தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்று தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் நினைக்கின்றனர்.
தாங்கள் எது கூறினாலும் அதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வர் என்ற நிலைப்பாட்டில், இருக்கின்ற அரசியல்வாதிகள் இன்னமும் தமிழ் மக்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே கூறவேண்டும்.
தமிழ் மக்கள் எவரையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளவும்மாட்டார்கள். ஏற்றுக் கொண்டவர்களை சடுதியாகத் தூக்கி எறியவும்மாட்டார்கள்.
அதேநேரம் ஏற்றுக்கொண்டவர்கள் ஏறுமாறாக நடந்தால், அவர்களைத் தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள் என்பதே உண்மை.
இந்த உண்மையை தமிழ் அரசியல்வாதிகள் சிலர் புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றனர். இது வேதனைக்குரியது. இதற்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் எங்களையே ஆதரிப்பர் என்றே நினைப்பே காரணமாகும்.
ஒன்றை ஏற்றுக் கொண்டால் அதனோடு சீவியம் நடத்துவதே நம் தலைவிதி என்றிருக்கும் நிலைமை நம்மிடம் உண்டென்பது ஏற்புடையதாயினும் இது சரிவராது என்று நினைத்து விட்டால், பின்னர் மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே தமிழ்மக்களிடம் இடமில்லை என்றாகிவிடும். இந்த உண்மைகளைத் தமிழ் அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தான் நினைப்பதே சரி என்றவாறு நடந்து கொள்கிறது.
அதிலும் குறிப்பாக இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குகின்ற நடவடிக்கையில் தமிழ் மக்களின் கருத்துக்களை அறியாமல்; தமிழ் மக்களின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளாமல், அனைத்தும் யாமறிவோம் என்ற கர்வத்தில் கால அவகாச விவகாரம் கையாளப்பட்டுள்ளது.
இதனால் தமிழ் மக்கள் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளனர். இரண்டு வருட கால அவகாசம்
வழங்கப்பட்டதால் அடிவயிறு பற்றி எரியுது என்றிருக்கக்கூடிய தமிழ் மக்களுக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செய லாளர் துரைராஜசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் எரிகின்ற நெருப்பில் பெற்றோல் ஊற்றியதாகி விட்டது.
மூன்றாந்தரப்பால் எதுவும் நடக்காது; இலங்கை அரசுடன் பேசியே பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கூறியது அக்கட்சியின் நிலைப்பாடாகவே கருதப்படக் கூடியது.
ஆக, தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த நினைத்த அக்கட்சித் தலைமை அதனை துரைராஜசிங்கம் மூலமாக வெளிப்படுத்தியுள்ளது.
இரண்டு வருட கால அவகாசத்தின் பின்னர் சர்வதேச நீதிபதிகளுக்கு இங்கு இடமில்லை என்று இலங்கை அரசு கூறும்.
அப்போது தமிழ் மக்கள் இன்றைய கூட்டமைப்பின் தலைமையை ஒருமாதிரியாகப் பார்ப்பர்.
அத்தகைய நிலைமை ஏற்படும்போது, நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே சொல்லி யிருக்கிறோம். மூன்றாந்தரப்பால் எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாது என்று எனப் பதிலளிப்பர்.
இதன் பொருட்டே தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர், எந்த வகையிலும் ஏற்க முடியாத கருத்தை முன்வைத்தார் எனலாம்.
எது எவ்வாறாயினும் இன்றைய கூட்டமைப்பின் அதிகாரப்போக்கெல்லாம் இன்னொரு பலமான அரசியல் கட்சி இல்லாத வரைக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்வது நல்லது.
ஆம், தமிழ் மக்கள் அகழ்வாரைத் தாங்கும் நிலம்போன்றவர்கள். அதேவேளை பொறுமை இழந்தால் பூமி பிளப்பது போல தமிழ் மக்களும் தம் விரோதிகளைத் தூக்கி எறிவர்.
அதற்கான காலம் நெருங்குகிறது என்பதை மட்டுமே இப்போதைக்குச் சொல்ல முடியும்.