அண்மைய நாடாளுமன்ற குழுக் கூட்டமொன்றில் புளொட் சித்தார்த்தனை நோக்கி விரல் நீட்டிப் பேசிய சம்பந்தன், “ஈ.பி.ஆர்.எல்.எவ். போல நீரும் விரும்பினால் போகலாம்” என்று சூடாகக் கூற, “வயதுக்கு ஏற்றாற்போல பேசப் பழகுங்கள்” என்று சித்தார்த்தன் பதிலடி கொடுக்க சம்பந்தன் வெலவெலத்து மௌனமாக நேர்ந்தது.
———ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளின் மையப்புள்ளியில் தற்போது காணப்படுபவர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
2010ம் ஆண்டில் பின்கதவால் கூட்டமைப்புக்குள் நுழைந்து இப்போது அதன் முகப்பில் வாயிற்காப்போனாக இவர் அமர்ந்திருப்பதாக கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகள் கூறிவருவதை பலரும் அறிவர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சுவீகாரப் பிள்ளையாக அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட சுமந்திரன், தமிழர்சார் விடுதலையின் நியாயமான அபிலாi~களைச் சிதறடிப்பவராக மட்டுமன்றி, கூட்டமைப்பையும் சின்னாபின்னமாக்கும் கைங்கரியத்தில் வெற்றி கண்டு வருகிறார்.
சுமந்திரனின் தற்போதைய போக்கை சந்திரிகா காலத்து கதிர்காமருடன் ஒப்பிட்டு தமிழ் மக்கள் கூறுவது ஆச்சரியத்தைத் தரவில்லை.
கடந்த பல மாதங்களாக சுமந்திரனின் செயற்பாடுகள் கூட்டமைப்பின் தோழமைத்தலைகளை அப்புறப்படுத்துவதாக மாறி வருகிறது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை அவரின் பதவியிலிருந்து நீக்கிவிட எடுத்த முயற்சி பிசுபிசுத்துப் போய்விட்டது.
அடுத்த கட்டமாக சுமந்திரன் கொலை முயற்சி என்ற பரபரப்பு நாடகமொன்று ஊடகங்களில் அரங்கேற்றம் கண்டது. முன்னாள் போராளிகள் மீதான இராணுவக் கண்காணிப்பை அதிகரிப்பதற்காக இந்த அரங்கேற்றம் இடம்பெற்றதாக சில ஊடகங்களில் படிக்க நேர்ந்தது.
மற்றொரு முயற்சியே இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட அவகாசத்தை ஜெனிவாவில் பெற்றுக் கொடுக்க இவர் மேற்கொண்ட நடவடிக்கை.
இந்த அறிவிப்பை முதன்முதலாகக் கடந்தமாத முற்பகுதியில் வெளிப்படுத்தியவரே இவர்தான்.
இலங்கை அரசு இந்த வாரத்தில்தான் காலநீடிப்புக் கோரிக்கையை முன்வைத்ததென்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
ஜெனிவா தொடர்பாக சுமந்திரன் மேடையேற்றியுள்ள ஓரங்க நாடகத்தின் சில முக்கிய பகுதிகளை காலப்பதிவுத் தேவைக்காக இங்கு இடுவது அவசியமாகிறது.
2015 அக்டோபர் மாதத்தில் இலங்கை அரசின் அனுசரணையுடன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, மேலும் இரண்டு வருட காலநீடிப்பு வழங்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்குமென கடந்த மாத ஆரம்பத்தில் சுமந்திரன் அறிவித்திருந்தார்.
கூட்டமைப்பை உத்தியோகபூர்வமாகக் கூட்டி இப்படியான ஒரு முடிவு எடுக்கப்படாதிருந்ததால், அதன் தோழமைக் கட்சிகளுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சுமந்திரனின் அறிவிப்பை வழிமொழிந்த இரா.சம்பந்தன், காலநீடிப்புக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சுமந்திரனதும் சம்பந்தனதும் இந்த அறிவிப்பை கூட்டமைப்பின் பங்காளிகளான தோழமைக் கட்சிகள் ஏற்கவில்லை.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய மூன்றும் தமது எதிர்ப்பை அறிக்கைகள் வாயிலாக வெளிப்படுத்தின.
அத்துடன் நிற்காது, காலநீடிப்புக்கு எதிரான தங்கள் முடிவை இவர்கள் கடிதம் மூலம் ஜெனிவாவுக்கும் அறியக் கொடுத்தனர்.
கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் இதில் ஒப்பமிட்டதாக முதலாவது தகவல் வெளியானது.
ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வியாழேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சிவசக்தி ஆனந்தன் உட்பட தமிழரசுக் கட்சியின் டாக்டர் சிவமோகன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். யோகேஸ்வரன் ஆகியோரே ஒப்பமிட்ட எண்மர்.
அப்போது இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், அக்கடிதம் பற்றித் தாம் கேள்வியுற்றதாகவும் ஆனால் அதனைப் பார்க்கவில்லையென்றும் சொன்னார்.
அடுத்து வந்த தகவலானது, தமிழரசுக் கட்சியின் ஜி.சிறிநேசன் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஜா, ரெலோவின் கே. கோடீஸ்வரன் ஆகியோரும் ஒப்பமிட்டதாகத் தெரிவித்தது.
கூட்டமைப்பின் 16 எம்.பிக்களில் எட்டுப்பேர் ஒப்பமிட்டதாக முதலில் வெளியான செய்தி, காலநீடிப்பு விடயத்தில் கூட்டமைப்பு ஐம்பதுக்கு ஐம்பதாகப் பிரிந்துள்ளதைக் காட்டியது.
பின்னர், மேலும் மூவர் ஒப்பமிட்டதாகத் தெரியவந்தபோது எதிர்ப்பு அணியின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரிக்க, ஆதரவுத் தரப்பு ஐந்தாக இறங்கியது.
இதனைத் தொடர்ந்து ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்கு சுமந்திரன் அவசரமாக ஒரு கடிதம் எழுதினார்.
“முதலில் ஒப்பமிட்ட எட்டுப் பேருக்கு மேலதிகமாக குறிப்பிடப்பட்ட மூன்று எம்.பிக்களும் கடிதத்தில் ஒப்பமிடவில்லை. அவர்களின் பெயர்களை; யாரோ எழுதியுள்ளனர்” என்பது சுமந்திரனின் கடிதத்தின் சாரம்.
இந்த ஓரங்க நாடகம் இப்படியாகத் தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்த வாரத்துப் புதன்கிழமை கொழும்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோடீஸ்வரன் எம்.பி. எதிர்ப்புக் கடிதத்தில் தாம் ஒப்பமிட்டதை ஒப்புக் கொண்டார்.
மற்றைய இரண்டு உறுப்பினர்களான சிறிநேசனும், சாந்தி சிறிஸ்கந்தராஜாவும் தாம் ஒப்பமிடவில்லையென்று இதுவரை எங்கும் பகிரங்கமாகக் கூறவில்லை.
இதனால் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 11 பேர் காலநீடிப்புக்கு ஆதரவில்லையென்பது ஊர்ஜதமானபோது, சுமந்திரனின் பொய்முகம் கழன்றது.
இக்கடிதத்தில் ஒப்பமிட்டவர்கள் கூட்டமைப்புக்கு தெரிவிக்காது ஜெனிவாவுக்குக் கடிதம் அனுப்பலாமா என்ற புதுப்பிரச்சனையைப் புதன்கிழமைக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் ஒப்பமிடாத எம்.பி. ஒருவர் எழுப்பினார்.
“கூட்டமைப்பின் சுமந்திரன் தன்னிச்சையாக காலநீடிப்புக்கு கூட்டமைப்பு ஆதரவென தெரிவித்தது சரியா? தமிழரசுக் கட்சியின் ஐவர் எடுத்த முடிவை கூட்டமைப்பின் முடிவு என்று எவ்வாறு கூற முடியும்?” என்ற பதில் கேள்வி மறுதரப்பிலிருந்து வந்தது.
கூட்டமைப்புக்குள் தான்தோன்றித்தனமாக தமிழரசார் செயற்படுவது பகிரங்கமாக்கப்படுவதைக் கண்டு சலனமுற்ற சம்பந்தன், நிலைமையைச் சமரசப்படுத்தி கூட்டத்தை நிறைவாக்கினார்.
கூட்டம்தான் முடிவுற்றதே தவிர, மழைவிட்டும் தூவானம் போகாத நிலைதான் தொடர்கிறது.
கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய மூன்று தோழமை அணிகளும் கடந்த காலங்களில் நடத்திவந்த அறிக்கைப் போரின் உச்சத்துக்கு ஜெனிவா பிரச்சனை வந்துள்ளது.
அண்மைய நாடாளுமன்ற குழுக் கூட்டமொன்றில் புளொட் சித்தார்த்தனை நோக்கி விரல் நீட்டிப் பேசிய சம்பந்தன், “ஈ.பி.ஆர்.எல்.எவ். போல நீரும் விரும்பினால் போகலாம்” என்று சூடாகக் கூற, “வயதுக்கு ஏற்றாற்போல பேசப் பழகுங்கள்” என்று சித்தார்த்தன் பதிலடி கொடுக்க, சம்பந்தன் வெலவெலத்து மௌனமாக நேர்ந்தது.
இப்போது ஜெனிவா காலநீடிப்பு விடயத்தில் தமிழரசுக் கட்சியின் ஆறு எம்.பிக்கள் அதன் தலைமைக்கு மாறாக மூன்று தோழமைக் கட்சிகளுடன் இணைந்து கொண்டது தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
கூட்டமைப்பைப் பிளவுபடுத்தி தோழமைக் கட்சிகளை அகற்றிவிடும் திட்டத்தை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார் சுமந்திரன்.
இவருக்குப் பக்கத் துணையாக நின்று செயற்படுபவர் இப்போது மௌனராகம் வாசிக்கும் தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா.
இவைகள் எதுவுமே தமக்குத் தெரியாததுபோல கண்களை மூடியவாறு கள்ளத்தனத்தைக் காத்துவரும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், “கால அவகாசம் வழங்குவதற்கு எம்மால் எதுவும் கூற முடியாது” என புதிய நழுவல் கதைவிடுகிறார்.
கூட்டமைப்பைப் பிளவுபடுத்தியதில் பெருமை கொண்டுள்ள சுமந்திரன், இப்போது தமிழரசுக் கட்சியையே தறித்துவிட வேகம் கொண்டுள்ளார்.
ஜெனிவா காலநீடிப்புக்கு எதிராக கூட்டமைப்பின் பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கடிதம், இதனை அம்பலப்படுத்தி நிற்கிறது.