குடியேற்றவாதத்துக்கு எதிராக மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்து சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
உண்ணாவிரதம் என்பது காந்திக்கு முன்னரும் இருந்துள்ளது. வடக்கிருத்தல் என்ற தமிழ் சொற்பதத்தின் பொருள் சாகும்வரை உண்ணாவிரதம் இருத்தல் என்பதுதான்.
எனினும் வடக்கிருத்தல் என்ற சாகும்வரை உண்ணாநோன்பு என்பது ஆன்மிக விடுதலைக்காகவும் மோட்சத்தை நோக்கியதாகவும் இருந்ததன் காரணமாக அந்த விடயம் பெரிதுபடாமல் போயிற்று.
ஆனால், அதே உண்ணாநோன்பை மகாத்மா காந்தி பாரத பூமியின் விடுதலைக்காக - சுதந்திரத்துக்காக முன்னெடுத்தபோது, உலகம் முழுவதும் அவர் பக்கம் திரும்பியது.
உரிமைக்கான ஓர் அகிம்சை போராட்டமாக மகாத்மா காந்தியின் உண்ணாநோன்பு அங்கீகரிக்கப்பட்டது.
இன்று உண்ணாவிரதம் என்பது அகிம்சை போராட்டமாக உலகம் முழுவதும் நடந்து வருகிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் மகாத்மா காந்தி என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.
இதுபோன்று எங்கள் மண்ணிலும் நிலமீட்புக்கான போராட்டங்கள் பல நடந்துள்ளன வாயினும் ஒரு தொடர் போராட்டமாக; பகலிரவாக; வெயில், மழை என்றோ பனி குளிர் என்றோ பாராமல் பிலவுக்குடியிருப்பு மக்கள் நடத்திய நில மீட்புக்கான போராட்டம் என்பது உலகம் முழுமைக்குமான ஒரு போராட்ட வழி முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.
முப்பது நாட்கள் என்ற எண்ணிக்கையைக் கடந்து செல்லக்கூடிய, நில மீட்புக்கான தொடர் போராட்டத்தின் விளைவாக அந்த மக்களின் சொந்த நிலங்கள் அவர்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பிலவுக்குடியிருப்பு மக்கள் காட்டிய தொடர் போராட்டம் எங்கள் நிலமீட்புக்கான மிகச் சிறந்த போராட்ட வழிமுறை என்று அங்கீகரிப்பதில் எவருக்கும் தடை இருக்க மாட்டாது.
ஆகையால் சொந்த நிலத்தை மீட்பதற்கான தொடர் போராட்டத்துக்கு பிலவுப் போராட்டம் என்று பெயரிட்டுக் கொள்வது மிகவும் பொருத்து உடையதாகும்.
உலகிலேயே எங்கெல்லாம் நில ஆக்கிரமிப் புக்கள் நடைபெற்றுள்ளதோ அந்நிலத்தை மீட்பதற்காக அந்த மக்கள் நடத்துகின்ற தொடர் போராட்டத்துக்கான பெயர் பிலவுப் போராட்டம் என்பதாக பொருள் பெறட்டும். இந்த சொற்பதத்தை நாம் உரக்கச் செல்வோம்.
ஆம், எங்கள் பிலவுக்குடியிருப்பு மக்கள் அஞ்சாநெஞ்சத்தோடு, இன்றுவரை எவராலும் முடியாது என்று கூறக்கூடியதான ஒரு பெரும் அகிம்சை போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கண்டதால்,
இனி எங்கெல்லாம் நிலமீட்புக்கான தொடர் போராட்டம் நடந்தாலும் அது பிலவுப் போராட்டம் என்றே பொருள் பெறும்.
ஆக, எங்கள் தமிழர் தாயகத்தில் இனி பிலவுப் போராட்டம் வலி.வடக்கு உட்பட பல இடங்களில் நடக்கும் என நம்பலாம்.