போருக்குப் பின்னர் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யப்பட்ட பலரும் இன்று நோயாளிகளாகவும் ஆரோக்கியம் அற்றவர்களாகவும் உள்ளனர் என்ற செய்தி இந்த நாட்டில் தமிழினத்துக்கு நடந்த மிகமோசமான கொடூரங்களில் ஒன்றாகியுள்ளது.
இதேவேளை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 105 பேர் இதுவரை உயிரிழந்து விட்டனர் என்ற செய்தி பேரதிர்ச்சிக்குரியது.
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதாகக் கூறி உலகை நம்ப வைத்து நாடகமாடி, புனர்வாழ்வு என்று மறு உலகிற்கு அனுப்புவது என்ற உண்மையை உலகம் உணராமல் விட்டது தான் மிகப்பெரும் அபத்தம்.
வன்னியில் நடந்த தமிழின அழிப்புக்குப் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்து அவர்களை மீளவும் வழமையான வாழ்வுக்கு கொண்டு வருவதென்ற பேரில் எங்கள் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நடந்த அநியாயம் உலகில் எந்த நாட்டில் நடந்திருந்தாலும் அதனை வல்லரசுகளும் ஐ.நா சபை உள்ளிட்ட பொது அமைப்புகள் தட்டிக்கேட்டிருக்கும்.
ஆனால் இலங்கையில் நடந்தமையால், அது ஆட்சி மாற்றத்துடன் அடங்கிப்போயிற்று.
நல்லாட்சி வந்து விட்டது என்பதற்காக முன்னைய ஆட்சியில் நடந்த பேரழிவுகளை, அநியாயங்களை, கொடுமைகளை தட்டிக்கேட்காமல் விடுவதென்பது எந்த வகையில் நியாயமானது என்பதுதான் புரியாமல் உள்ளது.
முன்னைய ஆட்சியில் தமிழினத்துக்கு நடந்த மிகமோசமான கொடுமைத்தனங்களை தட்டிக் கேட்க வேண்டும் என்பதில் எங்கள் தமிழ் அரசியல் தலைமைகள் விட்ட மகா தவறுகள் தான் இன்று வரை தமிழினத்தின் இழப்பிற்கு எதுவும் கிடையாது என்ற நிலைமையைத் தோற்றுவித்தது.
நல்லாட்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு. அதற்காக முன்னைய ஆட்சியினர் எங்கள் தமிழினத்தை துவம்சம் செய்து இன அழிப்புக்கு உட்படுத்தியதை இந்த உலகம் விசாரித்தாகவேண்டும் என்று தமிழ் அரசியல் தலைமை கோம் போட்டிருந்தால், நிச்சயம் எங்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டிருக்கும்.
ஆனால் நாங்களோ நல்லாட்சியோடு சேர்ந்து எங்களுக்கு நாசம் செய்த ஆட்சியையும் காப்பாற் றுகிறோம்.
எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறந்து அரசாங்கத்துடன் இணங்கிப்போவது; விட்டுக்கொடுத்து தருகின்றதைப் பெறுவது; தராவிட்டால் காலில் விழுந்தேனும் கெஞ்சுவது; இவைதான் இல்லை என்றால் தருகின்ற பதவிகளை பெற்றுக் கொண்டு அதற்குப் பிரதியுபகாரமாக பேசாமல் இருப்பது என்று நினைத்தால் எல்லாம் அந்தோகதி என்றாகி விடும்.
ஆகையால் இலங்கை அரசால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நிலை, அவர்களின் ஆரோக்கியம் தொடர்பில் சர்வதேச மருத்துவர்களின் உதவியுடன் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
இப்பரிசோதனையை நடத்துவதன் மூலம் எங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியும் என்பதுடன் புனர்வாழ்வு என்ற பெயரில் மறு உலகத்துக்கு அனுப்புவதற்காக நடந்த நாசங்களையும் கண்டறிய முடியும் என்பதால்,
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் மருத்துவப் பரிசோதனைக்காக பொது அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும்.