“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை” என்ற பழமொழி இன்னும் பொய்த்துப் போகவில்லை என்பதற்கு அண்மைய உதாரணம் அங்கஜன் இராமநாதன்.
யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் வட மகாண சபை உறுப்பினருமாக விளங்கிய அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் முறையாகவும் ஐனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நீலச்செயலணி செயற்பட்டது. அவ்வணியினை யாழ்.மாவட்டத்தில் அங்கஜன் தேர்தல் காலத்தில் செயற்படுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வைப்பதற்காக யாழ் மாவட்டத்தில் நீலச்செயலணியை பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுத்தினார்.
அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நீலச்செயலணியின் இளைஞர் மாநாடு நடைபெற்றது.அங்கு மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ”மஹிந்த ராஜபக்ஷவை வெல்ல வையுங்கள்” என கேட்டிருந்தார்.
இத் தேர்தல் காலத்தில் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அங்கஜன் ”கூட்டமைப்பு மக்களை மைத்திரிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கூறியிருப்பது வேடிக்கையான விடயம். கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு வழங்கினால், மக்களும் ஆதரவு வழங்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை” என்றார்.
அன்று மைத்திரிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கூறியிருப்பது வேடிக்கையான விடயம். எனக் கூறியவர் இன்று மைத்திரியுடன் கைகோர்த்து யாழ்பாணம் வந்துள்ளார். இது தான் வேடிகையான விடயம்.
சங்கிலிய மன்னனின் நல்லூருக்கு வருவது சிங்களத்தலைவர்களின் எழுத்தப்படாத நடாகம். சில மாதங்களுக்கு முன்பு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நல்லூர் சென்ற அங்கஜன் இராமநாதன். இன்று (03-03-2015) இன்றைய ஜனாதிபதி மைத்திபால சிறீ சேனவுடன் நல்லூருக்கு சென்றுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் உற்ற நண்பனாக விளங்கிய அங்கஜன் இராமநாதன் இன்று மைத்திரி அணியுடன் அரசியல் பயணம் செய்கின்றார். எனவே, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை.
துவாரகா கலைக்கண்ணன்
.