பாகுபலி படம் பார்த்ததில் இருந்து கட்டப்பா பற்றிய எண்ணம்தான் நம் மனதில் நிழலாடுகிறது.
மகிழ்மதி அரசுக்கு அடிமை என்ற ஒரே காரணத்துக்காக அமரேந்திர பாகுபலியின் முதுகில் குத்துவது எந்தளவுக்கு நியாயமானது என்ற கேள்விதான் கட்டப்பாவை நம் ஆழ் மனம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறது.
கட்டப்பா நினைத்திருந்தால், பாகுபலியை கொல்வதற்கு மகிழ்மதியின் இராஜமாதா உத்தரவிட்ட செய்தியை பாகுபலியிடம் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருந்தால் மிகப்பெரிய அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும்.
இதுபற்றி நம் நண்பர்களுடன் கலந்துரையாடியபோது, அட அதைவிடு அமரேந்திர பாகுபலியின் மரணத்துக்குப் பின்னர் மகேந்திர பாகுபலியின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக வேனும் கட்டப்பா பல்வாள்தேவனின் அரசு மீது போர் தொடுக்கலாயினர்.
உண்மை தெரிந்த பின்னர்; நடந்தது அநீதி என்று அறிந்த பின்னரேனும் மகிழ்மதியின் இராஜமாதாவை பார்த்து சிவகாமி என்று பெயர் சொல்லும் அளவில் கட்டப்பா துணிந்திருந்தார்.
கட்டப்பாவின் அந்த துணிவுதான் இராஜமாதா சிவகாமியின் கண்களைத் திறந்தது. மகேந்திர பாகுபலியைக் காப்பாற்றியது.
ஆனால் கட்டப்பாவை விட மோசமான கட்டப்பாக்கள் நம் அரசியலில் இருக்கிறார்கள்.
நிலைமை இதுவாக இருக்கையில் ஒரு கற்பனைக் கதையின் பாத்திரத்தோடு பயணிப்பது அவசியமற்றது என்றார் என் நண்பர்.
கற்பனையயன்றாலும் அந்தக் கதைக்குள் வரலாறு இருக்கிறது; துரோகம் இருக்கிறது; மக்களின் மனங்களில் இருக்கக்கூடிய மன்னன் வதைபடுவது தெரிகிறது.
அப்படியானால் ஈழத்து மண்ணில் வாழக் கூடிய ஒரு தமிழன் பாகுபலி பேசும் பாத்திரங்கள் பற்றி வெறுமையான நினைப்புடன் இருக்க முடியுமா என்ன? என்ற என் கேள்விக்கு அவனால் எந்தப் பதிலும் அளிக்க முடியவில்லை.
ஆம், மக்களின் விருப்பங்கள் பல இடங்களில் நிறைவேறாமல் போகிறது.
கட்டப்பாக்களின் உதவியோடு கபடத்தனமாக அதிகாரங்கள் கைப்பற்றப்படுகின்றன.
இருந்தும் மக்கள், மன்னன் இறந்து விட்டான் என்று கூறுவதைக் கேட்டுவிட்டு பேசாமல் இருப்பதைத் தவிர வேறு எதனையும் செய்ய முடியாதவர்களாக உள்ளனர்.
அப்படியானால் முதலில் கட்டப்பாக்கள் திருந்த வேண்டும். அந்தத் திருத்தம் ஆட்சித் தலைமையில் இருக்கக்கூடியவர்களைத் திருத்த வேண்டும்.
இவை நடக்காவிட்டால் எதுவும் இல்லை என்றாகிவிடும். இந்த நிலைமைதான் எங்கள் தமிழினத்திலும் உள்ளது.
தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் ஆட்சித் தலைமைக்கு விசுவாசமான அடிமைகளாக இருந்தால், மக்கள் என்ன செய்ய முடியும்.
வதைபடுவது, உதைபடுவது, என்றும் எப்போதும் அடிமைகள் என்ற பேரினவாதத்தின் உறுமலுக்குள் மெளனிகளாக இருப்பது இவை தான் நிலைமையாகிவிடும்.
இந்நிலைமை மாறவேண்டுமாயின் மக்களும் கட்டப்பாக்களும் விழித்து தெளிந்து கொள்வதுதான் ஒரே வழி.