மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு முதற்கண் வணக்கம்.
ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்... குறைகேள் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதற்காக இன்று வரும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
அடிப்படையில் தங்களிடம் இருக்கக்கூடிய மனிதநேயத்தை நாம் அறியாதவர்கள் அல்லர். அதிமேதகு என்ற பதத்தை ஜனாதிபதி என்ற பதவிக்கு முன்னால் சேர்க்காதீர்கள்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றே அழையுங்கள் என்று கூறிய தங்களின் எளிமையான வாழ்வியல் நமக்கு நிறையவே விருப்பத் துக்குரியது.
முன்னொரு தடவை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தாங்கள் முகாம்களில் வாழும் வலி.வடக்கு மக்களை நேரில் சென்று பார்த்தீர்கள். அவர்களுடன் நேரில் கலந்துரையாடினீர்கள். இவையெல்லாம் தங்கள் மீதான மதிப்பை தமிழ் மக்களிடம் உயர்த்திக் கொண்டன.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் தங்களிடம் இருக்கக்கூடிய திடம் கண்டு ஆறுதலடைகின்றோம்.
எனினும் தங்கள் தொடர்பில் எங்களுக்கு இருக்கக்கூடிய குறையென்று உண்டு. அதனை ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் என்ற குறைகேள் அலுவலகத்தை திறப்பு விழாவாகிய இன்றைய நாளில் எமக்கு இருக்கக்கூடிய முதலாவது குறையாக தமிழ் மக்கள் சார்பாக தங்களிடம் சமர்ப்பிக்கின்றோம்.
மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே! வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட சம்பவம் தாங்கள் அறியாததல்ல.
யுத்த காலத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியாமலே உள்ளது.
தவிர, காணாமல்போனவர்கள்; சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் அவலங்கள்; படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களின் நிலங்கள்; இப்படிப் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வின்றி தமிழ் மக்கள் சதா அழுது கண்ணீர் வடித்த வண்ணமுள்ளனர்.
யுத்த காலத்தில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும். எமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கை.
இருந்தும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு அறவே இடமில்லை என்று தாங்கள் அடிக்கடி கூறி வருகிறீர்கள். இது எமக்கு மிகுந்த வேதனையையும் துன்பத்தையும் தருகிறது.
மனிதநேயமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், ஏன் இப்படியாக நடந்து கொள்கிறார் என்று தமிழ் மக்கள் தமக்குள் கேள்வி எழுப்புகின்றனர்.
வன்னி யுத்தத்தில் நடந்தது தமிழின அழிப்பு என்பதே உண்மை. இதற்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் எந்தச் சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணை விலக்கப்படக்கூடியதல்ல. நல்லாட்சியில் இது நடக்கும் என்றே தமிழ் மக்கள் நம்பினர்.
அந்த நம்பிக்கையோடுதான் அவர்களின் வாக்கு உங்களுக்காயிற்று. ஆனால் இப்போது நீங்கள் சர்வதேச நீதிபதிகளை எதிர்க்கிறீர்கள். இது ஏன்? கைகேயிக்காக தன் மகன் இராமனை காட்டுக்கு அனுப்பிய தசரதன் போல நீங்களும் ஆகிவிட்டீர்களா?
தர்மம் தெரிந்த தாங்களும் கைகேயி வழியான மந்தரையின் சூழ்ச்சிக்கு பலியாகி விட்டீர்களா?
மேதகு ஜனாதிபதி அவர்களே! இந்தக் குறையை இன்றைய நாளில் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இம்மடலை தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.