கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து போராட்டம் - இரண்டு வார அவகாசம் கோரினார் ஜனாதிபதி!


காணாமற்போனோரின் உறவினர்களை சந்திக்க ஜனாதிபதி 2 வார காலஅவகாசம் கோரியதையடுத்து, கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை, ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
காணாமற்போனோரின் உறவினர்களை சந்திக்க ஜனாதிபதி 2 வார காலஅவகாசம் கோரியதையடுத்து, கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது. காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை, ஏ9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
           
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று 100ஆவது நாளை நிறைவுசெய்தது. இந்நிலையில், காலை 10.30 மணியளவில், சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னதாகவுள்ள ஏ9 வீதியின் இருவழிப் பாதைகளையும் முடக்கும் வகையில் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏ9 வீதியின் போக்குவரத்து, முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தது.
முன்னதாக, காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தால், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என்றும் இதனால், இன்றைய இப்போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி பொலிஸாரால், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில், நேற்று மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், நீதவான் நீதிமன்றம், அதனை நிராகரித்ததுடன், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட நோட்டீஸில் “உங்களால் கிளிநொச்சி நகரில் உள்ள அமைப்பொன்றின் சார்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். ஒன்று கூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அரசியல் அமைப்பில் தங்களுக்கு உள்ள உரிமையினை நீதிமன்றம் மதிக்கிறது. அதேவேளையில், தங்களுடைய ஆர்ப்பாட்டத்தினால் போது ஒழுங்கிற்கும் பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தங்களது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அறிவுறுத்தப்படுகின்றீர்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், போராட்டத்தால் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என்றெண்ணி, போராட்டக்காரர்கள் கூடியுள்ள பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம் போன்ற இடங்களிலும், பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு, பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், “எங்களது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நாங்கள் கடந்த எட்டு வருடங்களாக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இந்நிலையில், எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம். இப்போராட்டம், இன்று 100ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், எங்களுக்கான எந்த ஒரு தீர்வுகளும் வழங்காது எங்களது போராட்டங்களை தொடர்ந்து நீடிக்க விட்டு, நல்லாட்சி அரசாங்கமும் அரசியல் தலைமகளும் வேடிக்கை பார்க்கின்றன” என்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
ஏ9 வீதி முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி நீதவான், மாவட்ட மேலதிகச் செயலாளர் மற்றும் சட்டத்தரணிகள், போராட்டக்காரர்களுடன், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை, மாவட்ட மேலதிகச் செயலாளரிடம் கையளிக்குமாறு, நீதவான் தெரிவித்தார்.போராட்டக்காரர்கள் மனுக் கையளிக்கப்பட்ட நிலையில், குறித்த மனுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட மேலதிகச் செயலாளர், போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.
இந்த நிலையில் “ஜனாதிபதி செயலகத்தால் வடமாகாண ஆளுநர் ஊடாக எமக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், 'காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க 2 வாரங்கள் அவகாசம் தேவையாகவுள்ளது. அதற்குள் உறவினர்கள், ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இரண்டு வாரங்கள் அமைதி காக்கவும்” என, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ்.சத்தியசீலன், கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், 2 வார கால அவகாசம் ஜனாதிபதியால் கோரப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அதனையடுத்து, ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், வீதியை விட்டு விலகி, கந்தசாமி ஆலய முன்றலில் வழமையான தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.
















Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila