சர்வதேச குற்றவியல் நீதிமன்று அவசியம்! இருவருட கால அவகாசம் நீதியை பெற்றுத்தராது - த.தே.ம.மு


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இருவருட கால அவகாசத்துக்குள் பொறுப்புக்கூறும் என நீதியை எதிர்பார்த்திருப்பது ஏமாற்றத்தையே கொடுக்கும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந் திரகுமார் பொன்னம்பலம், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்கள் மீது கடந்த காலங்களில் மேற் கொள்ளப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்கு நீதி தேடும் காலப்பகுதியாக தான் இந்த காலகட்டம் அமைந்துள்ளது. துரதிஸ்டவசமாக தமிழர் தரப்பு அதனை தவற விட்டு கொண்டிருப்பது தான் வேதனைக்குரியது. அவற்றை திட்டமிட்டு தவறவிட்டு தமது அரசியலை முன்னெடுக்கின்ற அரசியல் தலைவர்களை எந்தளவுக்கு எமது மக்கள் விளங்கி கொள்கின்றார்கள்? என்பது தொடர்பாகவும் நாங்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

மனிதவுரிமை பேரவையின் கடந்த மார்ச் மாத அமர்வு இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகவும் உள்ளது. பொறுப்புக்கூறல், மற்றும் நீதி கோரல் என்பன ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும். அப்போது தான் நடைபெற்ற இன அழிப்பு எதிர்காலத்தில் நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தி அரசியல் தீர்வை எட்டக் கூடியதாக இருக்கும். 

இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய விடயங்களாக உள்ளது. வேறு வேறாக பார்ப்பது தவறு. சர்வதேச மட்ட த்தில் நீதியும் நல்லிணக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக கூறப்படுகின்றது. 
கடந்த ஜெனிவா மனிதவுரிமை பேரவையில் எவ்வாறான வாய்ப்புக்கள் இருந்தது? அதனை எவ்வாறு பயன்படுத்தியிருக்க வேண்டும் என விளங்கப்படுத்த வேண்டிய கட்டாய தேவைகள் இருக்கின்றன. தமிழ் மக் கள் தற்போது கோபத்தோடும் வேதனையோடும் இருப்பதற்கு காரணம், மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக கருதப்படுகின்றமையால். 

அதாவது அரசாங்கத்தை தப்ப விட்டிருக்கின்றோம். எங்களுடைய பொறுப்புக்கூறல் மீண்டும் இரண்டு வருடத்திற்கு முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளது. என்று ஒரு பரவலான கருத்து மக்கள் தரப்பில் உள்ளது.

இந்த கால அவகாசத்திற்கு இணங்கிய தரப்புக்கள், ஐ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இன்னும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியிருக்காவிட்டால் இலங்கை அரசு சர்வதேசத்தின் பிடியிலிருந்து முற்றுமுழுதாக தப்பியிருக்கும். என நியாயப்படுத்துகின்றார்கள். 
எனினும் இரண்டுவருட கால அவகாசம் கிடைத்தது இலங்கையை தப்பிக்க வைக்கும் செயற்பாடே என அனைவருக்கும் தற்போது தெரிந்துள்ளது. 

பொறுப்புக்கூறல், மற்றும் நீதி விசாரணை தொடர்பில் கலப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்த தாம் தயாரில்லை என இந்த அரசாங்கதரப்பினர் மிக தெளிவாக பகிரங்கமாக கூறியுள்ளது. இரண்டாவதாக உள்ளக நீதிமன்றம் கூட இராணுவத்தையோ, ராஜபக்ஷ குடும்பத்தையோ விசாரிக்க தாம் அனுமதிக்க போவதில்லை என தற்போதைய அரசாங்கம் மிக தெளிவாக கூறியுள்ளார்கள்.

இந்த பின்னணியில் தான் இரண்டு வருட கால அவகாசம் பொறுப்புக்கூறலுக்கு  வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இரண்டு வருட கால அவகாசத்தில் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட போவதில்லை என்பது தான் யதார்த்தம்.
ஐ.நா மனிதவுரிமை பேரவையில் யூ.பி.ஆர். என்ற முறை ஒன்று உள்ளது. இந்த யூ.பி.ஆர் முறைமையில் தான் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகள் மனிதவுரிமை போன்ற விடயங்களில் சரியாக செயற்படுகின்றதா? என வருடத்திற்கு ஒருமுறை விசாரணை செய்யப்படும். 

ஆகவே இவ்வாறான தீர்மானம் ஏற்கனவே அமுலில் உள்ள நிலையில், இலங்கை தொடர்பில் விசேஷமாக தீர்மானம் நிறைவேற்ற காரணம் அவசியம் இல்லை என்று தான், இலங்கை மீதான தீர்மானம் 2012 இல் கொண்டுவரப்பட்ட போது ராஜபக்ஷவை ஆதரிக்கும் நாடுகளான சீனா, ரஷ்யா, கியூபா, போன்ற நாடுகள் குறித்த தீர்மானத்தை எதிர்த்ததுக்கு காரணமாகும்.
எனினும் இலங்கையில் நடைபெற்றது பாரிய யுத்த மீறல்கள் அவற்றை யூ.பி.ஆர். முறைமை ஊடாக விசாரணை செய்ய முடியாது. இதுவொரு விசேஷமான விடயம். 

