தமிழ் - முஸ்லிம் உறவை வெட்டிச்சரிக்க முயலாதீர்


இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சிறுபான்மை இனம் என்பதற்கு அப்பால், இரண்டு இன மக்களும் சகோதரர்களாக தங்களைக் கருதிக்கொள்பவர்கள்.

முஸ்லிம் மக்கள் தமிழைத் தாய்மொழியாக கொண்டதால் அவர்கள் நம் சகோதரர்கள் என்பது மேலும் வலுப்பெறலாயிற்று.

தமிழ் மொழியில் மிகப்பெரும் விற்பன்னர்களாக முஸ்லிம் அறிஞர்கள் இருந்துள்ளனர்.

தமிழ் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் யாழ்ப்பாண மண்ணில் கல்விகற்றவர். யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரியில் கற்ற முதலாவது முஸ்லிம் மாணவர் என்ற பெருமையும் அவரையே சாரும்.

இதுதவிர, மிகச்சிறந்த தமிழ்க் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக முஸ்லிம் அறிஞர்கள் இருக்கின்றனர்.

எனினும் தமிழ் - முஸ்லிம் சகோதரத்துவத்தை உடைத்து சுயலாபம் தேடுவதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் திட்டமிட்டுச் செயற்படுவதைக் காண முடிகின்றது.

இந் நிலைமை பேராபத்தை தரும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழ் மக்களுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இடையே இருக்கக் கூடிய பிரச்சினைகளைச் சாட்டாக வைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுப்பது போல காட்டிக் கொள்கின்றனர்.

சிறுபான்மைத் தமிழ் மக்களைப் பேரினவாதம் வஞ்சிக்கின்ற வேளையில் அதனைத் தமக்குச் சாதகமாக்கி தமிழ் மக்களின் நிலங்களை; அவர்களின் மரபுரிமைகளைக் கபளீகரம் செய்வதில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் திட்டமிட்டுச் செயற்படுவது தமிழ் - முஸ்லிம் மக்களிடையே வக்கிர உணர்வை ஏற்படுத்தக்கூடியது.

உண்மையில் முஸ்லிம் சகோதரர்கள் தமிழ் மக்களுக்கு என்றும் பக்கபலமாக இருக்க வேண்டியவர்கள். 

தாய்மொழியாம் தமிழை வளர்ப்பதற்கும் இலங்கையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த ஒற்றுமை மிகவும் அவசியமானது.

எனினும் யுத்தத்தால் நொந்து கெட்டுப்போயுள்ள தமிழ் மக்களை வஞ்சிப்பது போல அவர்களின் காணிகளை, அவர்களின் பூர்வீகச் சொத்தாக இருக்கக்கூடிய காடுகளை அபகரித்த சட்டவிரோதக் குடியேற்றங்களை மேற்கொள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர் எடுக்கும் முயற்சி இந்த நாட்டில் மீண்டுமொரு அழிவை ஏற்படுத்த வல்லது.

ஆட்சியாளர்களுடன் முஸ்லிம் அரசியல் வாதிகளின் இணக்கப்பாடு என்பது சிங்கள பேரினவாதத்தை தமிழ் மக்கள் எதிர்க்கும் வரை என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உணர்ந்திருப்பர்.

தமிழ் - சிங்கள உறவு வலுப்படுமாக இருந்தால், சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளை தூக்கி வீசுவதற்கு அதிக நேரம் ஆகாது.

ஆகையால் தமிழர்கள் வீழ்ந்திருக்கும் போது அவர்களை ஏறிமிதிக்கும் கொடுஞ் செயலை முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் செய்வது அவ்வளவு நல்லதல்ல.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila