பூரணை நாள் கெளதம புத்த பிரான் பரிநிர்வாணம் அடைந்த நாள். அந்நாளை பெளத்தர்கள் புனித நாளாகப் போற்றுவர்.
கெளதம புத்த பிரான் முத்தியடைந்த பூரணை நாளைப் புனித நாளாக்கி அன்றைய தினத்தில் கெளதம புத்த பிரானை நோக்கி விரதம் இருந்தால் ஆத்ம ஞானம் பெற முடியும் என்பது பெளத்தர்களின் நம்பிக்கை.
கெளதம புத்த பிரான் இந்த உலகப் பற்றைத் துறந்தவர். உலகப் பற்றுதலே ஆத்ம ஈடேற்றத்துக்குத் தடை என்பதை இந்து மதம் எடுத்துரைத்தது.
இந்து மதத்தின் அடிப்படைகளைக் கொண்ட பெளத்தத்திலும் பற்று விடுதல் என்பது முக்கியம் பெறுகின்றது.
இந்து தர்மம் எங்ஙனம் இல்லறம், துறவறம் என்ற இரு அறங்களைப் போதிக்கின்றதோ அதே அறம் பற்றி பெளத்தமும் கத்தோலிக்கமும் போதிக்கின்றன.
உலகப் பற்றுதலை துறத்தலின் பொருட்டு துறவி யாகுதல் என்ற அறம் இந்து, பெளத்தம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களில் பின்பற்றப்படுகின்றன.
எனினும் இந்து சமயத்தில் துறவறம், வேதாந்தம், சித்தாந்தம் என்ற இரு நிலைகளைக் கொண்டுள்ளது. பெளத்தத்தில் பெளத்த மதத் தலைவர்கள் துறவிகளாகுதல் என்ற முறைமை பின்பற்றப்படுகிறது.
கத்தோலிக்கத்தில் திருச்சபையின் கட்டுப் பாடுகள், கோட்பாடுகள் என்பவற்றினூடு துறவு பேணப்படுகிறது.
ஆக, அனைத்து மதங்களும் அடிப்படையில் வேறுபட்டவை அன்று. மனிதர்களே மதவாதம் கொண்டு அலைகின்றனர்.
மதவாதம், இனவாதம், மொழிவாதம், நிறவாதம் என்பன மனித இனத்தின் அழிவுப்படிகளாக இருப்பதைக் காணமுடிகிறது.
இந்த அழிவுகளை தடுத்து நிறுத்தி மனிதர்களை வழிப்படுத்தி அவர்களுக்கு ஆத்ம ஞானத்தினூடு மெய்ஞ்ஞானத்தை ஏற்படுத்துவதே மத குருவின் பணியாகும்.
எனினும் இன்றைய சூழ்நிலையில் மனிதர்களை வழிப்படுத்த வேண்டிய மதகுருமாரில் ஒரு பகுதியினர் மதவாதத்தை தூண்டுவதையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர்.
மேலாடை மட்டுமே மதகுரு அடையாளமாக இருக்கிறதே தவிர அகம் முழுவதும் நஞ்சு என்றால் என்ன செய்ய முடியும்?
கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள மங்களராமய விகாரையின் தலைமை விகாராதிபதி சுமணரத்தின தேரர் ஒரு காணி விவகாரத்தில் நடந்து கொண்ட முறை கண்டு கலங்காதவர்கள் இல்லை எனலாம்.
புத்த பிக்குவாக - காவி தரித்து - தலை முடிகளைந்து துறவிக் கோலத்தில் நின்றபடி தகாத வார்த்தைகளை அவர் பிரயோகித்தது அங்கு கூடி நின்றவர்களையும் அந்த நிகழ்வை ஒளி நாடாவாக இணையங்களில் பார்த்தவர்களையும் அதிர வைத்தது.
ஒரு புத்த பிக்கு இப்படியா? கெளதம புத்த பிரானின் போதனைகள் என்ன? அந்தப் போதனைகளைப் பின்பற்றுவதற்காக துறவு பூண்ட இந்த பிக்குவின் வார்த்தை என்ன? இவர்தான் மதகுருவென்றால் இந்த மண்ணில் ஒரு புல்லேனும் முளைக்க முடியுமா?
ஆம் துறவு என்ற அடையாளத்தின் அடிப்படையிலேயே தூக்கி எறிந்து இனவாதம் பேசிய சுமண ரத்தின தேரர் போன்றவர்கள் பெளத்த மதத்தில் இருக்கும் வரை இலங்கையில் பேரினவாதம் முடிவுக்கு வரவே முடியாது என்பது சத்திய வாக்காகும்.