மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பிரதேசத்து மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடமிருந்து மீட்பதற்காக கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்மக்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கடற்படையினர் அச்சுறுத்தல் விடுப்பதோடு, புகைப்படங்களையும் எடுத்து வருகின்றனர். எனினும் கடற்படையினரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையென முள்ளிக்குள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட் தந்தையர்கள், மீனவ அமைப்புக்கள், தொண்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் ஆகியோர் இன்று போராட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.