ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 20 மாதங்கள் கடந்துள்ள போதும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத காரணத்தினாலேயே அவற்றை வலியுறுத்தி எழுக தமிழ் பேரணி நடத்தப்பட்டதென தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இதனை தெற்கின் இனவாத சக்திகள் வேறு விதமாக நோக்குவதாகவும் இனவாத பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா கூமாங்குளம் முதியோர் சங்கம் சித்தி விநாயகர் பாடசாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோருக்காக தீர்வு, இராணுவம் வெளியேற்றப்பட்டு தமது சொந்த காணிகளில் தமது கலாசாரம் பாதுகாக்கப்பட்டு வாழ்வதற்காக எத்தனையோ பேர் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வடக்கு முதல்வர் அரசுக்கும் சர்வதேசத்திற்கும் அதனை வினயமாக எடுத்துக்கூறியுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.
ஆனால் அதற்கெதிராக இனவாத பிரசாரம் நடத்தும் தெற்கின் இனவாதிகளுக்கு தீனி போடும் வகையில் சில தமிழ் அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் செயற்படுவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.