வவுனியாவில் இன்று நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழகத்தின் சின்னம்மா சசிகலாவின் பாணியில் உறுப்பினர்களிடம் கையயழுத்துப் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற வுள்ளதாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றும் பொருட்டு இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவ தற்கு ஆதரவு திரட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை திட்டம் தீட்டியுள்ளதாம்.
இதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை இன்றைய கூட்டத்திற்கு அழைத்து கால அவகாசம் வழங்கப்படுவதற்கு ஆதரவாக அவர்களிடம் கையயழுத்து வாங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளன.
இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவது தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை தடுப்பதாகும் என்று கொதித்தெழுந்துள்ள கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும்,
இன்று வவுனியாவில் நடக்கும், கூட்டம், தமிழகத்தின் சின்னம்மா சசிகலாவின் பாணியில் உறுப்பி னர்களிடம் கையயழுத்துப் பெறுவதற்கானது என்று கூறியுள்ளனர்.
தமிழினத்திற்கு துரோகம் செய்யும் எந்த சதித்திட்டத்திற்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என உறுதிப்படக்கூறியுள்ள கூட்டமைப்பின் உறுப்பினர்கள்,
2015 இல் இலங்கை அரசுக்கு ஐ.நா விதித்த தீர்மானங்களை கால அவகாசம் எடுக்காமல் இலங்கை அரசு அப்படியே அமுல்படுத்த வேண்டும் எனவும் இதற்கு ஐ.நா கால அவகாசம் கொடுக்கக்கூடாது எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதை ஆதரிப்பது தமிழ் மக்களுக்கு நாம் செய்யும் அநியாயம் என்பதை கூட்டமைப்பின் தலைமைக்கு எடுத்துரைக்க உள்ளதாகவும் உறுப்பினர்கள் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் நியாயப்படுத்தி வருவது இங்கு கவனிக்கத்தக்கது.