
புலிகள் என அடையாளப்படுத்தியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தகாத வார்த்தைகளால், கெவிலியாமடு கிராமசேவகர் உட்பட அதிகாரிகளை திட்டித்தீர்த்துள்ளதுடன், அச்சுறுத்தலும் விடுத்திருக்கின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தி சிங்கள மக்களை குடிமயர்த்த மேற்கொண்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே, கிராமசேவகருக்கு மங்களாராம விகாரையின் தலைமை பௌத்த பிக்கு, கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.
பொலிசார் முன்னிலையில் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி போன்ற பிரதேசங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போருக்காக, சுமார் 2ஆயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஏக்கர் மேய்ச்சல் நிலம், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல தசாப்த காலமாக மேய்ச்சல் நிலமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்த காணிக்குள் அத்துமீறி நுழைந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள குடும்பங்கள், தற்போது குறித்த காணிகளை தமக்கு எழுதிக்கொடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள குடும்பங்களுக்கு குறித்த காணிகளை பகிரந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான 4 பிக்குகள் தலைமையிலான குழுவினரின் நடவடிக்கையை குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம சேவகர் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, கெவிலியாமடு கிராமசேவகரைத் திட்டித் தீர்த்தது மாத்திரன்றி எச்சரிக்கையும் விடுத்தார்.
அதேவேளை தமிழர்கள் அனைவரையும் புலிகள் என அடையாளப்படுத்திய சுமனரத்தன தேரர், காணியை வழங்க மறுக்கும் கிராமசேவகரைப் பார்த்து, எனது, அப்பனது, தாயினது காணியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மங்களாராம விகாரையின் தலைமை பிக்கு இந்த அடாவடித்தனத்தை, பொலிசாருக்கு முன்னிலேயே அரங்கேற்றியிரந்தார். இதனை தடுக்க முடியாது திணறிய பொலிசார், கெஞ்சி, கூத்தாடியே பௌத்த பிக்குவை அங்கிருந்து அகற்றினர்.