யாழ்.காங்கேசன்துறை பகுதியில் தரித்து நின்ற 1990ம் ஆண்டில் கைவிடப்பட்ட புகையிரதப் பெட்டிகள் நேற்றைய தினம் முதல் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்.குடாநாட்டிற்கு 1990ம் ஆண்டு இறுதியாக கொழும்பில் இருந்து வந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ரயில் பெட்டிகள் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில், கடந்த 26 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்தது. தற்போது இப்பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருகின்றன.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள சில குறுக்கு வீதிகளின் பாதையின் போக்குவரத்திற்கும் இவ் புகையி்ரதப் பெட்டிகள் பெரும் இடையூறாக காணப்படுவதால் இவற்றினை அகற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன்பிரகாரம் மேற்படி பழைய புகையிரதப் பெட்டிகள் நேற்று முதல் ரயில்வே திணைக்களத்தினால் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பணிக்காக நீராவியில் இயங்கும் மிகப்பெரும் பாரம் தூக்கி தருவிக்கப்பட்டு இதன் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.