மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அதன் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் இதனை தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“அண்மைகாலமாக இடம்பெற்று வரும் ஜனநாயகத்துக்கு முரணான அரசியல் செயற்பாடுகள் காரணமாக நாட்டின் மீதும் அரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
மேலும் நாட்டில் தற்போது தொடர்ந்து நிலவிவரும் அரசியல் குழப்பநிலையினால் மக்களிடம் சந்தேகங்கள் மற்றும் அச்சம் ஆகியன தோன்றியுள்ளன.
கடந்த மூன்றாண்டுக்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வை பெற்றுத்தருவராக வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் ஆணையை பெற்றுக்கொண்டவர்கள். தற்போது அம்மக்களின் பிரச்சினைகளுக்கு எந்ததொரு தீர்வையும பெற்றுகொடுக்கவில்லை.
இவ்வாறு வெற்று வாக்குறுதிகளாக்கப்பட்ட நிலையில், நாட்டில் பொறுப்பு வாய்ந்தவர்களினால் இலங்கை அரசியலில் குழப்பநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு ஜனநாயகத்துக்கு முரணான வகையில் செயற்படுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு மற்றும் கடமைகளை மறந்து தமது சுய இலாபத்துக்காக ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் செயற்படுகின்றனர்
அந்தவகையில் ஒரு நாட்டின் மிக பெரிய சக்தி மக்கள். ஆகவே இத்தகைய சூழலில் அவதானத்துடனும் நிதானத்துடனும் மக்கள் செயற்பட வேண்டியது மிகவும் அவசியம்” என அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.