருவதாலோ என்னவோ உனக்கு எங்கள் பற்றிய அக்கறைக் குறைவு இருப்பதை உணர முடிகிறது.

ஆகையால் இந்த ஆண்டு உன் தேருக்கு மட்டும் வருவதில்லை என்ற என அடையாள பகிஷ்கரிப்பு ஆரம்பமாகிறது.

கோரிக்கை என்னவென்று நீ கேட்காவிட்டாலும் உலகு முழுவதிலும் இருக்கக் கூடிய உன் இலட்சோப இலட்சம் அடியார்கள் கேட்பார்கள். 

அதற்காகக் கூறுகிறேன் நீ வேல் வைத்திருப்ப தால் எங்களுக்கு என்ன இலாபம்.
உன் எதிரிக்கு வேல் எறிந்து வீழ்த்தினாய். அதைவிட வேலை விட்டெறிந்த வரலாறு ஏதும் உண்டா? 
ஒன்று மட்டும் எனக்குப் புரிகிறது உனக்கு கோபம் வந்தால்தான் அதிசயம் செய்வாய்; ஆச்சரியம் புரிவாய்; வேலைத் தூக்கியொறிந்து வினை களைவாய்.
அதிலும் உன் பக்தனாக இருப்பதைவிட உன் எதிரிக்கே நீ நன்மை செய்துள்ளாய்.

போருக்கு முன்னதாக சூரனுக்கு உன் திருப்பெரு வடிவம் காட்டினாய். இப்பேறு யாருக்குக் கிடைக்கும்.
மாம்பழம் கிடைக்காததால்தான் நீ குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக மாற்றினாய். ஔவை தமிழ் படைக்க வழி சமைத்தாய். 

ஆகையால், நல்லூர் முருகா! இன்றிலிருந்து உன்னுடன் எதிர்ப்புக் காட்ட யாம் தயாராகிறோம்.
தமிழ் மக்களின் உரிமையை நீ பெற்றுத் தராதா  வரை உன்னோடு எமக்கென்ன கதை.

இங்கெல்லாம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் நம் அரசியல் தலைமைகள் பேசுகின்றன. நாளை யாழ்ப்பாணம் வரும் ஐ.நா பொதுச் செயலாளருடன் சந்தித்துப் பேச்சு நடத்தப் பலர் தயாராகின்றனர்.

நான் சொல்கிறேன் இவர்களோடு பேசுவதெல்லாம் வீண். இவர்களுடன் பேசுவது வெற்றி தரும் என்றால் அந்த வெற்றி எப்பவோ கிடைத்திருக்க வேண்டும்.

ஆகையால், நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது உன்னுடன். காலம் வரையறுத்து இதற்குள் நீ எங்கள் உரிமையை தா என்று உறுதி பட உன்னிடம் கேட்பதே ஒரேவழி.

ஆகையால் தேரேறி வருகின்ற நல்லூர் சண்முகப் பெருமானே! தமிழ் மக்களைத் தாங்கிக் கொள். உரிமையைப் பெற்றுத்தா. எங்களை ஏமாற்றுபவர்களை உன் வேலால் அடித்து வீழ்த்து. அதுவரை என் அடையாளப் பகிஷ்கரிப்பு உன்னோடு நடக்கும். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila