கேப்பாப்பிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்க கோரிய தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளை தலைமையகத்தின் நுழைவாயில் அருகில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பூர்வ கிராமத்தில் உள்ள 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கேப்பாப்பிலவு பூர்வீக கிராமம் முழுவதும், இராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சூரிபுரத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில், குடியேற்றப்பட்டனர்.
எனினும், இந்த வீட்டுத்திட்டத்தில் பல குறைப்பாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டும் மக்கள், தங்களை தங்களின் பூர்வீக கிராமங்களில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்காக காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.
இந்த போராட்டத்தில், சூரிபுரம் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.