யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்களின் பின்னரும் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்வதே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பெரும் தடையாக உள்ளதென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் இராணுவம் செயற்படும் விதம் குறித்து மத்திய அரசு தம்முடன் பேசுவதற்கு தயாராகவும் இல்லையென குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கென தனித்துவமான கலாசாரமும் பண்பாடும் மதமும் நிலப்பரப்பும் உள்ளதை மறக்கவேண்டாம் எனத் தெரிவித்த விக்னேஸ்வரன், அந்த வித்தியாசங்களை ஏற்று தமிழ் மக்களை கௌரவமாக வாழ விடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை இந்நாட்டின் பிரஜைகளாக உணரக்கூடிய நிலை ஏற்படவில்லையென்றும் சமஷ்டி அடைப்படையிலான தீர்வு கிடைத்தால் மாத்திரமே எங்களை நாங்களே ஆளும் நிலை ஏற்படும் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டினார். இது கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாரென மேலும் தெரிவித்தார்.