வட மாகாணத்தின் ஆளுநர் கூரேயிடம் ஒரு விண்ணப்பம்


வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு அன்பு வணக்கம். இதற்கு முன்பும் ஒரு சில தடவைகள் தங்களுக்குக் கடிதம் எழுதிய ஞாபகம். எனினும் இக் கடிதம் முன்னைய கடிதங்களை விட வித்தியாசமா னது எனலாம்.

வலிகாமத்தில் தாங்கள் ஆற்றிய  உரை தொடர்பு பட்டதே இக்கடிதம்.
நடந்து முடிந்த போரில் அழிவுதான் மிஞ்சியது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கோ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கோ வெற்றி கிடைக்கவில்லை என்று அந்த உரையில் கூறியிருந்தீர்கள்.

அதாவது போரில் பிரபாகரனும் மகிந்த ராஜபக்ச­வும் வெற்றி பெறவில்லை என்பது உங்களின் கருத்து.
இக்கருத்துத் தொடர்பில் பலரிடம் இருக்கக்கூடிய உடன்பாட்டைத் தங்களுக்குத் தெரியப்படுத்துவதே இக்கடிதத்தின் நோக்காகும்.

உண்மையில் போர் தந்த அழிவு இன்று வரை எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களை அழு கண்ணீருடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

பெற்று வளர்த்த பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றவர்களின் மனப் பதபதைப்பு வெந்தணலிலும் மோசமானது என்பது தாங்கள் அறியாததல்ல.

எனவே, இலங்கையைப் பொறுத்தவரை நடந்து முடிந்த யுத்தத்தில் அழிவுதான் மேலோங்கியது. நேற்று முன்தினம் தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடந்தேறின.

மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டது என்று பேரினவாதிகள் சிலர் தென்பகுதியில் கடும் பிரசாரமும் செய்யலாம். ஆனால் மனித நேயத்துடன் ஒரு கணம் பாருங்கள். அந்தப் பார்வை சிங்கள மக்களிடம்; சிங் கள அரசியல்வாதிகளிடம்; உங்களைப் போன்ற அரச பிரதிநிதிகளிடம் இருக்குமாயின்,
மாவீரர் இல்லங்களில் ஏற்றிய தீபத்தை விட எரிந்த இதயங்களே அதிகம். கனத்த உள்ளத்தோடு மண்ணை நனைத்த கண்ணே அதிகம் என்பது தெரியவரும்.

உயிரிழந்த தன்பிள்ளையை நினைந்துருகி மண்ணில் விழுந்து புரண்டு அழுத ஒரு தாயின் பரிதவிப்பு மாவீரனுக்கான அஞ்சலி என்ற எல்லை கடந்து பிள்ளையை இழந்த தாயின் ஆற்றாமையின் அழுகை என்பதை உணர முடியும்.

எனினும் இதை உணர்வதற்கு பேரினவாதிகள் ஒருபோதும் விடப்போவதில்லை. இங்குதான் உங்களிடம் ஒரு கோரிக்கையை விடுக்கின்றோம்.

வடக்கின் ஆளுநர் என்ற உயர்பதவியில் இருக் கும் தாங்கள் தமிழ் சிங்கள மக்களிடையே ஒற்றுமையை - புரிந்துணர்வை ஏற்படுத்த உதவுங்கள்.

இடையிடையே தாங்கள் கொழும்பில் ஆற்றுகின்ற உரைகளை ஒத்திவைத்துவிட்டு, வடக்கின் ஆளுநர் றெஜினோல்ட் கூரே தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பெரும் பங்காற்றினார் என்ற பெருமைக்கு உங்களை ஆளாக்குங்கள் என்பதே நம் தாழ்மையான கோரிக்கை.

வடக்கின் முதலமைச்சர் ஒரு கனவான் என்று கூறியவர் நீங்கள். முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீங்கள் கனவான் எனறு அடையாளப்படுத்திய போது தக்க ஆளுநர் நமக்குக் கிடைத்தார் என்று தமிழ் மக்கள் புளகாங்கிதம் கொண்டனர்.

ஆனால் ஏனோ தெரியவில்லை. வடக்கின் முதலமைச்சருடன் இணங்கிச் செல்வதில் உங்களிடம் சில தடைகள் இருக்கின்றன. இதனைத் தவிர்த்து வடக்கு முதல்வருடன் சேர்ந்து தமிழ் மக்களின் உயர்வுக்காக வாழ்வுக்காகப் பாடுபடுங்கள்.

கூடவே இனப்பிரச்சினைத் தீர்வின் அவசியத்தை தென்பகுதியில் எடுத்துரையுங்கள். நீங்கள் நினைத்தால் போரினால் ஏற்பட்ட இழப்பின் பெரும் பங்கு தமிழ் மக்களுக்கே என்பதை உணர்ந்தால்,
தமிழ் மக்களின் அவலத்தை அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை சிங்கள மக்களிடம் எடுத்துரையுங்கள். 

இந்த முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நிச்சயம் தமிழ் - சிங்கள மக்களிடையேயான புரிதல் ஏற்படும் .இது  இலங்கையின் இன ஒற்றுமைக்கு பேருதவி புரியும்.

வடக்கின் ஆளுநராக இருந்த கூரே இன ஒற்று மையை ஏற்படுத்தினார் என்று வரலாறு பேசும். இதைச் செய்வீர்கள் என நம்புகின்றோம். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila