கைதாகிய ஆவா குழுவில் இலங்கை இராணுவத்தினரும் உள்ளடங்கியுள்ளமை அம்பலமாகியுள்ள நிலையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக அண்மையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 11 பேரும் நேற்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் 2ஆவது தடவையாக ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களுடன் மேலும் இருவர் முதன்முறையாக மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் எனவும் இவர்களுக்கு பிரேசில் நாட்டில் இருந்து வாள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதை வைத்தே யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறையினர், இராணுவ த்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் மேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைதான எவரிற்கும் இராணுவத்தினருடன் தொடர்பு இல்லையென அரசு வாதிட்ட போதும் பின்னர் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தை சேர்ந்தவரென ஏற்றுக்கொண்டிருந்தது.முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாயவினால் இராணுவத்திற்கு உள்ளீர்;க்கப்பட்டவர்களே ஆவா குழுவை இயக்கிவருவதும் அம்பலமாகியுள்ளது.