பெங்களூருவைச் சேர்ந்த பிரேமா (வயது 25)என்ற கன்னடப் பெண்ணுக்கும் தமிழகத்தின் வாணியம்பாடியைச் சேர்ந்த, மணமகனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
திருமணம் வாணியம்பாடியில் நாளை மணமகன் வீட்டில் நடைபெறவிருந்தது. ஆனால். தற்போது காவிரி பிரச்னை காரணமாக கர்நாடகாவில் வன்முறை வெடித்து விட, மணமகன் வீட்டுக்கு வாணியம்பாடி செல்ல வாகனங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
பிரேமாவின் உறவினர்கள் பல வாகன ஓட்டிகளிடம் பேசியும் யாரும் தமிழகத்துக்கு வர சம்மதிக்கவில்லை.
மணப் பெண் வீட்டார் பல வழிகளில் முயன்றும் வாகனங்கள் கிடைக்காத நிலையில், வேறு வழியில்லாமல் மணமகளை நடத்தியே தமிழக எல்லைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மணமகளின் உறவினர்கள் அவ்வப்போது கிடைத்த வாகனங்களில் அவரை ஏற்றியும் இறக்கியும் நடத்தியும் அழைத்து வந்துள்ளனர்.
அத்துடன் திருமணத்துக்கு வேண்டிய பொருட்களையும் உறவினர்கள் எடுத்து வர வேண்டியதும் இருந்தது. பொருட்களைத் தலையில் சுமந்து கொண்டும் குழந்தைக் குட்டிகளுடன் மணமகள் வீட்டார் பல மணி நேரம் நடந்தனர்.
வழியில் ஆங்காங்கே கலவரங்கள் நடந்து கொண்டிருந்ததால், மணமகள் பிரேமா மற்றும் உறவினர்கள் பயத்துடன்தான் நடந்து வந்தனர்.
ஒரு வழியாக தமிழக எல்லையான ஹோசூர் வந்தடைந்த பின்னரே நிம்மதி பெரு மூச்சு விட்டனர். தொடர்ந்து, ஹோசூரில் இருந்து பேருந்து ஒன்றை பிடித்து வாணியம்பாடிக்கு மணப் பெண் அழைத்து செல்லப்பட்டார்.
மணப்பெண் அலங்காரத்துடன் சென்ற பிரேமாவை பார்த்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் விசாரித்துள்ளார்.
அப்போதுதான் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. அந்த தொலைக்காட்சிக்கு பிரேமா அளித்துள்ள பேட்டியில் , ''திருமணத்துக்கு 600 அழைப்பிதழ்கள் அடித்திருந்தோம். இப்போது வெறும் 20 பேர்தான் வந்திருக்கின்றனர்.
ஹோசூருக்கே நாங்கள் வருவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டோம். இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
எங்களது சந்தோஷத்தை இழந்து விட்டோம். என்னால் இந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. வன்முறையை கையில் எடுப்பது நல் வழி கிடையாது.
நாமெல்லாம் இந்தியர்கள் இது இந்தியா'' என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார் ஆதங்கத்துடன்.
தமிழகத்தைச் சேர்ந்தவரை மணக்க பல கிலோ மீட்டர் தூரம் நடந்த பிரேமாவிற்கு உங்கள் வாழ்த்துகளும் சேரட்டும்!