இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் அது மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்படுவதன் மூலமாகவே சாத்தியப்பட முடியும்.
பொதுவில் பேரினவாத சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிரான பிரசாரங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கின்றன.
கூடவே சிங்கள ஊடகங்களும் இதற்குத் துணை போகின்றன. இதனால் உண்மைகள் மறைக்கப்பட்டு தமிழ் மக்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்ற பிரசாரமே தென்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனால் தமிழ் மக்கள் தொடர்பான சிங்கள மக்களின் நிலைப்பாடு எதிர்மறையாக அமைந்து போகிறது.
இவ்வாறு தமிழ் மக்களை சிங்களவர்களின் எதிரிகளாகக் காட்டப்படுகின்ற மிக மோசமான பிரசாரங்கள் முறியடிக்கப்படுவது மிகவும் அவசியமாகும்.
இந்தப் பிரசாரங்களை முறியடிப்பதாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொண்ட சிங்கள மக்களின் ஒத்துழைப்பை பெற்றாக வேண்டும்.
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பதைக் கூட இந்த நாட்டுக்கு எதிரான ஒரு நிகழ்வாக பேரினவாதிகள் தென்பகுதியில் காட்டி வருகின்றனர்.
வன்னி யுத்தத்தில் தாயை, தந்தையை, பிள்ளைகளை, கணவனை, மனைவியை, சொந்தங்களை இழந்தவர்கள் யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18இல் தங்கள் உறவுகளை நினைவுகூருகின்றனர்.
வன்னிக் கொடும் போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவது கூட தமக்கு எதிரான செயல் என்று சிங்கள மக்கள் நினைக்கும் அளவில் நிலைமை உள்ளதெனில்,
புரிந்துணர்வு - நிலைத்த சமாதானம் என்பன எப்போது சாத்தியமாவது என்பது கேள்விக்குரியது.
வவுனியாவில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனமொன்றில் பணி புரியும் தமிழ் இளைஞன் ஒருவன் வன்னிப் போரில் உயிரிழந்த தன் தாயின் நினைவாக மே 18 இல் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளான். இவரோடு அவரது சக நண்பர்கள் ஏழு பேர் சேர்ந்து கொண்டனர்.
வன்னிக் கொடும் போரில் உயிரிழந்த தன் தாயின் உருவப்படத்தை வைத்து தீபம் ஏற்றி நினைந்துருகிய சம்பவத்தை அறிந்த அந்தத் தனியார் நிறுவனம், நினைவேந்தல் செய்த எட்டுப் பேரையும் பணி நீக்கம் செய்துள்ளது.
வன்னிப் போரில் உயிரிழந்த தன் தாய்க்கு அஞ்சலி செலுத்துவது தவறானது என அந்த நிறுவனம் கருதுகிறதா? என்பதுதான் நம்மிடம் எழக்கூடிய கேள்வி.
பெற்ற தாயை நினைப்பதற்குக்கூட இந்த நாட்டில் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்றால் நீங்கள் மட்டும் தமிழர் தாயகத்தில் இறந்து போன படையினருக்கு நினைவுத் தூபி அமைப்பதும் அந்த நினைவுத் தூபிக்கு சிங் கள மக்கள் அஞ்சலி செலுத்துவதும் எந்த வகையில் நியாயமாகும்?
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிக்கொண்டு நாட்டில் சமாதானத்தை ஏற் படுத்துவோம் எனக் கூறுவதை விடுத்து தமிழ் மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவதே முதற்பணியாக இருக்க வேண்டும்.