றிஸாட் இரண்டும் தெரிந்தவர் - விக்னேஸ்வரன்

மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது என்றும் குறித்த உப்பளத்தை அபிவிருத்தி செய்து மேலும் அதன் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களின் ஒருவரான அமைச்சர் றிஸாட் பதியுதீன் வடமாகாண முதலமைச்சரிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று(21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதன் போது வட பகுதியில் பிரதான வளங்களாக இருக்கின்ற 'மாந்தை சோல்ட் லிமிற்றெற்' கீழ் இருக்கின்ற மன்னார், ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி கூட்டு ஸ்தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையினை உடனடியாக ரத்துச் செய்யக்கோரி மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் இன்று காலை அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களிடம் மாவட்டச் செயலக நுழைவாயிலில் வைத்து மகஜர் கையளித்தனர்.

குறித்த மகஜர் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடமும் கையளிக்கப்பட்டது. இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரை நிகழ்த்தும் போது,

அவசரப்பட்டு மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் நாம் சற்று கலந்தாலோசிக்க வேண்டும்.

மாகாணத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து நாங்கள் தான் பதிலளிக்க முடியும். அதற்கு எமக்கு இடமளிக்க வேண்டும்.

மத்திய அரசாங்கம் இவ்விடையத்தில் தீர்மானத்தை எடுப்பதினால் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர் றிஸாட் பதியுதீனை பொறுத்தவரையில் அவர் மாகாணத்திற்கும், மத்திக்கும் உரியவர். அவர் இரண்டும் தெரிந்தவர்.

எனவே மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனத்தை தனியார் மயப்படுத்தினால் மக்கள், பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பதிலளித்த அமைச்சர் றிஸாட் பதியுதீன்,
மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கை இடம் பெறாது என்றும் குறித்த உப்பளத்தை அபிவிருத்தி செய்து மேலும் அதன் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.

அதிக இலாபத்துடன் இயங்குகின்றது மன்னார் உப்பளம். எனவே அதனை தனியார் மயப்படுத்த இடமளிக்க மாட்டோம்.
எங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல் குறித்த நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது என அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila