இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களை தொழிலுக்கு அனுமதிப்பது தொடர்பில் இலங்கை அரசு பச்சைக்கொடி காண்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்திய மீன்வர்களால் கடைபிடிக்கப்படும் இழுவை படகு தொழில் முறைமைகளினில் மாற்றம் செய்வதான உறுதி மொழிபிரகாரம் இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பினில் அனுமதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அதிகாரிகள் யாழிலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரிகளிடையே பகிர்ந்து கொண்டதாக தெரியவருகின்றது.அத்துடன் தற்போது வரை 114 இந்திய இழுவைப்படகுகள் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையினில் அதனையும் விடுவிப்பது தொடர்பினில் சமிக்ஞை இலங்கையினால் வெளிப்படுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பான இருநாட்டு வெளிவிவகார அமைச்சின் முடிவின் பிரகாரம் தற்போது 32 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் இறுதியில் நெடுந்தீவு கடல்பகுதியில் கைதான இந்திய மீனவர்கள் 32 பேரையே சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, ஊர்காவற்துறை நீதிமன்றினால், இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்துள்ளது.
இவர்கள் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசெம்பர் காலப்பகுதியில் வெள்வேறு தினங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் இவர்களுடன் கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் சான்றுபொருட்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.