வடமாகாணசபையினை புறந்தள்ளி யாழ்.அரச அதிபர் நா.வேதநாதன் இலங்கை இராணுவத்தின் முகவராக பணியாற்றுகின்றாராவென்ற கேள்வி மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது.அவ்வகையில் தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1,000 ஏக்கர் காணியை இராணுவத்தினர் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு அனுமதியளிக்குமாறு வடமாகாண காணி ஆணையாளரிடம் இராணுவத்தினர் கோரியுள்ளதாக அரச அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இராணுவத்தினர் வசம் தற்போது, சுமார் 4,000 ஏக்கர் காணிகள் உள்ள நிலையில், அவற்றில் 1,000 ஏக்கரை தொடர்ந்து வைத்திருக்கவிருப்பதாக இராணுவம் கோரியுள்ளது. அத்துடன், வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது என அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள ஆயிரத்து 500 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர முன்னர், மக்கள் அதிகளவில் வசித்த கீரிமலை, காங்கேசன்துறை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளிலுள்ள காணிகளை இராணுவம் விடுவிக்கவுள்ளது. முன்னதாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் காணிகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் யாழ்.அரச அதிபரது செயற்பாடுகள் தொடர்பினில் முதலமைச்சர் அண்மையினில் பகிரங்கமாக கருத்துக்களினை வெளியிட்டிருந்தார்.குறிப்பாக பாதுகாப்பு தரப்பினர் சார்பினில் நட்ட ஈடுகளை பெற்றுக்கொள்ள முகாம்களினிலிருந்த மக்களை நிர்ப்பந்தித்தாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளமை தெரிந்ததே.