கோட்டாவை விசாரித்தது பாரிய தவறாம்! – ஜனாதிபதி கூறுகிறார்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் ஆகியோரை விசாரணை செய்து நீதிமன்றம் வரை கொண்டுசென்றமை தவறென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், இவ்விடயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, நீதியை எதிர்பார்த்து காத்திருந்த மக்களை சஞ்சலத்திற்குள்ளாக்கியுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற முப்படையினரின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, அவன்ட் கார்ட் உள்ளிட்ட பல விடயங்களில் பிரச்சினைகள் இருக்குமாயின் அதுகுறித்து விசாரிப்பதற்கு ஒரு வழிமுறை உள்ளதென்றும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நாட்டின் நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் இவ்விடயம் தொடர்பாக தமக்கு அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் நோக்கம் கருதி விசாரணை ஆணைக்குழுக்கள் செயற்படுமாயின் தாம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்படுமென மேலும் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்ற மீறல்களின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறார். கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடனும் கோட்டா தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு வருகின்றது. பல குற்றச்செயல்களுக்கு கடற்படையினரையே கோட்டா பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான நிலையில், கோட்டாவையும் கடற்படையினரையும் விசாரணைக்கு உட்படுத்துவது தவறென ஜனாதிபதி கூறியுள்ளமையானது, நல்லாட்சியின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவிடுபொடியாக்கும் செயலென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பின் பங்குதாரராக கருதப்படும் கோட்டா மற்றும் இராணுவத்தினரை, சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டுசெல்ல வேண்டுமென்பதே நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்பாகும். எனினும், உள்நாட்டு நீதிமன்ற விசாரணைகளுக்கே ஜனாதிபதி அதிருப்தியை வெளியிடுவாராயின் யுத்தக் குற்ற விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றம் என்பன சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila