‘எழுக தமிழ்’ எதிர்கொள்ள வேண்டியவையும், அடைவும்!


எழுக தமிழ்’ எனும் பெயரில் கவனயீர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை தயாராகி வருகின்றது. ‘பொங்கு தமிழ்’ எழுச்சி நிகழ்வுகள் தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவை. கிட்டத்தட்ட
அதனை முன்மாதிரியாகக் கொண்ட போராட்ட வடிவத்தினை மீளப்பிறப்பிக்க வேண்டும் என்கிற நோக்கம் ‘எழுக தமிழ்’ ஏற்பாட்டாளர்களிடமும் இருப்பதாகத் தெரிகின்றது. ‘எழுக தமிழ்’ என்ற பெயரின் ஊடாகவும், அதனை ஆரம்பத்திலேயே மீள்பிரதியீடு செய்ய முயன்றிருக்கின்றார்கள்.

‘எழுக தமிழ்’ கவனயீர்ப்புப் பேரணியின் ஆரம்பக் கட்டம் செப்டெம்பர் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கல்வியங்காடு, திருநெல்வேலி, கச்சேரி ஆகிய இடங்களிலிருந்து ஆரம்பிக்கும் பேரணிகள் முற்றவெளியில் சங்கமித்து, அங்கு பிரதான கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து கிரமமான கால இடைவெளியில் வடக்கு – கிழக்கு பூராகவும் எழுக தமிழ் கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக தெரிகின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பொங்கு தமிழுக்கு ஒப்பான கவனயீர்ப்பு- எழுச்சிப் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற பெரும் ஆர்வம் தொடர்ந்தும் இருக்கின்றது. அது, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியலில், சிக்கிக் கொண்டிருக்கின்ற சூனிய வெளிக்குள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முன்செல்வதற்குத் தேவையான உந்துதல்களை குறிப்பிட்டளவில் வழங்கும் என்கிற நம்பிக்கைகள் சார்ந்தவையாகும். தமது அரசியல் தொடர்பிலான விழிப்புணர்வும், அது தொடர்பிலான நீட்சியான உரையாடலுமே நம்பிக்கையீனங்களைக் கடந்து செல்வதற்கு அவசியமானவை. அந்த இடத்தினை அனைத்துத் தரப்புக்களையும் ஒன்றிணைக்கும் போராட்டங்கள் எடுத்துக் கொள்ளமுடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘எழுக தமிழ்’ கவனம் பெறுகின்றது.

‘பொங்கு தமிழ்’ நிகழ்வுகள் நடத்தப்பட்ட காலமும் அப்போதைய அரசியல் சூழ்நிலைகளும், தற்போது ‘எழுக தமிழ்’ நடத்தப்படவுள்ள காலமும் அரசியல் சூழ்நிலைகளும் வேறுவேறானவை. பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுகள், தமிழ்த் தேசிய அரசியலில் ஆயுதப் போராட்டம் வெற்றிகளை பதிவு செய்துகொண்டிருந்த போது, குறிப்பாக ‘வெற்றி வாதம்’ கோலொச்சிக் கொண்டிருந்த தருணத்தில் நடத்தப்பட்டவை. வெற்றி வாதத்தின் பின்னால் மக்கள் வெகுசீக்கிரத்திலேயே கவரப்படுவார்கள். அதனை, முன்னிறுத்தி மக்களை ஒருங்கிணைப்பது என்பது மிகவும் இலகுவானது. அதற்கான உதாரணத்தை 2000களின் ஆரம்பத்தில் வடக்கு – கிழக்கும், 2009க்குப் பின்னர் தெற்கும் பிரதிபலித்தது. ஆனால், வெற்றி வாதம் அல்லது அது கொடுக்கும் நம்பிக்கையின் அளவு வெகுகாலத்துக்கு நீடிக்கும் தன்மை அற்றவை. ஏனெனில், நாளாந்த வாழ்வும் அரசியல் மாற்றங்களும் அவற்றை காணாமற்போகச் செய்துவிடும்.

பொங்கு தமிழை தமிழீழ விடுதலைப் புலிகளின் (ஒருவித) வழிகாட்டுதலோடு பல்கலைக்கழக சமூகம் தலைமையேற்று நடத்தியது. அதில், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மாத்திரமின்றி பாடசாலை மட்டத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களின் பங்களிப்பும் அபரிமிதமானது. அத்தோடு, வடக்கு- கிழக்கில் இயங்கிய கிராமிய முன்னேற்ற அமைப்புக்கள் மற்றும் தொழில்சார் அமைப்புக்களின் பங்களிப்பும் பெண்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டியது.

2000களின் ஆரம்பம் என்பது தமிழ் மக்களை உணர்வு ரீதியாக பெரும் எழுச்சியைப் பெற வைத்திருந்தது. ஒருங்கிணைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பெருமெடுப்பில் செய்து முடிக்க வேண்டும் என்கிற அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வைத்தது. அதற்கான உதாரணங்களாக பொங்கு தமிழ் நிகழ்வுகளையும், சமாதான காலத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போராளிகள் வரவேற்கப்பட்ட காட்சிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 50வது பிறந்தநாள் நிகழ்களையும், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலையும் கொள்ள முடியும்.

அவை தாண்டி, போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களின் ஒன்றான ‘பாடசாலைகள், மத தலங்களைச் சுற்றியிருக்கின்ற உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட வேண்டும்’ என்கிற விடயத்தை அரசாங்கம் புறந்தள்ளி வந்த தருணத்தில், அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களும் கவனம் பெற்றிருந்தன. அதற்கு, பருத்தித்துறை ஹாட்டிலிக் கல்லூரி மற்றும் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சுற்றியுள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி, 2003ஆம் ஆண்டில் ஹாட்லிக் கல்லூரி மாணவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்ட போராட்டத்தையும் உதாரணமாகக் கொள்ள முடியும். அமைதியாக ஆரம்பித்த மாணவர் போராட்டம், பொதுமக்களின் பங்களிப்போடு உணர்ச்சி வசப்பட்ட நிலையில், இராணுவ முகாம்களை தாக்குமளவுக்கு மாறிய காட்சிகளை அரங்கேற்றின.

இறுதியாகத் தாயகத்திலிருந்த தமிழ் மக்கள் பெரும் எழுச்சி மனநிலையில் இருந்த காலகட்டம் அது. அதன்பின்னர், உணர்வு ரீதியாகப் பலதருணங்களில் மூர்க்கம் பெற்றிருந்தாலும், எழுச்சி என்கிற விடயத்தில் பெருமளவு ஒருங்கிணைவதற்கான சாத்தியங்கள் உருவாகவில்லை. போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் ஆயுத மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல், வன்னியைத் தாண்டி வடக்கு- கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்களின் ஆன்ம பலத்தினை ஒட்டுமொத்தமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரச பாதுகாப்புத் தரப்பு திட்டமிட்ட ரீதியில் முன்னெடுத்தது. அது, குறிப்பிட்டளவில் வெற்றியும் பெற்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்கு முன்னர், வடக்கு -கிழக்கில் பேரெழுச்சிப் போராட்டங்கள் தமிழ் மக்களினால் நடத்தப்படக் கூடாது என்பதில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கவனமாக இருந்தது.

2006களில் மீண்டும் ஆரம்பித்த தமிழ் மக்களின் ஆன்ம பலத்தின் மீதான அரச பாதுகாப்புத் தரப்பின் அத்துமீறல்களும் தாக்குதல்களும் இன்றைக்கு பத்து வருடங்களையும் தாண்டியும் நீண்டு வருகின்றது. அதுவும், இறுதி மோதல்களுக்குப் பின்னரான ஐந்து ஆண்டுகள் என்பது சொல்லவே முடியாத அடக்கு முறைகள் சார்ந்தவை. தோல்வி மனநிலையிலிருந்து தமிழ் மக்கள் மீண்டு எழுந்துவரக் கூடாது என்பதில் ராஜபக்ஷக்கள் கவனமாக இருந்தார்கள். அப்படியான சூழ்நிலையிலேயே சிறிய ஜனநாயக இடைவெளியின் தேவையொன்று தமிழ்த் தேசிய அரசியலுக்கு அவசியமாகப்பட்டது. அது, கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஆட்சி மாற்றத்தோடு எதிர்பார்த்த அளவிலும் குறைந்த அளவில் கிடைத்திருக்கின்றது. அந்த வெளியில் களமாடும் தரப்புக்களில் ஒன்றாக தமிழ் மக்கள் பேரவையையும், அதன் போக்கில் எழுக தமிழின் வருகைகையையும் கொள்ள முடியும்.

ஆக, ஆரம்பத்தில் பார்த்தது போல, தமிழ் மக்களின் வெற்றி வாதத்தில் எழுந்த ‘பொங்கு தமிழ்’ நிகழ்வுகளை ஒத்தவையான எழுச்சியை ‘எழுக தமிழ்’ கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை. ஏனெனில், தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்குகள் தொடர்பில் அக்கறையோடு இருந்தாலும், அதனை அடைவது தொடர்பில் எதிர்மறைப் பண்பு மனநிலையில் (நெகட்டிவ் மனநிலையில்) இருக்கின்றார்கள். அதுவும், தமிழ் மக்களின் ஆன்ம பலமாகவும் அதன் வன்வலுவாகவும் இருந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. அப்படிப்பட்ட நிலையில், தோல்வி மனநிலையில் அதாவது, எதிர்மறைப் பண்பு மனநிலையில் இருப்பவர்களை தன்னுறுதியுடைய மனநிலையின் (பொஷிட்டிவ் மனநிலையின்) பக்கத்திற்கு நகர்த்தும் வேலைகளின் ஆரம்ப கட்டங்களையே, முறையாக ஒருங்கிணைக்கப்பட்டால் ‘எழுக தமிழ்’ ஆற்றும்.

இப்போது, எழுக தமிழ் என்பது தமிழ் மக்கள் பேரவை மற்றும் சில சிவில் சமூக அமைப்புக்களினால் மாத்திரமே ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதற்குள் பல்கலைக்கழக சமூகத்தின் ஒரு தரப்பும், பொதுமக்களின் சில தரப்புக்களும் இருந்தாலும் அதனை ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழக சமூகத்தினதோ, மாணவர்களினதோ, கிராமிய மட்ட அமைப்புக்களினதோ பங்களிப்பாகக் கொள்ள முடியாது. எழுச்சிப் போராட்டங்கள் அடிப்படையில் மாணவர்களின் அபரிமிதமான பங்களிப்பினூடாகவே அடுத்த கட்டங்களை அடைந்திருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில், மாணவர்கள் பேரணிகளில் பங்காளிகளாக தம்மை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு ஒப்பீட்டளவில் குறைவு. ஆக, ஏற்பாட்டாளர்களின் முன்னாலுள்ள சவால் மக்களை எவ்வாறு களத்திற்கு கொண்டு வருவது என்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது.

அடுத்து, ‘எழுக தமிழ்’ என்பது மீள் எழுச்சியின் சில இடங்களைப் பிரதியிட மாத்திரமே முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் பங்களிப்பு குறைவாக இருந்து விட்டால், அதனைக் கருத்தில் எடுத்து, அடுத்த கட்ட செயற்திட்டங்களையும் ஒருங்கிணைப்பையும் செய்யாது விலகிச் செல்லவும் கூடாது. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது, தாம் எதிர்பார்க்கும் விடயங்கள் மக்களிடம் எடுபடவில்லை என்றால், அவற்றைக் கைவிடும் நிலை தமிழ் சிவில் அமைப்புக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் தொடர்கின்றன. தாம் முன்வைத்த விடயத்தின் பின்னால் மக்கள் ஏன் ஒருங்கிணையவில்லை? என்ற கேள்வியை எழுப்பி மாற்றுவடிவங்கள், திட்டங்கள் தொடர்பில் சிந்திப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதில்லை.

போராட்டங்களோ, அது சார் எழுச்சிகளோ பெரும் அர்ப்பணிப்பையும் காலத்தினையும் கோருவன. இப்போது, பொங்கு தமிழை மீளவும் உருவாக்கும் வேலையாக எழுக தமிழைக் கொள்ளாமல், அதனை புதிய ஒரு ஆரம்பமாகக் கொள்ள வேண்டியதே அவசியமானது. அது, மிக மெல்ல மெல்ல நகரும் ஆமையொன்றின் பயணத்தினை ஒத்ததாகவும் அமையலாம். ஆனால், அது அவசியமானது.

புருஜோத்மன் தங்கமயில்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila