மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்மீது போடப்பட்டுள்ள குண்டாஸைக் கண்டித்து, இன்று திரைக்கலைஞர்கள் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இந்தச் சந்திப்பில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம், பாலாஜி சக்திவேல், கெளதமன், பிரம்மா, கமலகண்ணன், பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கெளதமன் : ”தமிழகத்தின் ஆட்சி இப்போது மத்திய உளவுத்துறையின் வழிக்காட்டலின்படிதான் நடக்கிறது. அவர்கள் யாரைக் கைதுசெய்யச் சொல்கிறார்களோ, அவர்களைக் கைதுசெய்கிறது. மத்திய பி.ஜே.பி அரசுக்கு யாரெல்லாம் அசெளகர்யமாக இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் முடக்குவதுதான் மத்திய அரசின் நோக்கம். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, திருமுருகன்மீது உள்ள அனைத்து வழக்குகளையும் ரத்துசெய்ய வேண்டும்.”
பிரம்மா: ”நீர்நிலைகள் அருகே இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அது, ஓர் அடிப்படை உரிமை. ஆனால், அந்த உரிமையைத் தமிழ்ச் சமூகத்துக்கு மறுக்கிறீர்கள். அதுகுறித்து கேள்வி எழுப்பினால், எங்களுக்குத் தேசப்பற்று இல்லை என்கிறீர்கள். இது எப்படி நியாயமாகும்?”
கமலக்கண்ணன்: ”2010-ம் ஆண்டுமுதல், மே 17 ஒருங்கிணைக்கும் நினைவேந்தல் கூட்டத்துக்குச் சென்றுவருகிறேன். இத்தனை ஆண்டுகளாக ஒருசிறு அசம்பாவிதமும் இல்லாமல்தான் அந்தக் கூட்டம் நடைபெற்றுவந்தது. திடீரென்று அந்த நினைவேந்தலுக்குத் தடைவிதிக்க வேண்டிய, ஒருங்கிணைத்தவர்கள்மீது குண்டாஸ்போட வேண்டிய காரணம் என்ன…? ஆளும் வர்க்கம், வரலாற்றை அழித்தொழிக்கும் வேலையைச் செய்துவருகிறது. அதன் ஒரு பகுதிதான், இந்தக் குண்டாஸ்.”
வெற்றிமாறன் : ”சாமான்யர்களிடம் சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பதே நல்லது அல்ல. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் சகிப்புத்தன்மை இன்மை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது, ஜனநாயகத்துக்கு அழகல்ல. ஆட்சியில் இருப்பவர்கள் இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, அவர்கள் சொன்னால் கேட்க வேண்டும்; இல்லையென்றால், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இது, எப்படி ஜனநாயகம் ஆகும்.”
ராம் : ”கேள்வி கேட்பது தேசத் துரோகம் அல்ல… உண்மையில், அதுதான் தேசபக்தி. கேள்வி கேட்பவர்களால்தான் ஜனநாயகம் வலிமை அடையும். தார்மிகமான அந்த உரிமையைப் பறிப்பது என்பது ஜனநாயகத்தைக் கொல்லும்செயல். நான் எமர்ஜென்சி காலத்தில் வாழ்ந்தவன் இல்லை; ஆனால், நாம் எமர்ஜென்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோமோ என்று அச்சமாக இருக்கிறது. நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்காக மட்டும் திருமுருகன்மீது குண்டாஸ் போடப்படவில்லை. அவர் மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும் எதிர்த்தார். அதனால்தான் அவர்மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது.”
அமீர் : ”மாநிலச் சுயாட்சி கேட்ட மாநிலம் இது. ஆனால், இப்போது ஆட்சியாளர்கள் தங்கள் சுயநலனுக்காக மத்திய அரசை அண்டி, அவர்கள் சொல்வதை மட்டும் செய்துகொண்டிருக்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக யார் கேள்வி எழுப்புகிறார்களோ, அவர்கள்மீது வழக்குப் போடுகிறார்கள். திருமுருகன் கைதைமட்டும் கண்டித்து நான் இங்கு வரவில்லை. நாம் இங்கு வந்திருப்பதற்குக் காரணம், ‘நீங்கள் எதிர்த்துப் பேசினால் அச்சப்படுவோம் என்று மத்திய அரசு நினைக்கிறது. நாங்கள் வந்திருப்பது அந்த நினைப்பைப் பொய்யாக்கத்தான். எங்களை அச்சுறுத்தப் பார்க்கிறீர்கள். நாங்கள் அச்சப்படவில்லை என்று சொல்லத்தான்’. நீங்கள் கைதுசெய்வதன் மூலம் தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கீறீர்கள். நாளை திருமுருகனும் ஒரு தலைவராக எழுச்சியடைவார்.”
பாரதிராஜா : ”திருமுருகன், ‘சட்டத்தை மீறினார்’ என்கிறீர்கள். சரி, சட்டதை மீறி என்ன செய்தார்…? கொலை செய்தாரா… இல்லை, கட்சி தொடங்கி மக்களை ஏமாற்றினாரா…? அவர் மக்களுக்காகப் போராடினார்; இனப்படுகொலையைக் கண்டித்து கூட்டம் நடத்தினார்; ஜனநாயக முறையில் தன் எதிர்ப்பைக் காட்டினார். இதற்காகவா குண்டர் சட்டம்? மத்திய அரசை விமர்சித்தார் என்பதற்காகத்தானே இந்தப் பாய்ச்சல்… ஏன் மத்திய அரசை விமர்சிக்கவே கூடாதா…? தமிழர்களுக்கு இன உணர்வு மழுங்கிவிட்டது. அதனால்தான், வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் எங்களை ஆளப் பார்க்கிறார்கள். இனத்துக்காக உண்மையாகக் குரல் கொடுப்பவர்களைக் கைதுசெய்கிறார்கள்.”