முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் வருகை அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர், முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தவேண்டும் என வட மாகாண சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 85ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) பேரவை செயலக சபை மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரும் பிரேரணை ஒன்றை மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் முன்மொழிந்தார்.
பிரேரணையை முன்மொழிந்து ரவிகரன் உரையாற்றுகையில், நாயாறு பகுதியில் 2011ஆம் ஆண்டு படையினரின் அச்சுறுத்தல்களினால் 78 சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து சுமார் 300ற்கும் அதிகமான மீனவர்கள் அப்பகுதியில் தங்கி மீன்பிடியில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில் புதிதாக 203 சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் அறிய கிடைக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய சிவாஜிலிங்கம், இந்த விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பி ன் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தவேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்த திருத்தம் ரவிகரனின் பிரேரணையில் சேர்த்து கொள்ளப்பட்டு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.