இந்த நிலையில் 2012 ஜெனிவா தீர்மானத்தின் படியிலானபொறுப்புக்கூறலை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், இலங்கையை சர்வதேச பாதுகாப்பு சபை ஊடாக சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விடயத்தை பகிரங்காமாக கேட்டு வருகின்றோம். இந்த விடயம் நடைமுறை சாத்தியமற்றது எனவும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இலங்கை தொடர்பில் 2012 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ராஜபக்ஷ அரசாங்கத்தை சிங்கள மக்களிடமிருந்து ஓரம் கட்டி தாம் விரும்புகி ன்ற அரசை ஆட்சியேற்றுவது தான் நோக்கம் எனவும், மாறாக பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக அமையாது என அன்றே நாங்கள் கூறியிருந்தோம். 

அடுத்து, பாதுகாப்பு சபைக்கு இலங்கையை கொண்டு செல்ல வேண்டும் என்றால், பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் அனுமதியை பெறமுடியுமா? என்பது தான். இந்த அரசாங்கத்தை காப்பற்றும் முயற்சியில் அமெரிக்காவின் தலைமையில் மேற்கும் இந்தியாவும் தான் செயற்படுகின்றது.

  ஆனால் அதேசமயம் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பலவீனப்பட்டு போகின்றது. ராஜபக்ஷவின் ஆட்சியை கைப்பற்றும் நிலைக்கு செல்கின்றது. என்பதனை இந்த நாடுகள் அறிந்து வைத்துள்ளார்கள். 
இந்த அரசை காப்பற்றும் அதேவேளை மீண்டும் ஒரு தடவை தாம் விரும்பாத நபர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்களை ஐ.நா தீர்மானத்தை வைத்து தமது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்காக தான் தொடர்ந்தும் இந்த தீர்மானத்தை உயிரோடு வைத்துள்ளார்கள்.

இலங்கையை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வது மேற்கு நாடுகள் தான் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுடைய விருப்பங்களை பிரதிபலிக்கும் ஐ.நா சபையில் எமது தமிழ்த் தலைவர்கள் உறுதியோடு இருந்திருந்தால் இலங்கையை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்குள் மேற்குலம் சென்றிருக்கும். 

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.
பாதுகாப்பு சபைக்கு இலங்கை விடயம் சென்ற பின்னர், அது சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வது ஐந்து நாடுகளின் பூகோள அரசியலில் தங்கியுள்ளது.
அமெரிக்கா இலங்கையை பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்றாலும் கூட அதனை சீனாவும், ரஷ்யாவும் எதிர்க்கும் என கூறுகின்றனர். 

இது ஒரு அப்பட்டமான பொய். ஐ.நா பாதுகாப்பு சபையில் சீனா தனது வீட்டோ அதிகார முறையை மிக குறைந்த அளவில் தான் பாவித்துள்ளது. வீட்டோ அதிகாரத்தை ரஷ்யா தான் பயன்படுத்தியிருந்தது. அதுவும் சோவியத் யூனியன் காலத்தில் தான் அதிகளவில் பயன்படுத்தியிருந்தது. பொதுவாக மேற்குலகத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தான் இலங்கையை ரஷ்யா பார்க்கின்றது. மாறாக எந்த நலன்களும் இல்லை.

சீனாவும், ரஷ்யாவும் இலங்கையை பாதுகாக்கும் என கூறும் தரப்புக்கள் இந்த சர்வதேச அரசியலை முற்றுமுழுதாக மூடி மறைத்து தமிழ் மக்களை ஏமாற்றி தங்கள் எஜமான்களை பாதுகாக்கும் கருத்தாக தான் இருக்கின்றது. அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டுவரும் போது அதனை எதிர் க்கப்போவதில்லை. பிரான்சும் பிரித்தானியாவும் 1991 ஆம் ஆண்டுக்கு பின்னர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதே இல்லை.

ஆகவே தமிழ் தலைமைகள் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றே ஆக வேண்டும், அதன் மூலமே எமக்கு நீதி கிடைக்கும் என்ற விடயத்தில் உறுதியாக இருந்திருந்தால் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்காமல் குற்றவியல் நீதிமன்றத்துக்கான அத்திபாரத்தை ஐ.நா மனிதவுரிமை சபையின் கடந்த அமர்வில் இட்டிருக்க முடியும். 

இலட்சக்கணக்கான மக்கள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட நிலையில், அதை மூடி மறைக்கும் செயற்பாடுகளில் இலங்கை அரசு தீவிரமாக செயற்பட்டு கொண்டுள்ள நிலையிலும், அந்த அரசாங்கத்தை அம்பலப் படுத்த வேண்டிய பொறுப்பு சாதரணமான எதிர்க்கட்சி தலைவருடையது, ஆனால் சம்பந்தன் ஒரு தமிழராக இருந்தும் அதனை செய்யவில்லை. மாறாக அரசாங்கத்தை காப்பாற்றும் செயற்பாடுகளில் தான் அவர் ஈடுபடு கின்றார்.  என த.தே.ம முன்ணனி தலைவர் கஜேந்திரகுமார் தனது உரையில் சாடியுள்ளார்.                                 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila