காலங்கள் இறைவனால் இசைக்கப்படுகின்ற இராகங்கள் என்றார் கவியரசு கண்ணதாசன்.
காலம் தான் அனைத்திற்கும் காரணம். மனித வாழ்வில் ஏற்படக்கூடிய அத்தனை ஏற்ற இறக்கங்களையும் காலமே தந்து போகிறது.
மகிந்த ராஜபக்ச இப்போது ஜனாதிபதியில்லை. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன மகிந்தவுக்கு பயந்ததுண்டு.
ஆனால், இப்போது மைத்திரிக்கு மகிந்த பயம் கொள்வதாக நிலைமை மாறிவிட்டது. மகிந்தவின் ஆட்சியில் விமல் வீரவன்ச துள்ளிக் குதித்தார். இன்று சிறையில் உண்ணாவிரதம் இருந்து உடல் நலப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளாராம்.
அவை அனைத்தும் காலத்தின் அசைவில் நடப்பவை. இது தவிர காலத்தின் அசைவில் பருவகாலம் என்பதும் உண்டு. இது காலத்துக்குள்ளான காலத்தின் வகைப்படுத்தல்.
கோடைகாலம், மாரிகாலம், பனிபெய்யும் காலம் இவ்வாறாக காலமும் தனக்கு வகுக்கப்பட்ட ஒழுங்கமைவில் சுற்றி வருகின்றது.
அந்தந்தக் காலம் சுற்றும் போது தான் இயற்கையும் தனது பணியை செய்யும்.
பனங்கிழங்கு மாரிகாலத்தில் கிடைப்பது இல்லை மா, பலா மரங்கள் உரிய கால ஒழுங்கிலேயே காய்த்துப் பழுக்கும்.
பறவைகள் கால ஒழுங்கில் தங்கள் இடங்களை மாற்றிக்கொள்ளும். விவசாயிகள் காலத்தின் அசைவிற்கு ஏற்ப விவசாய உற்பத்திகளை மேற்கொள்வர்.
கடலிலும் காலத்தின் சுழற்சி தன் பணியைச் செய்யும். பருவ காலமாற்றத்திற்கு ஏற்றாற் போல, மீன் இனங்கள் வந்து போகும். அதற்கு ஏற்றால் போல் கடல் தொழிலாளர்கள் தங்கள் தொழில் யுத்தியை மாற்றியமைப்பர்.
நண்டு வலையில் சூடை மீன் அகப்படாது, இறால் வலையில் சுறாவுக்கு இடமில்லை.
இப்படியாக பருவகால நகர்வு தனது கடமையை ஒழுங்கு சீராக செய்து வரும்.
சிலவேளை காலத்திற்கும் காலம் பிழைப்பதுண்டு. அவ்வாறான நிலைமை இயற்கையின் சீற்றமாக மாறி விடும்.
இது அழிவைத் தரும். ஆகையால் தான் காலத்தை பக்குவமாக கடக்க வேண்டும்.
கூடவே பருவ காலங்களில் கிடைக்கக் கூடிய பழங்கள், கிழங்கு வகைகள் , தானியங்கள் போன்றவற்றை உண்ணப்பழகிக் கொள்வது காலத்தோடு இசைந்து வாழ்வதற்கு பெருந்துணை புரிவதாகும்.
வற்றாளைக் கிழங்கு, இராசவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு மா, பலா இவை பருவகாலத்தின் படைப்புக்கள். மனிதர்களும் ஏனைய ஜீவராசிகளும் கால மாற்றத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இவற்றை உண்பது அவசியம்.
எனினும் இவை பற்றியயல்லாம் நாம் கவனம் செலுத்துவதில்லை. இதனால் தான் எங்கள் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகிறது.
இவை எல்லாம் காலம் பற்றிக்கூறுவதற்கானது. ஐயா! தாங்கள் இதற்கு இட்ட தலையங்கமும் கூறுகின்ற கருத்தும் பொருத்தமாகத் தெரியவில்லையே என்று நீங்கள் முணுமுணுப்பதும் புரிகிறது.
அட, இப்போது இலங்கையில் போராட்ட காலம். எங்கு பார்த்தாலும் போராட்டம். ஒரு போராட்டம் ஆரம்பித்து விட்டால் அதன் வழி போராட்டங்கள் விஸ்வரூபம் எடுப்பது இயல்பு. அதற்குரிய காலம் இதுபோலும். எப்போது இந்தப் போராட்டங்கள் முடிவுறும் என்றால், அதற்கும் காலமாற்றம் தான் தேவை என்று கூறுவதே பொருத்தமாகும்.