இலங்கை எரிபொருள் கேந்திரங்களைக் குறிவைக்கிறதா இந்தியா?


திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குச் சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் நேற்று(05) இந்தியாவின் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன் போது, இலங்கையில் பெற்றோலிய மற்றும் எரிவாயுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு, இந்தியாவின் சார்பில் பல்வேறு திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

திருகோணமலையில் உள்ள உயர்நிலை எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் பயன்படுத்துதல், கரவெலப்பிட்டியவில் இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை உருவாக்குதல், நகர எரிவாயு வலையமைப்பை உருவாக்குதல், மோட்டார் வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பயன்பாட்டை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட திட்டங்களை இலங்கையின் பெற்றோலியக் கூட்டுத் தாபனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் திட்ட முன்மொழிவுகளை இந்தியா சமர்ப்பித்துள்ளது.

இலங்கையில் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடிய இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், களஞ்சியப்படுத்தல் வசதிகளை அதிகரித்தல் குறித்தும், ஆராய்ந்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை புனரமைப்பது மற்றும் புதியதொரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது குறித்தும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலையை பிராந்திய எண்ணெய் கேந்திரமாக அபிவிருத்தி செய்வதில் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா உறுதியுடன் இருப்பதாகவும், இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila