அரச உத்தியோகத்தை பூர்வ புண்ணியமாக கருதுங்கள்


கோழி மேய்க்கின்ற வேலையாக இருந்தாலும் கொர்ணமேந்து வேலையாக இருக்க வேண்டும் என்பது தமிழில் இருக்கக்கூடிய ஒரு பழமொழி.

இப்பழமொழியின் பொருள்; அரச உத்தியோகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
இன்றுவரை இப்பழமொழியின் தாக்கம் நம் மத்தியில் இருக்கவே செய்கிறது.

அரச உத்தியோகத்துக்கு இத்துணை உயர்வை தமிழ் மக்கள் கொடுக்கக்காரணம் என்ன என்ற கேள்வி எழும் போதெல்லாம்,

அரச உத்தியோகத்தில் ஒரு நிரந்தரத் தன்மை,  நிர்ணயிக்கப்பட்ட திகதியில் கிடைக்கக்கூடிய சம்பளம், சமூக அந்தஸ்து, ஓய்வுக்குப் பின்பு கிடைக்கக்கூடிய பென்சன், பென்சன் எடுப்பவர் உயிரிழந்தாலும் அவரின் பென்சன் அவரது குடும்பத்துக்கு கிடைக்கக்கூடியதான ஏற்பாடுகள் என்பன காரணமாக அரச உத்தியோகத்துக்கு நம் மக்கள் முதன்மை கொடுத்தனர் எனலாம். 

மற்றும் இவை தவிர விடுமுறைகள், இதர சலுகைகள், கடுமையான மேற்பார்வையின்மை போன்றவையும் அரச உத்தியோகத்தின்பால் மக்களைத் திசை திருப்பியதெனலாம்.

எதுவாயினும் அரச உத்தியோகம் கிடைப்பதென்பது நாம் செய்த பூர்வ புண்ணியம் என்று நினைக்க வேண்டும்.

இந்த மனித வாழ்வில் இறைவன் நமக்குத் தந்த இந்தக் கொடைக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பது எங்களொருவரினதும் கடமையாகும்.

அவ்வாறு நன்றியுடையவர்களாக இருப்பதென்பது நமது கடமையை, நேர்மையாக, ஒழுங்காக, கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கக்கூடியதாகச் செய்வதாகவே இருக்கும்.

எனினும் அரச உத்தியோகம் புரிபவர்களில் ஒரு பகுதியினர் தங்கள் கடமைகளை, பொறுப்புக்களை மறந்து சும்மா இருப்பதில் சுகம் காண்கின்றனர்.

இவர்களால் ஏழை மக்கள் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். நேரம், பணம் என்பவற்றை விரயமாக்கி மக்களை அலைய வைப்பதென்பது மிகப்பெரும் கொடுமையானது. 

நான் நினைத்தால்தான் நடக்கும் என்ற கர்வம் அழிவைத் தரும். ஓர் அரச உத்தியோகத்தர் தனது கடமையைச் செய்துவிட்டு ஓய்வாக இருப்பதில் நியாயம் இருக்கலாம்.

ஆனால் செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் கதையளப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. அது கடவுளைக் கோபம் கொள்ள வைக்கும்.

அரச உத்தியோகத்தர் சிலரின் அசமந்தப் போக்கு, எதையும் எதிர்க்கும் மனோநிலை, சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனை மருந்துக்கும் இல்லாத தன்மை போன்றவை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய நிலைமைகளை சுட்டிக்காட்டும் வகையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்கள்; அரச அதிகாரிகள், பணியாளர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய விருப்பமற்றவர்களாக இருக்கின்றனர் எனத் தனது மனக்கவலையைப் பதிவு செய்துள்ளார்.

தான் அறிந்த வகையிலும் பொதுமக்கள் அவருக்குக் கொடுத்த தகவல்களின்படியும் அவர் மேற்போந்த கருத்தை வெளியிட்டுள்ளார். 

அரச பணியில் அசமந்தம் காட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டிருக்கக்கூடிய யாழ்.அரச அதிபர்,

அரச அதிகாரிகளும் பணியாளர்களும் மக்களுக்குச் சேவையாற்ற முன்வர வேண்டும் எனப் பெருந்தன்மையாகக் கேட்டிருப்பது குறித்து அனைவரும் கவனம் செலுத்தி, பணி புரியும் காலத்தில் அது நமக்கு இறைவன் தந்த கொடை என்று நினைத்து இன்முகத்தோடு மக்கள் பணி செய்ய வேண்டும்.
இதைச் செய்யும் போது இறைவன் நிச்சயம் வெகுமதி தருவான். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila