ஒரு நாள் இராமபிரான் ஆற்றில் நீராடுவதற்காகச் செல்கிறார். நீராடுவதற்கு முன்னதாக தன் வசம் உள்ள அம்பை நிலத்தில் ஊன்றிவிட்டு நீராடச் சென்றார். நீராடி முடிந்த பின்னர் நிலத்தில் ஊன்றி வைத்த அம்பை இழுத்தெடுத்தார்.
அப்போது அம்பில் குத்துண்ட தேரை ஒன்று துடிதுடித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட இராமர், தேரையே! நான் அம்பை நிலத்தில் ஊன்றும் போதும் உனக்கு ஏற்பட்ட ஆபத்தை என்னிடம் கூறியிருக் கலாமல்லவா? என்றார்.
அதற்கு அந்த தேரை, இராமா! எனக்குத் துன்பம் வரும் போதெல்லாம் இராமா... இராமா... என்றுதான் உச்சரிப்பேன். இப்போது அந்த இராமரே என்னைக் குத்தி வேதனைப்படுத்தும்போது நான் யாரைக் கூப்பிடுவது? அதனால்தான் பேசாமல் இருந்தேன் என்றது.
இராமனின் அம்பால் குத்துண்ட தேரை போலவே ஈழத் தமிழர்களும் உள்ளனர்.
தமக்கு துன்பம் வந்தபோதெல்லாம் ஈழத்தமிழர்கள் இந்தியா காப்பாற்றும், இந்தியா காப்பாற்றும் என்றே கூறி வந்தனர். ஆனால் அந்த இந்தியாவே துன்பம் இழைத்தபோது ஈழத் தமிழர்கள் என்ன செய்ய முடியும்?
அந்தத் தேரை கூட, இராமனின் அம்பு குத்திய போது இராமா என்று உரைக்காமல் மெளனம் காத்தது.
ஆனால் நாங்களோ இந்தியா நமக்கு வஞ்சகம் செய்கிறது என்று அறிந்தும் எங்களை இந்தியா காப்பாற்றும் என நம்புகிறோமே. அதுதான் நாங்கள் செய்த கர்மவினை.
கெடுதி செய்கிறவர்கள் உதவுவது போல காட்டிக்கொள்ள அவர்களை நம்புவதுதான் மிகப்பெரிய பாவவினை. அந்தப் பாவவினையை நாங்கள் இந்தியாவிடமிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா நினைத்திருந்தால், தமிழ் மக்களை நிச்சயம் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் இந்தியாவோ ஈழத்தமிழர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டது.
ராஜீவ் காந்தியின் கொலைக்கு வஞ்சகம் தீர்க்க நினைத்த இந்தியா அதை கனகச்சிதமாக செய்து முடித்தது.
விடுதலைப் புலிகளை அழித்துக் கட்டுவது என்பதன் ஊடாக, இந்தியாவின் வஞ்சகம் நிறைவேறியது. இதில் பல்லாயிரக்கணக்காக தமிழ் மக்கள் பலியாகினர்.
இவை அனைத்தும் திருமதி சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடந்தவை.
வெளியில் தெரியாமல் இலங்கை அரசுடன் இணைந்து, வன்னியில் பெரும் யுத்தம் நடப்பதற்கு துணை நின்று தமிழர்களுக்கு செய்ய வேண்டிய அழிவுகளை செய்து முடித்தது.
இப்போது பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி, இலங்கைத் தமிழர்களை இந்தியா கைவிடாது என்று சொல்லிவிட்டு சென்றவர், ஐ.நா கால அவகாசம் வழங்கும் வரை அமைதி காத்த மோடியின் அரசு இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறது.
ஆம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது இந்தியாவின் கடமை என்கிறார்.
காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சி யில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் ஈழத்தமிழர்களின் அவலம் அறிய இலங்கை வந்தவர். கூடவே யாழ்ப்பாணமும் வந்து போனவர்.
நீண்ட நாளின் பின்னர் அவர் திருவாய் மலர்ந்து ஈழத்தமிழர்களின் உரிமையைப் பாதுகாக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது என்கிறார்.
அட! அப்படியேதும் எண்ணம் இந்தியாவுக்கு இருந்தால் இரண்டு ஆண்டுகால அவகாசத்தை ஐ.நா வழங்குவதற்கு முன்னதாக அல்லவா அதைச் சொல்லியிருக்க வேண்டும். கால அவகாசத்தை தடுத்திருக்க வேண்டும்.
இதைவிட்டு இப்போது அவர் சொல்வது தோடுடைய செவியன்... பாடிய பெருமானாரை காத்தருளவோ! அல்லது ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்கெடுக்கவோ! யார் அறிவார் அச்சோவே!