யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் பிழையானது. அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்றைய தினம் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்காக வருந்துகின்றேன். இதேபோல் கூட்டு எதிர்க்கட்சியினரும் தமது காலத்தில் செய்த பிழைகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது. இது பிழையான செயல் என்பது எமக்குத் தெரியும், அதற்காக தற்போது மன்னிப்பு கோருகின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதமரை கேலி செய்த கூட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து பிரதமர் இவ்வாறு கூறினார். “உங்களது ஆட்சிக் காலத்தில் நீங்கள் இழைத்த தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.
ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட துன்பியல் சம்பவம் 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி இடம்பெற்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளின் ஒட்டுமொத்த உதாரணமாகவே யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை சர்வதேசம் அந்நாளில் நோக்கியது.
இலங்கையின் இனப் பிரச்சினையானது மற்றொரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்லப் படுவதற்கு யாழ். நூலக எரிப்பு சம்பவமும் காரணமாக அமைந்திருந்தது எனலாம்.
தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன்மையான பொது நூலகமாக யாழ் நூலகம் விளங்கியது. இங்கு வைக்கப்பட்டிருந்த பல நூல்கள் உலகின் வேறெந்த நூலகத்திலும் காணக்கிடைக்காதவையாகும்.
இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாறு என்றெல்லாம் பல்வேறு துறை சார்ந்த பெறுமதியான நூல்கள் இங்கே இருந்தன.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழைமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அனைத் தும் ஒரே நாளில் சாம்பலாகிப் போனது.
இலங்கை தமிழ் மக்களை மாத்திரமின்று உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த நிகழ்வு.
யாழ்ப்பாணம் பொது நூலகம் சுமார் 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக் காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
நூலகம் எரிக்கப்பட்டமை இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் அழியாத காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.யாழ். நூலகம் 1933ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது.
முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் உள்@ர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.
இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அப்போதைய ஐக்கிய தேசி யக் கட்சி அமைச்சர் காமினி திசாநாயக்க உட்பட வேறு பல அப்போதைய தென்பகுதி அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.