இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க முடியுமெனவும், விசாரணைகளில் ஈடுபட முடியாது என இலங்கை அரசாங்கம் கூறியவை பொய்யான கருத்துக்கள் எனவும் தெற்காசிய சட்ட கல்வி மையத்தின் இணை ஸ்தாபகரும் சட்டத்தரணியுமான நிரான் அன்கேற்றல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க முடியாதென அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. வட.மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் சனல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கலம் மெக்ரே போன்றவர்கள், இவ்வாறு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை கலப்பு நீதிமன்றமாக ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி நிரான் அன்கேற்றல் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகமொன்றிற்கு மேற்குறித்த விடயத்தைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
“இலங்கை அரசியல் சாசனத்தில் நீதிபதிகளின் இனம் பற்றி எவ்வித விபரங்களும் சுட்டிக்காட்டப்படவில்லை. சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானது. சத்தியப் பிரமாணத்தில் அரசியல் சாசனத்தை பாதுகாத்து பேணுவதாகவே உறுதியளிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவைப் போன்று இலங்கையில் சத்தியப் பிரமாணம் செய்யப்படுவதில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் ஏன் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள முடியாது என புரியவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.