அாிகரிக்கும் நம்பிக்கையீனம்- செ. சிறி­தரன்

இலங்கை அரசின் மீது வாள்­போல தொங்கிக் கொண்­டி­ருப்­ப­தாகக் கூறப்­பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 2015 ஆம் ஆண்டு தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் அர­சுக்கு மேலும் இரண்டு வருட கால அவ­காசம் வழங்கி 2017 இல் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்தத் தீர்­மா­னத்தின் மூலம் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள இரண்டு வருட காலம் என்­பது, அர­சுக்கு வழங்­கப்­பட்ட கால அவ­காசம் என்று குறிப்­பி­டு­வது சரி­யான சொற்­பி­ர­யோ­க­மல்ல என்­பது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரா­கிய பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனின் வாத­மாகும்.

இலங்­கைக்கு எதி­ராக 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்­பட்ட மனித உரிமைப் பேர­வையின் 30/1 தீர்­மா­னத்தை அரசு நிறை­வேற்­று­வதை ஐநா மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் மேற்­பார்வை செய்­வது அல்­லது கண்­கா­ணிப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் என்றே இதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்று அவர் வியாக்­கி­யானம் செய்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டு, ஆட்சிப் பொறுப்பை ஏற்­றதன் பின்னர் இடம்­பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் அமர்வில் நிறை­வேற்­றப்­பட்ட முத­லா­வது தீர்­மா­னத்­திற்கு அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கி அதனை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. அவ்­வாறு நிறை­வேற்­று­வ­தற்­கான ஒரு கால அவ­கா­சமும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அக்­கா­லப்­ப­கு­தியில் ஏற்­ப­டு­கின்ற முன்­னேற்­றத்தைக் கண்­கா­ணிக்­கின்ற பொறுப்பு ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­திற்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் குறிப்­பிட்டு கூறுத்­தக்க வகையில், ஐ.நா. தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வதில் முன்­னேற்­றங்கள் காணப்­ப­ட­வில்லை. இந்த நிலை­யி­லேயே நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக, மீண்டும் அதன் இணை அனு­ச­ர­ணை­யுடன் இரண்­டா­வது பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

முத­லா­வது பிரே­ர­ணையில் கூறப்­பட்­டுள்ள அனைத்து விட­யங்­க­ளையும் அரசு முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும் என்­பதே இந்தப் பிரே­ர­ணையின் வலி­யு­றுத்­த­லாகும். இரண்டாம் முறை­யாக அர­சுக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்ள போதிலும், பிரே­ர­ணையை நிறை­வேற்­றாமல், கடந்த முறையைப் போல காலத்தை இழுத்­த­டித்தால் என்ன நடக்கும் என்­பது குறித்து எந்­த­வி­த­மான நிபந்­த­னையும் இதில் விதிக்­கப்­ப­ட­வில்லை.

இலங்கை அர­சாங்­கத்தைச் செயற்­ப­டு­வ­தற்குத் தூண்டும் வகையில் நிபந்­த­னையைப் போன்று எந்­த­வி­த­மான வலி­யு­றுத்­த­லு­மின்றி இரண்­டா­வது பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது முத­லா­வது விடயம்.

இரண்­டா­வது விடயம் முதல் பிரே­ர­ணையில் கூறப்­பட்­டுள்­ள­வாறு கலப்பு நீதி­வி­சா­ரணைப் பொறி­மு­றையை ஏற்­ப­டுத்த மாட்டோம் என்று அர­சாங்கம்; தெளி­வான ஒரு நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த நிலை­யி­லேயே, அத்­த­கைய பொறி­மு­றை­யொன்றை உரு­வாக்கி உண்­மையைக் கண்­ட­றி­யவும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கவும், ஏற்­க­னவே நிகழ்ந்­ததைப் போன்ற மனித உரிமை மீறல்­களோ அல்­லது, சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல் சம்­ப­வங்­களோ இடம்­பெற மாட்­டாது என்­பதை உறுதி செய்­யவும் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பது உள்­ளிட்ட விட­யங்­களைக் கொண்ட பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இது மிகவும் வேடிக்­கை­யா­னது. பாதிக்­கப்­பட்டு நீதிக்­காக ஏங்­கு­கின்ற மக்­களைப் பொறுத்­த­மட்டில், இது விப­ரீ­த­மா­ன­தும்­கூட.

பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்ட சூட்­டோடு சூடாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வடக்கே பலா­லி­யிலும், தெற்கே குரு­ணா­க­கலிலும் இரண்டு வேறு வேறு நிகழ்­வு­களில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் யுத்­தத்தை வெற்றி கொண்ட படை­யி­ன­ருக்கு எதி­ராகப் போர்க்­குற்­றங்கள் சுமத்­தப்­ப­ட­மாட்­டாது. அவர்­க­ளுக்கு எதி­ராக விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­மாட்­டாது என்­பதை ஆணித்­த­ர­மாகத் தெரி­வித்­துள்ளார்.

அரச படை­யினர் போர்க்­குற்றச் செயல்­களில் ஈடு­ப­ட­வில்லை என்­பது முன்­னைய அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும். அதே நிலைப்­பாட்­டையே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தலை­மை­யி­லான இந்த நல்­லாட்சி அர­சாங்­கமும் கொண்­டி­ருக்­கின்­றது. போர்க்­குற்றச் செயல்­களில் ஈடு­ப­டாத படை­யினர் மீது ஏன் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்­பது அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரா­கிய அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவின் கேள்­வி­யாகும். குற்றச் செயல்­களில் ஈடு­ப­டாத படை­யி­ன­ருக்கு எதி­ராக விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­மாட்­டாது. அது அவ­சி­ய­மில்லை என்­பது அவ­ரு­டைய கூற்று.

குற்றச் செயல்­களில் ஈடு­ப­ட­வில்லை என்றால் யுத்த மோதல்­க­ளின்­போது பொது­மக்கள் கொல்­லப்­பட்­டி­ருக்கின்றார்கள். பல்­வேறு குற்றச் செயல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. ஆட்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். எனவே, அங்கு என்ன நடந்­தது, உண்­மை­யான நிலை­மைகள் என்ன என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டிய அவ­சியம் எழுந்­தி­ருக்­கின்­றது. உண்­மையைக் கண்­ட­றிந்­தால்தான், இது­போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் நடக்­காமல் தடுக்க முடியும் என்­பது ஐ.நா­.வி­னதும் சர்­வ­தே­சத்­தி­னதும் நிலைப்­பா­டாகும். எனவே அதற்­கா­கத்தான் விசா­ர­ணைகள் அவ­சியம் என வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

இந்த நிலையில் ஒரு விசா­ர­ணையை எதிர்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் அஞ்ச வேண்­டி­ய­தில்லை. அத்­த­கைய விசா­ர­ணையை எதிர்கொள்­வ­தற்கு முது­கெ­லும்பு இல்­லையா என சுமந்­திரன் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். இந்த முது­கெ­லும்பு விவ­காரம் அர­சியல் விமர்­ச­கர்கள் மத்­தியில் பெரும் தாக்­கத்தைச் செலுத்­தி­யி­ருந்­ததை ஊட­கங்­களில் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் இந்த நல்­லாட்சி அர­சாங்க உரு­வாக்­கத்தின் பிதா­ம­கர்­களில் ஒரு­வ­ராகக் கரு­தப்­ப­டு­கின்ற முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மற்றும் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன போன்றோர் சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுக்கோ அல்­லது விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கோ அவ­சி­ய­மில்லை. உள்­ளக விசா­ர­ணை­களே நடத்­தப்­படும். விசே­ட­மாக அரச படை­யினர் எந்தக் கார­ணத்தைக் கொண்டும் போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டார்கள் என்று அறுத்து உறுத்து தெளி­வாகக் கூறி­யி­ருக்­கின்­றார்கள். சர்­வ­தேச விசா­ர­ணையை எதிர்­கொள்­வ­தற்கு முது­கெ­லும்பு இருக்­கின்­றதா என கேட்­கப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே, அவர்­க­ளு­டைய இந்த கூற்­றுக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன என்று எண்­ணத்­தோன்­று­கின்­றது. அத்­துடன், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முக்­கிய தலை­வர்கள் கலந்து கொண்­டி­ருந்த (ஓரிரு) கூட்­டத்­தி­லேயே இந்தக் கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதும் குறிப்பிடத்­தக்­கது.

கலப்பு நீதி விசாணைப் பொறி­மு­றையின் ஊடா­கவே பொறுப்பு கூறு­த­லுக்­கான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் வில­க­வில்லை. அவர் தொடர்ந்தும் அதே நிலைப்­பாட்­டி­லேயே இருந்து வரு­கின்றார். ஆனால் அதற்கு எதிர்­மா­றான நிலைப்­பாட்­டையே அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்­றது. இருந்தும் அர­சுக்கு மேலும் இரண்டு வருட கால அவ­காசம் மனித உரி­மைகள் பேர­வை­யினால் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்தக் காலப்­ப­கு­தியில் அரசு தனது கட­மை­க­ளையும் பொறுப்­புக்­க­ளையும் உரிய முறையில் நிறை­வேற்­றுமா என்­பது பாதிக்­கப்­பட்ட மக்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­புக்­க­ளிலும் சந்­தே­கத்­திற்கு உரி­ய­தா­கவே இருக்­கின்­றது.

உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாமல், ஏற்­க­னவே ஒன்­றரை வருட காலப்­ப­கு­தியை அரசு இழுத்­த­டிப்பு செய்­தி­ருப்­பதை பலரும் சுட்­டிக்­காட்டி விமர்­சித்­துள்­ளார்கள். ஆனால் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன், இது, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் இலங்கை அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களைக் கண்­கா­ணிப்­ப­தற்­கான அவ­கா­ச­மாகக் கொள்ள வேண்டும் என கூறி­யுள்ளார்.

அவ்­வாறு மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் கண்­கா­ணிப்­புக்­கான சந்­தர்ப்பம் என்றால், அர­சாங்கம் முறை­யாகச் செயற்­ப­டு­மாறு சரி­யாகக் கண்­கா­ணிப்­ப­தற்கு ஐ.நா. தவ­றி­விட்­டது என்­ப­து­தானே பொருள்? இனி வரும் இரண்டு ஆண்டு காலப்­ப­கு­தியில் அது சரி­யாகச் செயற்­பட வேண்டும் - சரி­யான முறையில் அர­சாங்­கத்தைச் செயற்­பட வைக்க வேண்டும் என்­று­தானே கொள்ள வேண்டும்?

ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை என்­பது உலக நாடுகள் பல­வற்றை உறுப்­பி­னர்­க­ளாகக் கொண்­டதோர் உய­ரிய சபை­யாகும். ஆனாலும், அங்கு கொண்டு வரப்­ப­டு­கின்ற தீர்­மா­னங்­களை சம்­பந்­தப்­பட்ட நாடுகள் முறை­யாகக் கடைப்­பி­டித்து நிறை­வேற்ற வேண்டும் என்ற அழுத்­தத்தைக் கொடுப்­ப­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான அதி­கார வலுவை அது கொண்­டி­ருக்­க­வில்லை.

ஓர் தீர்­மா­னங்­களின் ஊடாக சம்­பந்­தப்­பட்ட நாடு­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­க­லாமே தவிர அவற்றை நிறை­வேற்ற வேண்டும் எனக் கூறி, அவற்றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களின் மூலம் நிர்ப்­பந்­திப்­ப­தற்­கான செய­லு­ரிமை அத­னிடம் இல்லை. இந்த நிலையில் அடுத்து வரு­கின்ற இரண்டு வரு­டங்­களில் அர­சாங்­கத்தை ஐ.நா .எவ்­வாறு செயற்­படச் செய்யப் போகின்­றது என்­பது தெரி­ய­வில்லை.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை முன்­வைத்­துள்ள கோரிக்­கை­யின்­படி, இலங்­கையில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரு­டைய அலு­வ­லகம் ஒன்றை நிறுவி, அதன் ஊடாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் நட­வ­டிக்கை எடுக்­குமா என்­பது தெரி­ய­வில்லை. அத்­துடன் அத்­த­கைய அலு­வ­லகம் ஒன்றை இலங்­கையில் நிறுவிச் செயற்­ப­டு­வ­தற்கு அரசு உடன்­படும் என்று கூறு­வ­தற்­கில்லை.

எனவே, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் ஊடாக இலங்­கைக்கு அழு­தத்­தைதக் கொடுக்­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் நகர்வு வெற்­றி­ய­ளிக்­குமா என்­பது சந்­தே­க­மா­கவே தோன்­று­கின்­றது.

யுத்­தத்­தினால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்கள்; தமிழ் மக்கள். அந்த மக்­களின் ஏகோ­பித்த அர­சியல் தலை­மை­யாகத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பே திகழ்­கின்­றது. எனவே, அந்த மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும், அவற்­றுக்­கு­றிய செயற்­பா­டு­க­ளையும், அர­சியல் நகர்­வு­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்­டி­யது கூட்­ட­மைப்பின் தலை­யாய கட­மை­யாகும். அந்தக் கட­மையை, கடந்த எட்டு வரு­டங்­களில் அது எந்த அள­வுக்கு முன்­னேற்­ற­க­ர­மான முறையில் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றது என்­பது கேள்­விக்­கு­ரிய விட­ய­மா­கவே உள்­ளது.

அர­சாங்­கத்­துடன் நேர­டி­யான செயற்­பா­டு­களின் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தென்­பது சாத்­தி­ய­மற்­றது என்ற கார­ணத்­திற்­காக சர்­வ­தே­சத்தின் துணை­யுடன் - சர்­வ­தே­சத்­துடன் இணைந்து காய் நகர்த்­தல்­களை மேற்­கொண்டு அர­சாங்­கத்தை வழிக்குக் கொண்டு வரு­வ­தற்­கான இரா­ஜ­தந்­திரச் செயற்­பா­டு­களை கூட்­ட­மைப்பின் தலைமை முன்­னெ­டுத்­தி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இது கிட்­டத்­தட்ட ஓர் அர­சியல் பிர­சா­ர­மா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­று­கூட குறிப்­பி­டலாம்.

முன்­னைய அர­சாங்­கத்தைப் பொறுத்­த­மட்டில் இத்­த­கை­ய­தொரு நட­வ­டிக்கை சரி­யா­ன­தாகத் தோற்­றலாம். ஆனால், புதிய அர­சாங்­கத்தை – நல்­லாட்­சிக்­கான அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வதில் பெரும் பங்­கினை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையே ஆற்­றி­யி­ருந்­தது என்றும் பெரு­மை­யாகப் பேசப்­ப­டு­கின்­றது. இதற்­காக அந்தத் தலைமை உயிரைப் பணயம் வைத்துச் செயற்­பட்­ட­தாகக் கூட மின்­னஞ்சல் வழி­யான பிர­சாரத் தக­வல்­களில் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. அத்­த­கைய செயற்­பாட்டின் ஊடா­கவே தமிழ் மக்­களை ஓர­ணியில் திரட்டி, முன்­னைய ஜனா­தி­ப­தி­யையும் ஆட்­சி­யையும் தேர்­தல்­களில் தோல்­வி­யுறச் செய்­யப்­பட்­டது என்றும் கூறப்­ப­டு­கின்­றது.

புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான மேல் மட்ட வேலை­களை கூட்­ட­மைப்பின் தலைமை முன்­னெ­டுத்­தி­ருக்­கலாம். அதில் சந்­தே­கப்­ப­டு­வ­தற்கு எது­வு­மில்லை. அன்­றைய சூழலில் அது உயிரைப் பணயம் வைக்­கின்ற ஒரு கைங்­க­ரியம் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. ஆனால், தலை­வர்கள் முடிவு செய்­வ­தற்கு முன்பே, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முன்­னைய அர­சாங்­கத்தைத் தொடர்ந்தும் ஆட்­சியில் வைத்­தி­ருக்கப் போவ­தில்லை என்ற தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருந்­தார்கள் என்­பது உல­க­றிந்த இர­க­சி­ய­மாகும்.

ஏனெனில் கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளை­விட, அதிக அளவில் உயி­ரச்­சு­றுத்­தல்­க­ளையும், பல்­வேறு வழி­க­ளி­லான ஆபத்­துக்­க­ளையும் கிரா­மங்­களில் அடி­மட்­டத்தில் வாழ்ந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளுடன் நிலை­கொண்­டி­ருந்த இரா­ணு­வத்­தி­னரின் ஊடாக எதிர்­கொண்­டி­ருந்­தார்கள்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ­விற்­காக இரா­ணு­வத்­தினர் தேர்தல் பிர­சார வேலை­களில் அப்­போது ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தார்கள். அவ­ருக்கு எதி­ராக வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில் எந்­த­வொரு தனி மனி­தனும் மன­த­ள­வில்­கூட தீர்­மானம் மேற்­கொண்­டு­விடக் கூடாது என்­பதில் கண்ணும் கருத்­து­மாக இருந்ரு இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் இரவும் பகலும் ஒய்­வின்றிச் செயற்­பட்டுக் கொண்­டி­ருந்­தார்கள். ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­பட்டு, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டதன் பின்னர், இரா­ணுவம் மற்றும் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் நட­வ­டிக்­கைகள் தீவிரம் பெற்­றி­ருந்­தன.

அத்­த­கைய ஒரு சூழ­லில்தான் தமிழ் மக்கள் புதிய ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைத் தெரிவு செய்­தி­ருந்­தார்கள். அது மட்­டு­மல்­லாமல், அடுத்து நடத்­தப்­பட்ட பொதுத் தேர்­த­லிலும், நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாகத் தக்க வகையில் அவர்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். ஆனால், தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை, அமை­தி­யா­ன­தொரு புதிய வாழ்க்­கைக்­கான அவர்­க­ளு­டைய அர­சியல் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றத் தக்க வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும்­சரி, அவ­ருக்கு அடுத்த நிலையில் பிர­த­ம­ராக உள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­க­மும்­சரி, செயற்­ப­ட­வில்லை. செயற்­படத் தவ­றி­யி­ருக்­கின்­றனர்.

அதே­நேரம், புதிய அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும், அந்த ஆத­ரவின் ஊடான அர­சியல் செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியாயம் கிடைப்­ப­தற்கும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும் உரிய பலன் தரத்­தக்க வகை­யி­லான அர­சியல் நகர்­வு­களை மேற்­கொள்­ள­வில்லை. அர­சுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற கரி­சனை மேலோங்­கி­யி­ருக்­கின்­றதே தவிர, பாதிக்­கப்­பட்ட தமது மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு, படிப்­ப­டி­யா­க­வா­வது தீர்வு காண வேண்டும் என்­ப­தற்­கான அழுத்­தத்தை கொடுத்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

அர­சாங்­கத்தை நிர்ப்­பந்­தித்துச் செயற்­படச் செய்தால், அது எதி­ர­ணி­யி­ன­ரா­கிய மஹிந்த குழு­வினர் மீண்டும் அர­சி­யலில் செல்­வாக்கு பெறு­வ­தற்கு வழி­ச­மைத்­து­விடும் என்ற கரி­ச­னை­யி­லேயே கூட்­ட­மைப்புத் தலை­மையின் கவனம் செறிந்து குவிந்­தி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் மீது எந்த வகை­யி­லா­வது செல்­வாக்கைச் செலுத்தி, மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வேண்டும் என்­பதில் நடை­முறை ரீதி­யி­லான செயற்­பா­டு­களை அத­னிடம் காண முடி­ய­வில்லை. அர­சாங்­கத்­திற்கு வலிக்­கா­மல் அழுத்தம் கொடுக்­கின்ற ஒரு போக்­கையே அது கடைப்­பி­டித்து வரு­கின்­றது.

பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது வாழ்க்­கைக்கு அடித்­த­ள­மா­கிய காணி உரி­மைக்­காக, இரா­ணுவ முகாம்­களின் எதிரில் - துவக்கு முனை­களில் வீதியில் இறங்கி போராட்­டத்தை நடத்தி சிறுகச் சிறுக தமது காணி­களை மீட்டு வரு­கின்­றார்கள். அதே­நேரம், வீதி­யோ­ரங்­களில் வெய்­யிலில் காய்ந்தும், பனியில் நனைந்தும், கொட்டும் மழையில் தோய்ந்து நுளம்பு கடிக்கு மத்­தியில் வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்ட தமது பிள்ளைகளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட மற்றுமொரு தரப்பு மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களுக்கு ஆதரவளித்து, வழிநடத்துவதிலும் கூட்டமைப்பின் தலைமை தவறியிருப்பதையே காண முடிகின்றது. இதனால் கூட்டமைப்பின் தலைமைக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்து செல்கின்ற தன்மையும் காணப்படுகின்றது. தாங்கள் நம்பி வாக்களித்த ஜனாதிபதி மீதும், புதிய அரசாங்கத்தின் மீதும் அந்த மக்கள் எவ்வாறு நம்பிக்கை இழந்து வருகின்றார்களோ அதேபோன்று கூட்டமைப்பின் தலைமை மீதானதொரு நிலைமையை நோக்கி பாதிக்கப்பட்ட மக்கள் நழுவிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியதாகப் பெருமையாகச் சொல்லப்படுகின்றது. அத்தகைய செல்வாக்கு மிக்க நிலையில், தமிழ் மக்களுடைய காணி விவகாரத்திற்கும், அது போன்ற ஏனைய பிரச்சினைகளுக்கும், தீர்வு காணலாம்தானே என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாதிருக்கின்றது. அசாங்கத்துடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தியோ அல்லது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடன் கொண்டுள்ள தொடர்புகளையோ பயன்படுத்தி, இராஜதந்திர நகர்வொன்றை மேற்கொள்ளலாம்தானே? அதன் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தத்தைப் பிரயோகித்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் அல்லவா?

இத்தகைய அழுத்தமானது, இலங்கை அரசாங்கம் ஐ.நா. பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு சர்வதேச மட்டத்தில் வழங்கப்பட வேண்டிய அரசியல், சமூக, பொருளாதார, இராணுவ ரீதியிலான அழுத்தங்களுக்கு ஒரு முன்னோடியாகக் கூட அமையலாம். அதன் ஊடாக அடுத்த இரண்டு வருட காலத்தில் அரசாங்கம் ஐநா பிரேரணை நிறைவேற்றத்திற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கச் செய்யவும் வழியேற்படலாம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila