உயிருக்கு ஊசலாடும் தமிழினம்! காக்க மறுக்கும் தலைமைகள்

வாழ்விற்கும் சாவிற்கும் நடுவில் தமிழ் மக்களின் வாழ்வு சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றது. இது இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும், மலேசியாவிலும் என்று நாடுகள் தேசங்கள் கடந்து இந்த நிலை நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது.
ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் தான் மௌனத்திலும் மௌனமாகவே இருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை தான்.
இப்பொழுது தமிழ் விவசாயிகளுக்கு வேதனையான செய்தி யாதெனில் காவிரியில் இருந்து விவசாயத்திற்கான நீரினை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசும், அங்கிருக்கும் அமைப்புக்களும் தான்.
நீண்டகாலப் பிரச்சினையாக இழுபட்டுக் கொண்டிருக்கும் நதி நீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக மாநில அரசாங்கம் மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருப்பது, தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையற்றவர்களா இவர்கள் என்று விவசாயிகளிடத்திலும், தமிழக மக்களிடத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரி நதி நீரைத் திறந்துவிடுவதற்கு கர்நாடக அரசாங்கம் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பினும் தங்களுக்கான நீரினை வைத்துக் கொண்டு, ஏனையவற்றை தமிழக விவசாயிகளின் தேவைக்காக திறந்து விடுமாறு, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஆணித்தரமாக குறிப்பிட்டு இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது நெத்தியில் அடித்தால் அமைந்திருந்தது. நீயும் வாழ். மற்றவரையும் வாழ வை என்பதாகவே அது தனது தீர்ப்பில் குறிப்பிட்டும் இருக்கிறது. ஆனால், கர்நாடக அரசாங்கம் அதற்கு மாறாக செயற்பட்டாலும் வேறு வழியின்றி அணையைத் திறந்தும் விட்டது.
கூடவே கலவரத்தையும், அடாவடித்தனத்தையும் சேர்த்து. இந்த தருணத்தில் தங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரக்கோரியும், நதி நீரினை திறக்க முடியாது என்பதை மத்திய அரசாங்கத்திடம் முறையிட கர்நாடாக அரசு முயன்றது.
எனினும் உச்ச நீதிமன்றத்தை விட மத்திய அரசாங்கம் என்ன உயர்ந்ததா? என்னும் கேள்வி இப்பொழுது எழுப்பட்டிருக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்க்கையில் கர்நாடக அரசாங்கம் விளையாடிக்கொண்டிருக்கையில் தமிழக திராவிடக் கட்சிகள் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டிருக்கின்றது.
தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தடுத்து நிறுத்த கர்நாடக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுக்க, தமிழ் மக்களின் உரிமைகளை போராடி பெறவேண்டிய தமிழக அரசாங்கம் தூக்கத்தில் இருக்கிறது.
இதில் திமுக, அதிமுக என்று திராவிட கட்சிக்களுக்கிடையில் வித்தியாசம் அறவே இல்லை. இரண்டும் ஒன்று தான். மத்திய அரசாங்கத்தை கர்நாடக அரசாங்கம் இதுவரை பலமுறை இந்த விவகாரத்தில் தொடர்பு கொண்டு தண்ணீர் கொடுக்காமல் இருக்க முயல்கிறது.
ஆனால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் இந்த விவகாரத்தில் தங்களின் அதீத அக்கறையினை காட்டவில்லை என்பது தான் இப்பொழுது எழுந்துள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டு.
இவர்கள் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறையற்றவர்கள் என்று மற்றைய கட்சியினரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில், உண்ணாவிரத நாடகமாடிய கருணாநிதி ஈழத்தமிழ் மக்களின் வாழ்வு சிதைந்து போவதில் கணிசமான பங்காற்றியிருக்கிறார் சோனியா காந்தி அரசாங்கத்துடன் இணைந்திருந்து கொண்டு.
கருணாநிதியின் ஈழத் தமிழ் மக்களின் மீதான அக்கறை 1991ம் ஆண்டே வெளிப்பட்டது என்பது உலகறிந்த உண்மை.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசியத் தலைவராக அறிவித்த பொழுதே கருணாநிதியின் செயற்பாடுகள் பெரும் மாற்றத்தை காட்டியிருந்தது.
அன்றிலிருந்து அவர், அவ்வளவாக ஈழத் தமிழ் மக்கள் நலன்சார்ந்ததாக இருந்திருக்கவில்லை. அவரைப் போன்றவர் தான் அதிமுகவின் பெரும் புள்ளி ஜெயலலிதா.
இவருக்குப் புலிகள் என்றால் எட்டாப்பகை. பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியவர் தான் இவர்.
இலங்கைத் தமிழ் மக்கள் விடையத்திவ் வெறு வார்த்தைகளோடு எவ்வாறு இருந்தார்களோ அதைப் போன்றே அவர்களின் செயற்பாடுகளும் இருந்திருக்கின்றன.
இவர்கள் கடல்கடந்த ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் தான் அக்கறையற்றவர்கள் எனில், தங்களை சட்டசபைக்கு அனுப்பி வைத்த தமிழக மக்களின் வாழ்வுரிமைகளில் கூட அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர்.
ஒரு புறத்தில் சிங்கள இராணுவத்தினரால் கடலில் வைத்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மறுபுறத்தில் விவசாயிகள் கர்நாடக அரசாங்கத்தினால் நீர் திறக்கப்படாமல் வேதனையில் வாடுகின்றார்கள்.
ஏற்கனவே இயற்கையின் தண்டிப்பால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு விவசாயிகளின் நிலைவந்திருக்கிறது. அவற்றை இவர்கள் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்ட செல்வது என்பது ஆமை வேகத்தில் தான் இருக்கிறது.
தங்கள் அரசியலுக்காக, மாறி மாறி திமுக, அதிமுக அடுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.
இப்பொழுது அடிக்கடி தமிழ் மக்களாலும், இணைய வாசிகளாலும் முன்வைக்கபடும் வாதம் யாதெனில் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும். திராவிடக் கட்சிகளை ஆள விடுவதனால் வரும் விளைவு தான் இவை.
எப்பொழுது தமிழன் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கிறானோ அப்பொழுது தான் தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் என்னும் அந்த வாதம் உண்மையில் மெய்யாகத்தான் போய்க்கொண்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
காவிரி நீர் தமிழகத்திற்கு வருகிறதோ இல்லையோ இந்த திராவிடக் கட்சிகளின் ஏமாற்ற நாடகங்கள் நிச்சையமாக வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்.
தமிழ் மக்களின் வாழ்வில் அக்கறையீனத்தை வெளியிடும் இந்த தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் அவலவாழ்வில் ஆட்சி நடத்தியே தமது அரசியல் பொழப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன என்றும் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நாடுகள், தேசங்கள் என்று எங்கும் தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்தாலும், தமிழனும், தமிழும் இல்லாத நாடுகள் இல்லை என்று சொன்னாலும் தமிழர்களை ஆண்டு, தமிழ் மக்களுக்காக அரசியல் நடத்தும் கட்சிகளும், தமிழனுக்கான நாடும் இல்லாதவரை இந்த தொடர் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila