ஒரு சிங்கள அமைச்சருக்கு இருக்கக் கூடிய அறிவு ஒரு தமிழ் அமைச்சருக்கு இல்லாமல் போனமை வெட்கப்பட வேண்டிய விடயம் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்குச் சாட்டையடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்படுவதால் எமக்கு என்ன பாதகம்? எனவும் பாதகம் எவையும் இல்லையேல் நாங்கள் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனக் யாழில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியிலிருந்து புத்த விகாரைகளையும், சிலைகளையும் அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் நிறுவி அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழ்மக்களுடைய விகிதாசாரப் பரம்பல் மாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய அரசாங்கமும் தமிழ்மக்களுடைய விகிதாசாரத்தை மாற்றும் வகையில் இராணுவத்தின் மூலமாக புத்த சிலைகளை நிறுவி வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொரு விடயமாகும்.
கொழும்பு போன்ற இடங்களில் சைவ ஆலயங்கள் காணப்படும் போது வடக்கு, கிழக்கு மாகாணத்தில் புத்த சிலைகள், விகாரைகள் அமைப்பதில் என்ன தவறிருக்கிறது? என யாரும் கேட்கலாம்!
யாழ்ப்பாணத்திலும், நயினாதீவிலும் புத்த சிலைகள் இருக்கின்றன. அந்தப் பகுதிகள் கூடச் சிங்கள மக்கள் இல்லாத பகுதிகள் தான்.
ஆனால், அவை நீண்ட காலங்களிற்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள காரணத்தால் நாங்கள் தவறென்று சொல்லவில்லை. ஆனால், புதிதாக பெளத்த மதச் சின்னங்களை வடக்கு, கிழக்கில் அமைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பெளத்தர்கள் இல்லாத வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புத்த சிலையை நிறுவுவதோ அல்லது பெளத்த விகாரைகளை அமைப்பதோ தமிழர் தாயகப் பகுதிகளைப் பெளத்த சிங்கள மேலாதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடு.
அமைச்சர் சுவாமிநாதனுக்கு இது விளங்காவிடில் அவரிடம் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினை குறித்துப் பேசும் தகுதி இல்லை என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.