நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவைகள் வித்தியாசமானவை. நினைத்து நினைத்துச் சிரிக்க வைப்பவை.
செந்திலுடனான ஒரு வாழைப்பழத்துக்கான சண்டை முதல் கரகாட்டக்காரன் படத்தில் சொர்ப்பன சுந்தரி வைத்திருந்த கார் வரையான நகைச் சுவைகள் நிறைந்த அர்த்தத்தோடு எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடியான நகைச்சுவைகள்.
இதில் அரசியல்வாதி அஞ்சாத சிங்கன் என தன்னை அறிமுகப்படுத்தும் கவுண்டமணி ஒரு மரக் காலைக்குச் சென்று தன்னைப் பிரபல்யமானவனாகக் காட்டுவதற்காக அந்த மேசையில் இருந்த தொலைபேசியை எடுத்து ஓர் அமைச்சருடன் உரையாடுவது போல பேசிக் கொள்கிறார்.
அரசியல்வாதி அஞ்சாத சிங்கனுக்கு அமைச்சர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு என்பதைக் காட்டு வதற்காக அப்படி ஒரு திட்டம்.
கவுண்டமணி கதைத்து முடித்த பின்னர் அந்த மரக்காலையின் முகாமையாளர் ரெலிபோன் வயரை எடுத்துக் காட்டி வயர் அறுந்து ஒரு கிழமையாகிறது என்கிறார்.
எதுவும் சொல்ல முடியாத கவுண்டமணி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறார்.
இங்குதான் அரசியல்வாதிகளின் திருகுதாளத்தை கவுண்டமணி மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவார் .
அது சரி, அரசியல்வாதி அஞ்சாத சிங்கன் பற்றி இப்போது எதற்கு என்று நீங்கள் கேட்டால் எல்லாம் எங்கள்அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கருத்தால் எழுந்ததுதான்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு நல்ல மனிதர். தமிழ் மக்களின் விவகாரத்தில் நியாயபூர்வமாக நடந்தவர் - நடப்பவர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் போக்கில் திருப்தி இல்லாததால் மகிந்த ராஜபக்சவை விட்டு வெளியேறியவர்களில் முதலாமவர் என்று கூறக்கூடியவர்.
அவரின் நேர்மையான நியாயமான கருத்துக்களால் தமிழ் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர்.
எனினும் மாவீரர் தினத்துக்கு முன்னதாக மாவீரர் தின நிகழ்வில் எத்தனை பேர் வருகிறார்கள் பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.
அமைச்சர் ராஜிதவின் மேற்போந்த கூற்றை வாசித்தவர்கள் அமைச்சர் ராஜிதவா இப்படிக் கூறியவர்; இருக்க முடியாது என்று நினைத்தனர்.
எனினும் அவர் கூறியது உண்மை என்ற போது அப்படியானால் அதற்குக் காரணம் இருக்கும் என்று கருதினர்.
அந்தக் காரணத்தை இரண்டு வகையாக எடுத்துக் கொள்ளலாம். அதிலொன்று மாவீரர் தின நிகழ்வில் அதிகளவில் தமிழ் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று விரும்பி அமைச்சர் ராஜித, மாவீரர் நிகழ்வில் எத்தனை பேர் வருகிறார்கள் பார்க்கலாம் என்று கூறுவதன் மூலம் அதிகமானவர்களை அந்த நிகழ்வில் பங்கேற்கச் செய்யலாம் என்று கருதியிருக்கலாம். இது ஒரு காரணம்.
மற்றைய காரணம். மாவீரர் தின நிகழ்வில் எத்தனை பேர் வருகிறார்கள் பார்க்கலாம் என்று கூறுவதன் ஊடாக மாவீரர் தின நிகழ்வில் பலர் பங்கு பற்ற மாட்டார்கள்; எனவே அது பற்றி சிங்கள மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று கூறுவதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம்.
அதாவது தென்பகுதிப் பேரினவாதிகளின் எதிர்ப் பிரசாரங்களில் இருந்து சிங்கள மக்களை விடுப்பதற்காக இப்படியொரு கருத்தை அவர் பிரயோகித்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.
எதுவாயினும் இதை அரசியல்வாதி அஞ்சாத சிங்கனின் மொழியில் கூறுவதாயின் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பதே சாலப் பொருத்துடையது.