செய்யக்கூடியதை செய்வதில் என்ன தடை?


மத்திய மாகாண அரசுகள் தொடர்பிலேயே இப்போது விமர்சனங்கள் எழுகின்றன.
மாகாண அரசு தனக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டும்.

இதேபோல மத்திய அரசும் தனது கடமையைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். இக் கருமங்கள் ஒழுங்காக நடக்குமாயின் எத்தனையோ பிரச்சினைகள் சுலபமாக தீர்ந்து போகும்.

ஆனால் அதுதான் நடப்பதாக இல்லை. மத்திய அரசைப் பொறுத்தவரை எதையும் காலம் தாழ்த்துவதை கடைப்பிடிக்கிறது.

எந்தச் செயற்பாடும் ஒழுங்காக - விரைவாக நடக்கவில்லை என்பதைக் கூறித்தானாக வேண்டும். ஆட்சி, அரசு இவையயல்லாம் தனி மனித ஆளுமைக்குட்பட்டவைதான்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உற்சாகத்தை ஒரு கணம் பார்த்தால் இதன் பொருள் தெரியவரும்.
ஓய்வு உறக்கமின்றி நரேந்திர மோடி பாரதம் முழுவதற்கும் பறந்து செல்கிறார். அதனால் அவரால் சிலவற்றைச் சாதிக்க முடிகிறது.

செய் என்று உத்தரவிட்டால் அது நடக்கிறது. ஆனால் நம் நாட்டில் அதுதான் இல்லை. செய் என்று சொல்வதற்கும் சொல்லியதைச் செய்வதற்கும் யார் உளர் என்பது போல நிலைமை உள்ளது.

பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட சில போட்டிப் பரீட்சைகளின் முடிவுகள் இன்னமும் வந்து சேரவில்லை.

பதவி வெற்றிடம் என்று விண்ணப்பம் கோரி விட்டு, அந்த வெற்றிடத்தை உரிய காலப் பகுதியில் நிரப்பாதபோது அதை நினைத்தே காலத்தை வீணடிக்கும் இளைஞர் சமூகத்தின் நிலைமையை அரசு ஒரு கணம் சிந்திக்க வேண்டும். இதேபோன்றுதான் மாகாண அரசும்.

மாகாண அரசு தன்னால் செய்யக்கூடிய விடயங்களை செய்வதில் பின்னடிப்பதென்பது தான் மக்களை துன்பப்படுத்தும்.

எதையும் விரைவாகச் செய்தல் வேண்டும். மாகாண அரசு செயற்றிறன் வாய்ந்ததாக இருக்குமாயின் அந்தந்த மாகாணங்களுக்கு உட்பட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையைச் சுலபமாக்க முடியும்.

ஆனால் மாகாண அரசுகளின் போக்கும் செயற்பாடும் மந்தமாக இருப்பதைக் காணமுடிகிறது.
தேவையற்ற விவகாரங்களைத் தூக்கி நிறுத்தி அவைக் கூட்டங்களை வினைத்திறனற்றதாக்கி காலம் கழிப்பதே தொழிலாயிற்று.

இதன்காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
ஆக, மத்திய மாகாண அரசுகள் முதலில் தங்கள் பணி நிலைகளைக் காலம் கடத்தாமல் விரைவுபடுத்த வேண்டும்.

அமைச்சர்கள் தத்தம் அமைச்சுக்குட்பட்ட நிர்வாக விடயங்களை நேரில் சென்று கவனிப்பதும் அவசியம்.
எதிர்கால அரசில் இலாபத்தோடும் அடுத்த தேர்தலிலும் மக்கள் நமக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நினைப்போடும் செயற்பட்டால் இந்த ஜென்மத்தில் நிர்வாகத்தை திறமை யாக்க முடியாது என்பதால்,
அரசு என்ற மனநிலையோடு அரசுக்குரிய கடமைகள் பக்கச்சார்பின்றி ஆற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக வாழ்வர். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila