
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வ ரனுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பொலிஸ்மா அதிபர் பரிசீலணை செய்ய வேண்டுமென வட மாகாண சபையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு, யாழ்.கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
வட மாகாண பிரதி அவைத்தலைவரின் மறைவினையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இன்றைய அமர்வில் இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
வடக்கு முதலமைச்சருக்கான உயிர் அச்சுறுத்தலை சபை கரிசனை கொள்வதுடன், மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் பொலிஸ்மா அதிபரிடம் வட மாகாண சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த மாதம் யாழில் முன்னெடுக்கப்பட்ட ‘எழுக தமிழ்’ பேரணியின் பின்னர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது தென்பகுதி அரசியல்வாதிகளினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அவரது பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவருக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கடிதம் அனுப்பியிருந்தார். எனினும், வடக்கு முதல்வருக்கு அவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லையென புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.