நீதிமன்ற தடை உத்தரவை மீறி ஏன் பொலிஸார் பிக்குவை பங்குடாவெளி தனியார் காணிக்குள் நுழைய விட்டார்கள்? அரசாங்க அதிபரின் வருகையை ஏன் பிக்கு கோரினார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்
நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மங்களராம விஹாரையின் விகாராதிபதி தனியார் காணிக்குள் புகுந்து மேற்கொண்ட அடாவடி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வடக்கு கிழக்கு பகுதியில் புத்தர் சிலை தாபிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற செயற்பாடுகளில் ஏதோ பின்னணி உண்டு. பொலிஸார் ஏன் இச் செயற்பாடுகளை கண்டும் காணாதவர்கள் போல் சட்டத்தையும் நீதியையும் நிலை நாட்ட தவறுகின்றார்கள்.
மட்டக்களப்பில் கடந்த வாரம் மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு அரசாங்க அதிகாரிக்கு எதிராக இந்நிகழ்வு நடைபெற்றதால் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தருமாறு நாங்கள் தொலைபேசி மூலம் அழைத்த போதும் மாவட்ட அரசாங்க அதிபர் தான் வராது மேலதிக அரச அதிபரை அனுப்பியுள்ளார்.
அத்தோடு பிரதேச செயலாளர், கிராம அதிகாரியை அவதூறாக பேசிய மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டி சுமனரத்தின தேரர் பங்குடாவெளியில் தனியார் காணியில் வருகை தந்து அமர்ந்து கொண்டு அரசாங்க அதிபர் வந்தால் மாத்திரம் காணியை விட்டு வெளியேறுவேன் என பிக்கு கூறியமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அரசாங்க அதிபரை அழைத்த போது அரச அதிபர் வரமறுத்தமையும் பிக்குவிற்கு அரசாங்க அதிபர் ஆதரவா! என சந்தேகம் அரசாங்க அதிபர் சார்பாக எங்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
ஆகவே பொலிஸாரின் நடவடிக்கை சார்பாகவும், அரசாங்க அதிபரின் வருகை மறுப்பு, பிக்கு வருகையை வேண்டல் சார்பாகவும் தீவிர விசாரணை செய்ய வேண்டியுள்ளது.
இவ்வேளை புதன்கிழமை பங்குடாவெளியில் பிரச்சினை நடைபெற்றிருந்த வேளை தான் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட உரையாற்றும் போது பட்டிப்பளை பிரதேச செயலாளர், கிராம அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரர் அவதூறாக பேசியது மற்றும் புதன்கிழமை பங்குடாவெயில் புத்தர் சிலை வைக்க நடவடிக்கை எடுத்தமையை சபையில் எடுத்து கூறி உடனடியான மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின தேரருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் நீதி அமைச்சுடன் புத்தசாசன அமைச்சு இணைந்திருக்க கூடாது நீதி அமைச்சு தனியாக அமைந்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தின விகாராதிபதியின் செயற்பாடு மற்றும் புத்தர் சிலை விபகாரம் தொடர்பான செய்தி ஜனாதிபதி, பிரதமர் அவர்கட்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிந்துள்ளது.
பிக்குவுக்கு நடவடிக்கை எடுக்க பொலிஸாரும் அரசாங்கமும் தவறுமாகையால் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களினாலும் மாவட்டம் முழுவதும் தொடர் ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இதற்கான பூரண ஆதரவை நாங்கள் வழங்கவும் தயாராகவுள்ளோம்” என அவ்வறிக்ககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.