இளைஞர் கொள்கைகள் செயற்திட்டம் தொடர்பில் பங்குதாரர்கள் உடனான ஆலோசனைக்கூட்டம் இன்று திங்கட்கிழமை முற்பகல் யாழ். கிறீன் கிறாஸ் தனியார்விடுதியில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடபகுதி இளைஞர், யுவதிகள் ஒரு காலத்தில் கல்வியில் மேம்பட்டவர்களாக, ஒழுக்கசீலர்களாக உலகெங்கும் போற்றப்படுகின்ற அல்லது அடையாளப்படுத்தப்பட்ட, ஒருபண்பட்ட இனம் அல்லது சமூகம் என்ற பெருமையைக் கொண்டிருந்தது. இப்பொழுதும் பிறநாடுகளில் பெரும்பான்மையான எமது மக்கள் நல்ல பெயர் எடுத்துக் கொண்டுதான்இருக்கின்றார்கள்.
எனினும், இந்த நாட்டில் ஏற்பட்ட நீண்டகால கொடிய யுத்தம்எமது இங்கிருக்கும் அனைத்து இருப்புக்கள், கல்வி நடவடிக்கைகள், பொருளாதாரம்,பண்பாடு, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பாதித்து விட்டது. தற்போது எமதுஅனைத்தையும் இழந்த நிலையில் ஏதிலிகளாக இரந்துண்ணும் நிலைக்கு நாம்தள்ளப்பட்டிருக்கின்றோம்.
இன்றைய இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கின்றார்கள். வெளிநாட்டுப் பணங்களை, பணத்தின் அருமை தெரியாமல்ஊதாரிச் செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். கல்வி மீதும் ஒழுக்கம் மீதும்பண்பட்ட பாரம்பரியம் மீதும் அவர்கள் சிந்தனைகள் செல்வதாகத் தெரியவில்லை.
நேற்றைய தினம் கூடி பொலிசாருடன் இன்றைய சட்ட ஒழுங்கு நிலை பற்றி வெகுவாகஆராய்ந்தோம். கல்லூரி மாணவ மாணவியர் குற்றங்களில் ஈடுபடுவதைப் பொலிசார்சுட்டிக் காட்டினர்.எமக்கு என்ன நடந்துள்ளது என்று இத்தருணத்தில் ஆராய்வோம்.
அந்நியர் ஆட்சிக் காலத்தில் பல நூறு வருடங்கள் சகோதர இனங்களாக வாழ்ந்து வந்தசிங்கள, தமிழ் சமூகங்கள் இலங்கைக்கான சுதந்திரம் கிடைப்பதற்கும் ஆங்கிலேயர்ஆட்சியை இல்லாது ஒழிப்பதற்கும் சேர்ந்து போர்க்கொடியேந்தினர்.
ஆனால், இலங்கைசுதந்திரம் பெற்று ஒரு சொற்ப காலத்தினுள்ளேயே இனங்களுக்கிடையே கருத்துவேறுபாடுகளும் மோதல்களும் ஏற்படத் தொடங்கின.
தாம் எண்ணிக்கையில்கூடியிருந்ததால் எண்ணிக்கையில் குறைந்தவர்களைக் குட்டி வைக்க வேண்டும் என்றஎண்ணம் கொண்டு பல மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் பங்குபற்றத் தலைப்பட்டனர் .
குறிப்பிட்ட பெரும்பான்மையினர் கடையெரிப்புக்கள், சொத்துக்கள் அழிப்பு,உயிர்ச்சேதம் என 1958ல் இலங்கையில் தோன்றிய இனக்கலவரம் காலத்திற்குக் காலம்1961, 1974, 1977, 1983 எனப் பல்வேறு கால இடைவெளிகளில் தமிழர்களின் சொத்தைச்சூறையாடுவதும் அவர்களின் இருப்பிடங்களை ஆக்கிரமித்தல், அழித்தொழித்தல் போன்றதொடர் நெருக்கடிகளின் விளைவே தமிழ் இளைஞர்களை, இள இரத்தங்களை வன்முறைச்செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டின.
அன்றைய அரசியற் தலைமைகள் இவ்வாறான தருணங்களில் தமது ஆட்சியதிகாரங்களைப்பயன்படுத்தி அன்றைய பதற்ற நிலைகளைத் தணித்து இனங்களுக்கிடையே ஒற்றுமையைஉண்டாக்குவதற்கும், புரிந்துணர்வுடன் வாழ்வதற்கும் ஏற்ற முயற்சிகளில்ஈடுபட்டிருந்தால் இந்த அழகிய இலங்கைத் தீவினுள் அனைத்து இனங்களும்ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுடனும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கின்றதன்மையுடனும் சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்தன.
அன்றையஅரசியற் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்கும், தமது பாராளுமன்ற இருப்பைத்தக்கவைத்துக் கொள்வதற்கும் அப்பாவிச் சிங்கள மக்களைப் பிழையான வழிகளில்நெறிப்படுத்தி அவர்களிடையே பொய்ப்பிரசாரங்களையும் மற்றும் இனவாதத்தைத்தூண்டக்கூடிய பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டார்கள்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் கண்டிக்கான பாத யாத்திரையைத் தொடர்ந்துபண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. பின்னர் டட்லி-செல்வா ஒப்பந்தம்கைவிடப்பட்டது.
அன்று ஏதேச்சதிகாரமாகச் செயற்பட்ட அரசியற் தலைமைகள் சிறுபான்மைஇனத்தை இல்லாதொழிக்கவும், அவர்களின் இருப்பிடங்களை தமதாக்கிக் கொள்ளவும்மேற்கொண்ட முயற்சிகளின் பிரதிபலிப்பே இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ் சிங்களமக்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளது.
அது மட்டுமல்ல.... இன்னும்பல்லாயிரக்கணக்கானவர்கள் உடலுறுப்புக்களை இழந்தவர்களாகவும் நடைப்பிணங்களாகவும்வாழுகின்ற ஒரு துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வாழ்வாதாரங்களைத்தொலைத்துவிட்டு மற்றையோரின் தயவை எதிர்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்கள்.
இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையில் போரின் பாதிப்புக்கள் பல எதிர் நோக்கப்பட்டன.பாரிய யுத்த நிகழ்வுகளின் விளைவாக இங்குள்ள இளைஞர் யுவதிகள் பதற்றநிலைக்குள்ளானார்கள். அவர்கள் கல்வியின் பால் கவனம் செலுத்த முடியாமல்தத்தளித்தார்கள்.
அரச படைகளின் அட்டூழியங்களால் தமது வாழ்விடங்களில் வாழப்பயந்து பலர் உயிரைக் கையிற்பிடித்தபடி வெளிநாடுகளுக்கும், இலங்கையின் வேறுபாகங்களிற்கும் ஓடித்தப்பினர். ஏனையோர் பயந்து நடுங்கி வீட்டுக்குள்ளேயேமுடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. கல்வி பாதிக்கப்பட்டது.
உடல்நிலைபாதிக்கப்பட்டது. உள்ளம் பாதிக்கப்பட்டது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.கல்விமான்கள், சிறந்த ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அறிஞர்கள்எனக் கல்வியில் மேம்பட்ட அநேகர் மேலைத்தேய நாடுகளை நோக்கிப் புலம்பெயரத்தொடங்கினர்.
மிஞ்சி எஞ்சியிருந்தவர்களும் பல்வேறு குழப்பங்களின் மத்தியில்தமது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
போர் உக்கிரத்தின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் முழு நேரமாகத்தம்மைப் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொண்டதன் காரணமாக இளைஞர் யுவதிகளின்கல்விச் செயற்பாடுகள் சரிய ஆரம்பித்தன.
பாடசாலைகளில் முறையான கல்விபுகட்டப்படவில்லை. பிரத்தியேகக் கல்விக் கூடங்கள் வியாபார நிலையங்களாகமாற்றப்பட்டன. அறிவு விலை பேசப்பட்டது. இந்த நிலையில் அடிப்படைக்கல்வி வசதிகேள்விக்குறியாயிற்று.
இதற்கும் மேலாக பொழுதுபோக்குச் சாதனங்கள் தம் பங்கிற்குமாணவர்களை கல்விச் செயற்பாடுகளில் இருந்து குழப்பி பொழுது போக்கு அம்சங்களில்கூடிய நாட்டத்தை ஏற்படுத்தத் தொடங்கின.
இவற்றை விட இன்னோர் துர்ப்பாக்கிய நிலையும் எம் இளைய சமுதாயத்திற்குஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற எம்மவர்கள் தமதுஉறவினர்கள், சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோரைக் கண்டு அளவளாவிச் செல்வதற்குஇங்கு வருகின்ற போது தமக்கு அங்கு வேலைகள் குறைவாக இருக்கக்கூடிய காலங்களைத்தேர்ந்தெடுத்துத் தமது பிள்ளைகளின் பாடசாலை விடுமுறை மற்றும் இன்னோரன்னகடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விடுமுறைகளைப் பெற்றுக்கொண்டு இங்குவருகின்றார்கள்.
அவர்களின் வருகை அத்தியவசியமானதும்ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதும் தான். ஆனால், ஒரு விடயத்தை அவர்கள் மனதில்கொள்வதில்லை.
இங்கிருக்கக்கூடிய மாணவ மாணவியர்களுக்குத் தாம் செல்லுகின்றகாலம் விடுமுறையாகவுள்ளதா? தமது வருகை தமது உறவினர்களின் பிள்ளைகளின் கற்றல்நடவடிக்கைகளைப் பாதிக்குமா? என்பது பற்றிச் சிந்திப்பவர்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றனர்.
அவர்கள் வருங்காலத்தில் இளைஞர் யுவதிகளின் கல்விபாதிக்கப்படுகின்றது.அதற்கும் மேலாக அவர்கள் வரும் போது நவீன இலத்திரனியல் கைபேசிகள், மோட்டார்சைக்கிள்கள் என இளைஞர்களின் பொதுவான ஆவல்களை தீர்க்கக்கூடிய பொருட்களையும்இன்னும் மாணவியர்களுக்காக உடுபுடைவை, அழகு சாதனங்கள் எனப் பலவற்றையும்அள்ளிக்கொண்டு வருகின்றார்கள்.
தாய்தந்தையருக்கும் நிதியுதவிகள் கிடைக்கின்றன.ஆனால், இதன் தாற்பரியம் என்னவென்று ஆராய்ந்தோமானால் தாய்தந்தையர் தாம் உழைக்கவேண்டும், பிள்ளைகளைக் கற்பிக்க வேண்டும், அவர்களை நல்ல நிலைக்கு ஆளாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து சறுக்கி விடுகின்றார்கள்.
அனைத்தும்வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து கிடைக்கப்பெறும் என்ற நிலையில் வாழ்க்கையைஓட்டிச் செல்ல முனைந்துள்ளனர்.
எமது பிள்ளைகளும் சித்தப்பா மோட்டார் சைக்கிள்வாங்கித்தருவார், பெரியம்மா போன் வாங்கித்தருவா, அண்ணன் கணணி வாங்கித் தருவார்என மற்றவர்களின் கையை எதிர்பார்த்து இருக்கத் தலைப்படுகின்றனர்.கல்வி பற்றிய சிந்தனை, தமது எதிர்கால நிலைப்பாடுகள் பற்றிய சிந்தனைகள்அற்றவர்களாக ஊர்சுற்ற விளைகின்றனர்.
இவையனைத்தும் எமது இளைய சமுதாயத்தைஅண்மைக் காலமாகப் பாதித்து வருகின்றன. அவர்களை ஈடேற்றுவது எவ்வாறு என்றகேள்விக்குப் பதிலாகத் தான் இந்தச் செயலமர்வு நடைபெறுகின்றது என்றுநம்புகின்றேன்.
இளைஞர் யுவதிகளின் கொள்கையியற் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுஅதன் பால் இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்தவும், வழிகாட்டவும்முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும் முயற்சித்தல் இத்தருணத்தில்இன்றியமையாததாகியுள்ளது.
மாணவ மாணவியர் கல்விமீது ஆர்வம் காட்ட என்ன செய்ய வேண்டும், செயற்பாடுகள்மூலம் கல்வி கற்பித்தல் எவ்வாறு நன்மை பயக்கும், தொழில்நுட்ப முறைகள் எவ்வாறானநன்மைகளைத் தருவன, மாணவ மாணவியருக்கு இயைந்த கல்வியைப் புகட்டல்அதாவது, இவ்வாறானதான கல்வி அமைய வேண்டுமென்று மேலிருந்து மாணவ மாணவியர் மீதுதிணிக்காமல் அவர்களின் ஆர்வங்களை நடைமுறைப்படுத்தல் போன்ற பல விடயங்கள்உங்களால் ஆராயப்பட வேண்டும் என்றும் கருதுகின்றேன்.
அதேநேரத்தில், மாணவ மாணவியர்களின் கல்விச் செயற்பாடுகள் அவர்களின் எதிர்காலத்தொழில்முயற்சிகளை நோக்கியதாக அமைதல் மிகவும் அவசியம்.
எந்தவித நோக்கமும் இன்றிபல்கலைக்கழகங்களில் காணப்படக்கூடிய மிக இலகுவான கற்கைநெறிகளைத் தேர்ந்தெடுத்துஅவற்றில் சித்தி பெற்ற பின்னர் தொழில் தேடும் படலம் ஆரம்பிக்கின்ற போது தான்அவர்கள் பலர் தமது தவறை உணர்கின்றார்கள்.
அவர்கள் கற்ற பாடங்கள் உரியவேலைவாய்பைப் பெறத் தடையாகவுள்ளன.தற்போது தொழில்நுட்பக் கல்லூரிகள், உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள்தொழிற்தகைமைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய கற்கை நெறிகளை ஆரம்பித்து நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.
எனினும் அந் நிறுவனங்களில் கற்பதற்கு மாணவ மாணவியர்குறைவாகவே செல்கின்றார்கள். அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் -ஒன்று - அத் தொழில்நுட்ப நிறுவனங்களின் கற்கை நெறிகள் எதிர்காலதொழில்வாய்ப்புக்கள் பற்றிய பரந்த விளம்பரங்களை மேற்கொள்ளத் தவறியுள்ளன.
மக்களுக்குப் போதுமான புரிந்துணர்வு இன்னும் ஏற்படவில்லை.இரண்டாவது - மாணவர்கள் தம்மை வருத்தி கற்றல் நடவடிக்கைகளில் முழு நேரமாகஈடுபடுவதை விரும்பாததால் குறித்த கல்லூரிகளில் சேரப் பின்னிற்கின்றார்கள்.
மூன்றாவது - பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய தூர நோக்கின்றிவெளிநாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைப்பதற்கும் அதன் மூலமாகத் தாம் சொகுசுவாழ்க்கைகளை மேற்கொள்வதற்குமே தயாராகி இருப்பதால் மாணவ மாணவியரைத் தொழில்கருதிப் படிக்க வைக்க முன்வருகின்றார்கள்.
இல்லை..... விரல் விட்டுஎண்ணக்கூடியவர்கள் தான் மேற்படிப்புத் தொழில்களில் பாண்டித்தியம்பெறுகின்றார்கள். மருத்துவ கலாநிதிகள், பொறியிலாளர்கள், கணக்காளர்கள் போன்றோர்படிப்பில் சிறந்து விளங்கியவுடன் வெளிநாடுகளையே நாடுகின்றார்கள்.
நான்காவது தொழில்நுட்பக் கல்வியில் நவீன பொறிமுறைகளைச் சேர்த்துக் கொள்ளாதுஇருத்தல்.இவ்வாறு பல காரணங்களைக் கூறலாம்.
எனவே, இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் பற்றியகொள்கைத்திட்ட வரைவு ஒன்று தயாரிப்பதும் அதன் வழி உரியவர்களைநெறிப்படுத்துவதும் மாணவ மாணவியர்களுக்குப் படிப்பின் பால் ஊக்கத்தைஏற்படுத்துவதும் இக்காலகட்டத்தில் அவசியமாகின்றன.
மாணவ மாணவியரிடம் இலக்கியம்,கலை, விஞ்ஞானம், கணிதம், புவியியல், வரலாறு, ஆங்கிலம் போன்ற பாடநெறிகளில்கூடிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல. நல்லொழுக்கத்தை இளவயதில்இருந்தே கற்றுக் கொள்ளக்கூடிய விதத்தில் அவர்களை வழிப்படுத்தலும்அத்தியாவசியமாகின்றது.
இளைஞர் யுவதிகளின், மாணவ மாணவியரின் எதிர்காலம் சுபீட்சமுள்ளதாகவும்,நம்பிக்கையுடையதாகவும், பலம் பொருந்தியதாகவும் அமைய வேண்டும் எனவும்தெரிவித்தார்.