இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு வீசப்பட்ட ஜப்பான் இன்று உலகம் வியக்கும் வண்ணம் எழுந்து நிற்கிறது.
இதற்குக் காரணம் ஜப்பானிய மக்களின் கடின உழைப்பும் தொழில்நுட்பப் பிரயோகமும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இரு பெரும் நகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன.
அணுகுண்டு வீச்சினால் ஜப்பான் முற்றாக அழிந்தொழிந்து போகும் என்பது குண்டு வீசியவர்களின் நினைப்பு.
ஆனால் எதிரிகளையும் தலைகுனிய வைக்கும் அளவில் ஜப்பான் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கிறது.
இதன் இரகசியம் என்ன என்றறிவது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இனங்களின் தலையாய கடமையாகும்.
அந்த வகையில் இலங்கையில் நடந்த கொடும் போரில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டது.
இதன் பின்னணியில் சில வெளிநாடுகளும் இருந்துள்ளன என்ற உண்மைகள் மறுப்பதற்குரியவையல்ல.
யுத்தம் நமக்குத் தந்த இழப்புக்கள் தமிழினத்தை தொடர்ந்தும் அழிக்குமாயின் அந்த இழப்புக்களோடு நாம் துவண்டு போவோமாயின் இலங்கையில் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்துச் செயற்பட்ட எதிரிகளுக்கு அது வெற்றியாக அமைந்து விடும்.
இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் வாழ்ந்து காட்டுதல் என்பதே தமிழர்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டமாகும்.
ஓ! சர்வதேசமே! தமிழினம் வீழ்ந்து விட்டதாக நினைத்தாயோ! என்று கம்பீரத்துடன் எழுந்து நின்று கேட்பதாக தமிழினத்தின் மீள்எழுகை இருக்க வேண்டும்.
ஆனால் யுத்தத்துக்குப் பின்பான எங்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
விவசாய உற்பத்திகள் வீழ்ந்து போகின்றன. இலங்கைத் திருநாட்டின் மூளை என்று போற்றப்பட்ட வட மாகாணம் இன்று கல்வியில் கடைசி நிலை என்றாயிற்று.
எங்களிடம் ஏற்கெனவே இருந்த அற்ப சொற்ப உற்பத்தி நிறுவனங்களும் யுத்தத்தின் கோரப்பசிக்கு இரையாகிற்று.
தனித்து அரச வேலை என்பதை விட்டால் வேறு எதுவும் முடியாது என்றளவில் எங்கள் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களின் நினைப்பு உள்ளது.
போதிய தொழிற்பயிற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை. உற்பத்தி நிறுவனங்கள் இன்று வரை உருவாக்கப்படவில்லை என்று கூறுமளவிலேயே நிலைமை உள்ளது.
வெளிநாடுகளுடன் இணைந்து தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்குவற்கான ஏற்பாடுகளும் ஏதுமில்லை.
இந்நிலையில் யுத்தம் அழித்ததைவிட யுத்தத்தின் பின்பான எங்களின் திறனற்ற செயற்பாடே எங்களை அதிகமாக அழிக்கப்போகிறது.
வடக்கு மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகளைப் பார்க்கும் போது எந்தப் பிரயோசனமான நிகழ்வுகளும் அங்கு விவாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
நீ பெரிது! நான் பெரிது! நான் அவரின் ஆள், நீ இவரின் ஆள் என்ற வெறுவிலித்தனத்தைவிட வேறு எதுவும் இல்லை.
இந்த அவலங்கள் நீக்கப்பட வேண்டும். யுத்தம் எங்களை அழிக்க முடியாது. நாம் தமிழர்கள் மீண்டும் எழுவோம். பேரினவாதத்துக்கும் உலகத்துக்கும் நாங்கள் யார் என்று காட்டுவோம்.
இதுவே எங்கள் கோமாகவும் அமையட்டும். இதற்காக அனைவரும் பாடுபட வேண்டும்.