தசரதர்கள் பலவீனமாக இருந்தால் இராமர்கள் காடு செல்வதே விதி


இலங்கையில் நடந்த இராம - இராவண யுத்தத்துக்கான அடித்தளம் சூர்ப்பனகை இராமரைக் கண்டதனாலோ இலட்சமணன் அவள் மூக்கை அரிந்ததனாலோ ஏற்பட்டதல்ல.

மாறாக கைகேயியின் இருவரக் கேட்பனவின் போதே சீதை சிறையிருப்பதும் இராமர் இலங்கை மீது படையயடுப்பதற்குமான கால்கோள் நடக்கலாயிற்று.

ஒரு சண்டையில் கைகேயி தனக்கு உதவியாக இருந்தாள் என்பதற்காக தசரதச் சக்கரவர்த்தி இருவரங்களைக் கேட்பதற்கு அனுமதி கொடுக்க, கைகேயியும் காலம் வரும் போது அந்த இரு வரங்களையும் கேட்பதாகக் கூறினாள்.

இராமருக்கான பட்டாபிஷேக காலம் வந்தது. கூனி சூழ்ச்சி செய்தாள். கைகேயி தலைவிரி கோலத்துடன் இருக்கிறாள். அவளின் கோலம் கண்டு கதி கலங்கிய தசரதனிடம் கைகேயி இருவரங்களைக் கேட்கிறாள். பரதன் நாடாளுவதும் இராமன் காடேகுவதுமாக அந்த இருவரங்களும் அமைகின்றன.

வரம் என்பதே ஒரு பெரும் கிடைப்பனவு. ஒருவரின் வரம் இன்னொருவருக்கு தீங்காக அமையுமாக இருந்தால் அது வரமன்று.

எனினும் இந்தத் தத்துவத்தை கைகேயிக்கு உணர்த்தி; பிறர்க்குத் தீங்கில்லா வரம் கேள் என்று கூறும் திராணி தசரதருக்கு இருக்கவில்லை.

அதுதான் இல்லை என்றால், இராமபிரான் காடேகும் போது நானும் அவனுடன் காடு செல்கிறேன் என்று தசரதன் கூறியிருந்தால்கூட கைகேயி மனம் மாறியிருக்கலாம்.

பரதனை நாடாளச் செய்வது என்று முடிவு செய்த கைகேயியின் மனம் மாறுவதாவது என்று நீங்கள் பதிலுரைத்தால், பரவாயில்லை இராமரோடு தசரதன் காடு சென்றிருந்தால் இராமபிரானின் கைகளால் தசரதனின் அந்திமக் கிரியைகள் நடந்திருக்குமல்லவா? அதற்குக்கூட தசரதன் தகைமையற்றுப் போகுமளவில் தசரதனின் பலவீனம் இருந்துள்ளது என்பதே உண்மை.

இதை நாம் சொல்லும்போது தசரதன் மீது அபிமானம் கொண்டவர்கள் தசரதன் பலவீனமானவன் அன்று. அவனின் நல்ல குணமே பலவீனமாகத் தோன்றுகிறது என்று பதிலடி கொடுத்தால் அதை நாம் முற்றுமுழுதாக மறுப்பதற்கில்லை. 

இருந்தும் ஒருவரின் நல்ல குணம் அழிவையும் துன்பத்தையும் ஏற்படுத்துமாக இருந்தால் அதை நல்ல குணம் என்றுரைப்பது முழுத்தவறு என்பதே நம் தாழ்மையான கருத்து.

எதுவாயினும் தசரதனின் நல்ல குணம் அல்லது எதையும் உறுதிபடத் தெரிவிக்காத தன்மை மற்ற வர்களை எழுந்தாட வைக்கும். அந்த எழுந்தாடலில் கைகேயிகள் கோலோச்சுவர்; கூனிகளின் சூழ்ச்சிகள் வெற்றி காணும்; உத்தம புத்திரர்களாகிய இராமர்கள் காடு செல்வர்; சீதைகள் சிறையிருப்பர்; சடாயுகள் நீதி கேட்டு மாண்டுபோவர்; எந்தப் பாவமும் அறியாத பரதர்கள் அவப் பெயர் பெறுவதுடன் பெற்ற தந்தைக்கும் அந்திமக்கிரியை செய்யும் தகைமையை இழப்பர் எனப் பெரியதொரு நீரோசை நடந்து போகும்.

அட இது எதற்கானது என்று நீங்கள் கேட்டால் எங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் நல்லவர். எனினும் அவரின் அமைதி, நல்ல குணம், அடக்கம் என்பன பலவீனமாகப் பார்க்கப்படுவது போல தெரிகிறது. 

வடக்கின் முதலமைச்சர் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்கள் குற்றம் சுமத்துவது, கூனிகள் சூழ்ச்சி செய்வது போன்றன வேதனை தருகிறது.

எனவே ஜனாதிபதியின் முடிவுகளில் இறுக்கம் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
ஆம், தசரதர்கள் பலவீனமாக இருந்தால் இராமர்கள்தான் காடேக வேண்டிவரும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila