தமிழர்கள் ஒற்றுமைப்படாவிட்டால் இனமானத்தின் கூர்மை எதிரிகளால் முறிக்கப்படும்

pol08-600x401

பிறந்திருக்கும் ஹேவிளம்பி வருடத்தை இலங்கைத் தமிழ் மக்கள் கொண்டாடவில்லை. யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ்மக்களின் வாழ்விடங்களில் நாளாந்தம் மரணம் நிகழ்ந்தது. வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. அகதி முகாம்களில் ஒருவேளை உணவுக்காக நீண்ட வரிசைகளில் தமிழர்கள் கையேந்தி நின்றார்கள்.
நல்ல நேரம்,ராசியான வர்ண உடை, மருத்து நீர் குளியல் எல்லாமும் தமிழ் மக்களுக்கு பல ஆண்டுகளாக பொருந்திப்போகவில்லை. மருத்து நீர் தேய்த்து குளித்து,ராசியான நிறத்தில் உடை அணிந்து, சுப நேரத்தில் ஆலயம் சென்று வழிபட்டால்தான் படைத்தவன் அருள் புரிவான் என்றால்,தமிழ் மக்களை இறைவன் மறந்து பல தசாப்தங்களாகிவிட்டன.
பணம் படைத்தவர்களையும்,சந்தர்ப்பவாதிகளான தமிழ் அரசியல்வாதிகளையும்,வெளிநாட்டில் வாழ்கின்ற வசதியானவர்களையும் மட்டுமே இறைவன் மறுபடி மறுபடி அருள் வழங்கி காப்பாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
அடுத்த வேளை உணவு நிச்சயமில்லாத வாழ்க்கையையும்,சொந்த நிலத்திற்கு திரும்பிச் சென்று வாழ வழியில்லாமல், அகதி முகாம்களிலும், நண்பர், உறவினர் விடுகளில் தஞ்சமடைந்து வாழ்வதையும் தலையெழுத்து என்று கருதி வாழ்கின்ற மக்களை இறைவனும் மறந்திருப்பான்.
இப்போது தமிழர் நிலத்தில் நான்கு பிரதான பிரச்சினைகளுடன் தமிழ்மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். காணாமல்போன தமது உறவினர்கள் தொடர்பாக ஒரு நியாயமான விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளவும், அதற்கான பரிகாரத்தைக் காணவும் ஏங்கித் தவிப்போர்,யுத்தத்தின் பெயரால் தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொந்த நிலத்தை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் 60 நாட்களுக்கும் மேலாக தெருவில் குடும்பங்களாக போராடிக்கொண்டிருப்போர்,படித்துப் பட்டம் பெற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் வேலை கேட்டு இளைஞர்,யுவதிகளாக வீதியில் நின்று போராடுவோர்,யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகிவிட்ட போதும் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்போரின் துயரங்கள் தொடர் கதையாக இருப்பது என பிரச்சினைகளில் தமிழர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.
இந்த நான்குவகைப் போராட்டங்களிலும் நேரடியாக சம்மந்தப்படாவிட்டாலும்,தம்மைச் சுற்றி நடப்பவற்றை எண்ணி மகிழ்ச்சி கொள்ள முடியாத மன நிலையுடனும்,சேர்ந்து போராட பொதுவான பொறிமுறை இல்லாத தமிழ் மக்களின் இயலாமையையும் எண்ணியும் வாழ்கின்ற மக்களுமாகவே தமிழ் இனம் இருக்கின்றது.
கடந்த நான்கு தசாப்த காலமாக தமிழர்கள் தம்மைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றவர்களாக ஆயுதம் ஏந்தியவர்களே இருக்கின்றார்கள் என்று தமிழ் இயக்கங்கள் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்து இருந்துவிட்டார்கள்.
ஒருவேளை தமிழ் ஈழம் கிடைத்துவிடும் அதன் பின்னர் சொந்தக் காணிகளை மீட்பதில் பிரச்சினை இருக்காது என்றும்,தொழில்துறைகளை ஆரம்பிப்பதில் தடைகள் இருக்காது என்றும்,அரச இயந்திரங்கள் கூட தமிழர் என்ற முன்னுரிமை அடிப்படையில் நடக்கும் என்றும் பெருத்த நம்பிக்கையோடு இருந்துவிடடார்கள்.
ஒருவேளை தமிழ் ஈழம் கிடைக்காவிட்டால்,நமது வாழ்க்கை எவ்வாறு இருக்கும். எவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியிருக்கும். நில மீட்பு, வேலை வாய்ப்பு,சாதிய ஒழிப்பு, அபிவிருத்தி, அரசியல் தலைமைத்துவம் எல்லாவற்றையும் இயக்கம் பார்க்கும் என்று இருந்துவிட்டால்,இயக்கம் இல்லாதபோது இவை எல்லாம் எப்படி நடந்து முடியப்போகின்றது என்பதைப் பற்றி சிந்திக்கவே இல்லை. ஒருவேளை அப்போது இப்படி சிந்தித்தால் அது ஈழத்துக்கு எதிரான சிந்தனை என்றவகையில் தமிழ்த் தேசியத்துக்கு துரோகமாக பார்க்கப்பட்டு இருக்கும் என்ற அச்சங்களும் இருந்திருக்கும்.
இப்படி தமிழர்கள் துரோகி என்ற பெயருக்குப் பயந்தும்,தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது என்று அஞ்சியும் பாவம் சிந்திக்கவே மறந்துவிட்டார்கள்.ஆயுதம் ஏந்தியவர்களே எல்லாமுமாக இருப்பார்கள் என்று நம்பியிருந்த தமிழ் இனம் இப்போது எல்லாவற்றையும் இழந்தவர்களாக இருக்கின்றார்கள்.
இலங்கையில் கொஞ்சம், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் கொஞ்சமாக ஈழத் தமிழர்கள் சிதறி வாழ்கின்றார்கள். 74 விகித பெரும்பான்மை சிங்கள மக்களும் 12 விகிதமான தாமும் சமத்துவமாக வாழும் உரிமைகள் வேண்டுமென போராடிய தமிழர்கள், இன்று வாழ்ந்த இடத்தைத் தாருங்கள் என்றும், வேலை தாருங்கள் என்றும், சிறைகளிலிருந்து விடுதலை செய்யுங்கள் என்றும்,காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
அரசியல் உரிமையும்,தனி நாடும் கேட்ட தமிழ் மக்களின் வரலாறு இப்படி வலிமை இழந்துவிட்டதா? என்று எண்ணிப்பார்க்கும்போது சகித்துக்கொள்ளமுடியவில்லை.தமிழருக்கு பூர்வீகமான வாழ்விடம் இருக்கின்றது. அரசியல் உரிமைக்கான பாரம்பரியம் இலங்கை வரலாற்றில் இருக்கின்றது.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் பொருளதார பலம் என்ற பெரும் பணபலம் இருக்கின்றது. தமிழர்கள் ஒருங்கிணைக்கப்பட்டால், ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால்,பெரும் பொருளாதார பலத்துடன் தலை நிமிர்ந்து எழுச்சி கொண்டு இலங்கை மண்ணில் வாழமுடியும்.
இத்தனை இருந்தும் இலங்கையில் தமிழர்கள் அரசியல் அநாதரவாக இருப்பதற்கும், பொருளாதார அபிவிருத்தியடையாமல் இருப்பதற்கும்,கௌரவமாக வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாமல் இருப்பதற்கும் என்ன காரணம் என்பதை ஒவ்வொரு தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கை தமிழருக்கு பல பிழையீனங்கள் இருந்தாலும் பிரதானமான பிழையீனமானது தமக்குள் ஒற்றுமையில்லை. ஒற்றுமைப்படுவதற்கான பொறிமுறையில்லை. இலங்கையில் பன்சாலைகள் சிங்கள மக்களையும், கிறிஸ்தவ தேவாலயங்கள் கிறிஸ்துவ மக்களையும், பள்ளிவாசல்கள் இஸ்லாமியர்களையும் வழி நடத்துகின்றன. பொது தேவைக்காக ஒற்றுமையாக இருப்பதன் அவசியத்தை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போதிக்கின்றன.
அந்த மதங்கள் வழிகாட்டுகின்றன. தமிழர்களிடம் அப்படி ஒரு இணக்கப்பாடு இல்லை. அல்லது பொதுவான மையப்பகுதி இல்லை. மனம்போன போக்கிலும், கால் போன போக்கிலுமே தமிழர்களின் பயணம் போகின்றது. யார் தலைமை என்பதையும், அவன் என்ன சாதி என்பதையும், அவன் எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவன் என்பதையும்,அவன் கூறுகின்ற கருத்துக் குறித்த ஆயிரம் வியாக்கியானத்தையும் கொண்டுமே ஆராய்கின்ற நிலைமை இன்றுள்ளது. உலகமே ஒன்றோடு ஒன்று சேர்ந்து வாழ்தலை புரிந்து கொண்டபோதும், தமிழன் தனித்தே வாழ்ந்து சாகும் அறிவு மிகுந்தவன்.
யுத்தத்திற்குப் பிறகு மீண்டும் தலைதூக்கியிருக்கும் சாதியமானது இப்போது 50 ஆண்டுகள் தமிழரின் சிந்தனைகளை பின்னோக்கி இழுத்துவிட்டுள்ளது. எந்தளவுக்கு என்றால், கோயில்களைசாதிகளின் அடிப்படையில் பிரித்துக்கொண்டு வழிபடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் காணிகளை விற்பனை செய்வதற்கும் ‘எந்தச் சாதி’ என்று கேட்டு விற்பனை செய்யும் கேவலமான மனோநிலை தோற்றம் பெற்றுவருகின்றது.
இப்போது வடக்கு கிழக்கு மாகாண மக்களும் தாம் இரண்டு மாகாண மக்களாக இருப்பதையே விரும்புகின்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தாம் நடைமுறைச்சாத்தியமாக தமிழர் பிரச்சினையை அணுக முற்படுகின்றபோதும், வடக்கு மாகாண தமிழர்கள்,தீவிரமான போக்குடனும்,மீண்டுமொரு ஆயுத வன்முறைக்கும் தாம் தயாராக இருப்பதுபோலவும்,சர்வதேசத்தை அழைத்துவந்து சிங்களவனின் காதைத்திருகி முதலில் தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அசாத்தியமான அணுகுமுறை மயக்கத்திற்குள் இருப்பதாகவும் விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
வடக்குத் தலைமைகளின் நடைமுறைச்சாத்தியமற்ற தீவிர நிலைப்பாடுகளுக்கு அதிகமாக பலியிடப்பட்டவர்கள் கிழக்கு மாகாண தமிழர்களே என்பதை கிழக்கில் வெளிப்படையாகவே விமர்சிக்கின்ற நிலைமை இன்று தோற்றம் பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையற்ற சூழலில் இலங்கையில் தமிழர்கள் தமக்கிடையேயான அனைத்து பிரிவினைகளையும், வேறுபாடுகளையும் தூரத்தில் போட்டுவிட்டு,’நாம் தமிழர்’ என்றும்,’நாம் ஒற்றுமைப்படுவது காலத்தின் அவசியம்’ என்றும் சிந்திக்க வேண்டும். நாம் ஒற்றுமைப்படாவிட்டால் நம்மைப் பிரித்து ஆளும் தந்திரோபாயத்துடன் காய் நகர்த்திக்கொண்டு இருக்கும் சிங்கள அரசுகளுக்கு தமது வேலை மிக இலகுவாகிவிடும்.
தமிழ்மக்கள் தமது பலம் எது, பலகீனம் எது என்பதை சிந்திக்க வேண்டிய இந்தத் தருணத்தையும் தவறவிடுவார்களாக இருந்தால்,கொலைகள் நடக்காமலும், இரத்தம் சிந்தப்படாமலும் தமிழ் இனத்தின் வலிமை இல்லாது செய்யப்படலாம். இனமானத்துடன் தமிழன் வாழ வேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனையின் கூர்முனை எதிரிகளால் முறிக்கப்படலாம்.

-ஈழத்துக் கதிரவன்-
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila