தன் நெஞ்சறிவது பொய்யற்க; பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச்சுடும் என்றார் திருவள்ளுவர். உலகிற்கு அறம் உரைத்த திருவள்ளுவரின் இக்குறள்பா கூறும் பொருள் உணர்ந்தால் இவ்வுலகில் எவரும் தம் மனச் சாட்சிக்கு விரோதமாக செயற்படமாட்டார்.
அதேவேளை இந்த உலகில் யார் எத்தீங் கிழைத்தாலும் அவர்கள் தங்கள் வாழ்வில் துன்பத்தை அனுபவித்து உழறுவர் என்பது மறுக்க முடியாத உண்மை. இவற்றை நாம் அனுபவரீதியாகப் பார்க்க முடியும்.
போரின்போது ஆங்காங்கே குற்றங்கள் நடந்தன என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். அவர் கூறியது சிலவேளை அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அதைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
அட - போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை என்று இதுகாறும் கூறிவந்த கோத்தபாய ராஜபக்சவுக்கு இப்போது நடந்தது என்ன? என்பதே அந்த அதிர்ச்சிக்கான காரணம். தமிழ் மக்களை - பொது மக்களை வன்னிப் பெருநிலப்பரப்பில் வைத்து கொன்றொழித்த கொடும் செயலை மறைத்து வந்த கோத்தபாய ராஜபக்ச இப்போது அதிரடியாக, போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் நடந்தன என்பதை தான் நிராகரிக்கவில்லை என கூறியுள்ளார்.
போர் வெற்றி கொண்டாடிய கோத்தபாய ராஜபக்சவுக்கு இப்போது என்ன நடந்தது என்றால் இங்கு தான் வள்ளுவர் கூறும் ... தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்ற குறள் வேலை செய்யத் தொடங்கியுள்ளது எனலாம்.
அதாவது வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டமை, சிறுவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை, படையினரிடம் சரணடைந்த - ஒப்படைக்கப்பட்ட இளைஞர்களுக்கு நடந்தது என்ன? என்பது இன்று வரை தெரியாமல் உள்ளமை எனப் பல்வேறு விடயங்கள் அவரை வாட்டத்தொடங்கியுள்ளன.
போரில் எந்தக்குற்றமும் நடக்கவில்லை என்று கடந்த ஏழு ஆண்டுகளாக கூறிவந்த கோத்தபாய ராஜபக்ச வை அவரது மனச் சாட்சி நெருடியுள்ளது.
வன்னிப் போரில் நடந்தது உனக்குத் தெரியாதா? என்று அவரிடம் அடித்து மனச்சாட்சி கேட்டிருக்கிறது.
கூடவே, ஓ! கோத்தபாய ராஜபக்சவே! நீ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது நடந்த தமிழின அழிப்பால் தானே தமிழ் மக்கள் காணாமல் போன தங்கள் பிள்ளைகளை, உறவுகளைத்தேடி அழுது புலம்புகின்றனர்.
காணாமல் போன தங்கள் பிள்ளைகளை நினைந்து இந்த உலகைவிட்டுப் பிரிந்து போன பெற்றோர்கள் எத்தனை? இதெல்லாம் உனக்குத் தெரியாதா?
அதோ! வடக்கு கிழக்கில் தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்து என் பிள்ளை எங்கே? என்று நிலத்தில் வீழ்ந்து அழும் தாயின் கண்ணீர் உனக்குத் தெரியவில்லையா?
எங்ஙனம் நீ நிம்மதியாக இருக்கிறாய்? இந்தப் பாவம், பழி உன்னைச் சும்மா விடுமா? அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ செல்வத்தை தேய்க்கும் படை என்றானே வள்ளுவன் உனக்கு தெரியாதா?
பெற்ற பிள்ளையை காணாமல் பரிதவிக் கும் தாயின் அவலம் உன்னை வாட்டுவதை நீ உணரவில்லையா?
உன்னை மகிந்த காப்பாற்றலாம்; ஜனாதிபதி மைத்திரி காப்பாற்றலாம்; ஏன் அமைச்சர் மங்கள சமரவீரவும் காப்பாற்றலாம். ஆனால் நீ செய்த பாவம், கர்மவினையாகி உன்னை வாட்டுகிறதல்லவா? இப்படி கோத்தபாய ராஜபக்சவின் மனச்சாட்சி அவரிடம் கேட்க,
எதுவும் செய்ய முடியாமல் சொல்லி விடுகிறேன் ... சொல்லி விடுகிறேன் ... போரில் ஆங்காங்கே குற்றச் செயல் நடந்தது உண்மை. அதை நான் நிராகரிக்கவில்லை.
ஆம், காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்காக சதா போராடும் பெற்றோர்களின் கண்ணீர்தான் கோத்தாவை வாய் திறக்க வைத்துள்ளது.